அரசியல்

காஷ்மீரில் இந்திய படைக்கு எதிராக இளம்பெண்கள் போராட்டம்



காஷ்மீர் பிரச்சனை நாளுக்கு நாள் சிக்கலடைந்து வருகிறது. காஷ்மீரில் இடம்பெறும் மோதல்களால் சுமார் ஒரு லட்சம் வரையான பொதுமக்கள் இறந்துள்ளனர். 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் வாடுகிறார்கள்.

ஆயுத படைகளுக்கான விசேட சட்டம் உருவாக்கப்பட்டு போலீசுக்கும், ராணுவத்துக்கும் சிறப்பு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ராணுவமோ போலீசோ ஒருவரை கேள்விகள் இன்றி சுட்டுக்கொல்லவும், கைது செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீர் மக்கள் தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் வாழ்கின்றனர்.

காஷ்மீர் மக்களுக்கும் இந்திய இராணுவத்திற்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 1989ல் ஆயுத போராட்டம் ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் போராளிக்குழுக்கள் மட்டுமே இந்திய ராணுவத்துடன் போரிட்டன. ஆனால் 2003ம் ஆண்டுக்கு பின்னர் பெருமளவு பொதுமக்கள் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கு முன்னே நிற்கத்தொடங்கியுள்ளனர்.

2010ல் இந்திய படைகளுக்கு எதிராக போராடியவர்களில் அதிகமானவர்கள் தாய்மார்களும் பெண்களுமே இருந்ததை செய்திகளில் காணக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு இந்திய படைக்கு எதிராக போராடும் காஷ்மீர் பெண்களின் அளவு கூடிக்கொண்டே வந்துள்ளது.

இந்த வாரம் இடம்பெற்ற போராட்டங்களில் அதிகளவு பாடசாலை, கல்லூரி மாணவிகள் பங்குகொண்டுள்ளனர்.
இந்திய படைகள் மீது இந்த இளம்பெண்கள் கல்வீசி தாக்குதல் நடத்திவருகின்றனர்.



இராணுவத்தின் பதில் தாக்குதலில் பல மாணவிகள் காயமடைந்துள்ளனர். ஐந்து நாட்கள் கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனாலும் மாணவிகளின் தாக்குதல்கள் குறையவில்லை. தாக்குதல் நடத்தும் பெண்களுக்கு எதிராக பெண்கள் படைபிரிவு ஒன்றை காஷ்மீருக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்த போராட்டங்கள் குறித்து செய்திகள் வெளியாகிவந்தன. தற்போது இந்திய அரசாங்கம் காஷ்மீரின் இணைய பாவனையை துண்டித்துள்ளது.

தனி நாடாக இருந்த காஷ்மீரின் மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவும் மூன்றில் ஒரு பங்கை பாகிஸ்தானும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன.

உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லாத, மத பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்ற நாடான பாகிஸ்தான் இந்த காஷ்மீர் பிரச்சனையை வைத்துக்கொண்டுதான் உள்ளூரில் அரசியல் செய்து வருகிறது. காஷ்மீர் இளைஞர்களுக்கு போர் பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து இந்தியாவுடன் போரிட வைக்கிறது பாகிஸ்தான்.

இந்தியாவும் மக்களது உணர்வுகளை புரிந்து செயல்படாமல் ஆயுத அடக்குமுறையால் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்கிறது. ஆனால் அது மேலும் போராட்டத்தை வளர்த்துவிட்டுள்ளது. சிறிதாக ஆரம்பித்த போராட்டம், 1989ல் ஆயுத குழுக்களின் கைகளுக்கு போனது. இப்போது பாடசாலை மாணவிகளின் கைகளுக்கு வந்துள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகவே உள்ளது. இந்திய படைகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி தாங்க முடியாமல் வெடித்துக்கிளம்பியுள்ள மாணவிகள் இப்போது இந்திய படைகளை நோக்கி கற்களால் தாக்கத்தொடங்கியுள்ளனர்.

இந்த மாணவிகளின் கல் வீச்சு துப்பாக்கி தாக்குதலைவிட வீரியமானது என்பதை மோடி அரசாங்கம் உணர்ந்ததாக தெரியவில்லை.

“போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் அவரது கையிலிருந்த பந்தை கொண்டு பாதுகாப்புப் படையினர் வாகனத்தை தாக்கியது காஷ்மீர் மக்களிடையே வளர்ந்துள்ள கோபத்தை காட்டுகிறது” என்று காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களை கண்டபடி தாக்குவது, சந்தேகத்தில் விசாரணையில்லாமல் சுட்டுக்கொல்வது, போலி என்கவுண்டர்கள், மக்கள் விரோத சட்டங்களின் அடிப்படையில் கைது செய்வது தண்டனை கொடுப்பது, பாலியல் தாக்குதல்கள் போன்றவற்றால் இந்திய படைகள் மீது உள்ளூர் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர்.

ஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக்கொண்டது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் . இம்மாநிலத்தில் பேசப்படும் 12க்கும் அதிகமான மொழிகளில் காஷ்மீரி, டோக்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகிய மொழிகளை பெரும்பாலான மக்கள் பேசுகின்றனர்.

காஷ்மீரில் இஸ்லாமியர்கள் 70 சதவீதமும், இந்துக்கள் 25 சதவீதமும் உள்ளனர். சீக்கியர்களும் இங்குள்ளனர். லடாக் பகுதியில் பவுத்தர்கள் வாழ்கின்றார்கள்.

ஆங்கிலேயர்கள் இந்திய கண்டத்தை விட்டு வெளியேறிய போது இந்து அரசரான ஹரிசிங் காஷ்மீரை முதலில் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள முன்வந்தார். காஷ்மீர் இணைக்கப்பட்டாலும் ஹரிசிங் தொடர்ந்தும் அரசராக அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் ஷேக் அப்துல்லா காஷ்மீர் சுதந்திரநாடாக இருக்கவேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைய வேண்டும் என  நிலையெடுத்தார். அப்துல்லாவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்தது. அந்த சமயத்தில் பாகிஸ்தானிய படைகள் காஷ்மீரில் புகுந்தன. எனவே மன்னர் ஹரிசிங் வேறுவழியின்றி 26.10.1947ல் நிபந்தனையுடன் இந்தியாவுடன் இணைவதாக சாசனத்தில் கையெழுத்திட்டார். இணைப்பு சமயத்தில் இந்தியா காஷ்மீருக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

அந்த வாக்குறுதிகள் இந்திய சட்டத்தால் (370 பிரிவு) ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1.காஷ்மீர் முதல்வர் பிரதமரென அழைக்கப்படுவார் .
2.இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெற்றபின்னரே அமுலாக்க முடியும்.
3. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மை, பண்பாடு பாதுகாக்கப்படும்.
4.அமைதி திரும்பியவுடன் காஷ்மீர் மக்களிடம் தனிநாடாக இருப்பதா? இந்தியாவுடன் சேர்வதா? பாகிஸ்தானுடன் சேர்வதா? என்று கருத்துக்கணிப்பு நடத்தி நடைமுறைப்படுத்தப்படும்

இதுபோன்ற முக்கிய கோரிக்கைகளை இந்தியா ஒப்பந்தம் மூலம் ஏற்றுக்கொண்டது.
ஆனால் பின்னர் இந்திய ஆட்சியாளர்கள் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை.

அமைதி திரும்பியுள்ள நிலையில் ஒப்பந்தப்படி கருத்துகணிப்பு நடத்தவேண்டும் என ஷேக் அப்துல்லா தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு பதிலடியாக நேரு அரசாங்கத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

ஒப்பந்தம் தூக்கி வீசப்பட்டு, 17.11.1956ல் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றப்பட்டது.

அத்தோடு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட உரிமைகளும் படிப்படியாக பறிக்கப்பட்டன.

இதன்பின்னர் போராட்டங்கள் தீவிரமடைந்தன. 1989ல் ஆயுத குழு உருவானது.

பாகிஸ்தான் தனது பங்குக்கு மதவாதத்தை விதைத்து ஆயுத போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கி வருகிறது.
இந்தியா படைகளைக்கொண்டு போராளிகள் மீது தாக்குதல் நடத்தி காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்கிறது.

இரு நாடுகளின் அதிகார - ஆக்கிரமிப்பு போட்டியின் நடுவே சிக்கிக்கொண்டுள்ள காஷ்மீர் மக்கள் தமது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.

- என்.ஜீவேந்திரன்





0 comments:

Post a Comment

Powered by Blogger.