இந்தியா

நடிகர்களுக்கு முன் உதாரணமான சினேகா



வறட்சி, வங்கி கடன் என பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி துன்பப்படும் விவசாயிகள் குறித்து பலரும் மீடியாக்களில் பேசி வருகிறார்கள்.
அரசியல்வாதிகள் வழமைபோல பணத்தை பதுக்குவதிலும் பதவியை தக்கவைப்பதிலும் பிஸியாக இருக்கிறார்கள்.

திரைப்படங்களில் விவசாயிகளின் தொண்டனாக காட்டிக்கொள்ளும் நடிகர்கள் 30 அல்லது 40 கோடி சம்பளத்தை வாங்கிக்கொண்டு அடுத்த படத்தில் அதிகம் சம்பளம் வாங்குவது எப்படி என்ற சிந்தனையில் பிஸியாகி விடுகிறார்கள்.

குறிப்பாக பெரிய சம்பளம் வாங்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற எல்லாருமே விவசாயிகள் பற்றி அறிக்கை விடுவார்களே தவிர எந்த உதவியும் தமது சொந்த பணத்தில் செய்யமாட்டார்கள். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகள்  விவசாயிகள் என்ற ஒரு கூட்டம் இந்த நாட்டில் வாழ்கிறது என்று தெரியாதவர்கள் போலவே நடந்துகொள்கிறார்கள்.

ஆனால் இந்த பெரிய நடிகர்கள் நடிகைகள் கன்னத்தில் அடித்தது போல சினேகா டெல்லியில் போராடும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம்  நிதியுதவி கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட 10 விவசாய குடும்பங்களை தேர்ந்தெடுத்து 2 லட்சம் உதவி செய்துள்ளார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 41 நாட்களாக டெல்லியில் வீதியில் கிடந்தது போராடினார்கள். தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்திய இந்த போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

விஷால் உள்ளிட்ட நடிகர்களும், நடிகர் சங்கமும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக மீடியாக்களில் சொன்னார்கள். ஆனால் யாருமே ஒரு ரூபாய் கூட தமது பணத்திலிருந்து துன்பப்படும் விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. ஆனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாத சினேகாவும் கணவர் பிரசன்னாவும் மனமுவந்து விவசாயிகளில் பிரச்னையை உணர்ந்து இந்த உதவியை செய்திருக்கிறார்கள்.

''விவசாயிகள் படுகின்ற துன்பங்களை பார்க்க முடியாமல்தான் நாங்கள் இந்த உதவியை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தோம். எங்களுக்கு சோறு போடுகின்ற விவசாயிகள் துன்பப்படும்போது நாங்கள் மட்டும் நிம்மதியாக இருக்க முடியுமா? விவசாயிகள் அழிந்து போனால் எமது பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளும் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

எனவே எம்மால் முடிந்த உதவியை நாங்கள் செய்துள்ளோம். ஆனால் பெரிய நடிகர்கள் பெரிய அளவில் உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று சினேகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த உதவி பற்றி பிரசன்னா கூறுகையில், ''டெல்லியில் விவசாயிகள் போராடி வருவதும், கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் வேதனை அளிக்கிறது. எங்களால் பெரிய அளவிலான உதவிகள் செய்ய முடியாவிட்டாலும், முடிந்த உதவியை செய்கிறோம். இது போன்று பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உதவும் வகையில் நடிகர் சங்கம் கண்டிப்பாக பணியாற்றும் என எதிர்பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சினேகா பிரசன்னாவின் இந்த உதவி குறித்து பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேபோல கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்க்கும் நடிகர்கள் மீது கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

0 comments:

Post a Comment

Powered by Blogger.