அரசியல்

ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் மகிந்த



இலங்கையின் சிங்கள ராஜாவாக இருந்த மகிந்த எதிர்பாராத வகையில் இன்று ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் இருக்கிறார். சாகும்வரை அவர் பதவியில் இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்திருந்தன. இரண்டுமுறைக்கு மேல் அதிபராக இருக்க அரசியல் யாப்பும் மாற்றப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகளை தோற்கடித்து வரலாற்றில் மட்டுமல்ல சிங்கள பவுத்த மக்களின் புனித நூலான மகாவம்சத்திலும் இடம்பெற்றிருந்தார்.

ஆனால் சந்திரிகா பண்டாரநாயக்க போன்றவர்களின் திட்டத்தினாலும் தமிழ் முஸ்லீம் மக்கள் புறக்கணித்ததாலும் எதிர்பாராத வகையில் மகிந்த ஆட்சியை இழந்தார்.

ஆனாலும் மகிந்தவுக்கு சிங்கள மக்களிடையே உள்ள செல்வாக்கு அப்படியே இருக்கிறது. புதிய அரசாங்கத்தின் மீது எல்லா தரப்பிலும் அதிருப்தி தோன்றியுள்ளது. குறிப்பாக சிங்கள மக்களிடையே புதிய அரசாங்கத்தின் செல்வாக்கு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. மகிந்த தரப்பு புதிய அரசாங்கம் குறித்து சிங்கள மக்களிடையே எடுத்து செல்லும் பிரச்சாரம் நன்றாக ஈடுபட்டுள்ளது என்றே தெரிகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க மகிந்த பெரும் முயற்சி செய்து வருகிறார். இதோ இந்த ஆட்சி கவிழப்போகிறது என்று நம்பிக்கையுடன் பேசுகிறார். மேடையில் அவர் தோன்றும்போது சிங்கள மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். உண்மையில் புதிய அரசாங்கம் மகிந்தவை பார்த்து பெரிதும் பயந்துபோயுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிடுமோ என்ற பயத்துடனேயே கழிவதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.

''இழந்த அதிகாரத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கும், சட்டரீதியாக மக்களால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தைக் குழப்புவதற்கும் சிலர் சதி செய்து வருகின்றனர். இவ்வாறான சுயலாப அரசியல் நோக்கங்களினால் நாடு மீதொட்டமுல்ல அனர்த்தம் போன்ற பல்வேறு ஆபத்துக்களை எதிர்கொள்ள நேரிடும்'' என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

''நீங்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படும்'' என மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அண்மையில் கூறியிருந்தார்.

''அரசாங்கத்திற்கு தெரியாமல்தான் அரசாங்கம் கவிழ்க்கப்படுகின்றது. ஆகவே நீங்கள் எதிர்பாராத விதத்தில் எதிர்பாராத நேரத்தில் அரசாங்கம் மாறும். ஜனாதிபதி தேர்தல் மூலம் பிரதமர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலை நடத்தி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்டமை முன் எப்போதும் இல்லாத புதியவிடயம். அதுபோல நினைக்காத ஒன்று நடைபெறும். அதனை நாம் நடத்திக்காட்டுவோம்'' என அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை அண்மையில் சந்தித்து பேசிய தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா ''தற்போது பதவியிலுள்ள இந்த அரசாங்கத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்த மகிந்த தரப்பினர் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அது குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம்'' என்று அங்கு மக்களிடம் கூறியிருந்தார்.

இலங்கை அரசியலில் தற்போது எல்லா தரப்பினராலும் பேசப்படும் நபராக மகிந்த ராஜபக்ச இருக்கிறார். வீழ்ந்துகிடக்கும் இலங்கை நாட்டை மீண்டும் மீட்டு எடுக்க மகிந்தவால்தான் முடியும் என்ற எண்ணத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.



0 comments:

Post a Comment

Powered by Blogger.