அரசியல்

தினகரன் கைதும் சசிகலா பேனர் அகற்றமும்



டெல்லியில் கைது செய்யப்பட்ட தினகரன் இன்று மதியம் 2 மணிக்கு டெல்லியிலுள்ள திசஜாரி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு ரூ 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நேற்று நள்ளிரவு (25.04.2017) டெல்லியில் தினகரன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இன்று தினகரன் சார்பில் பிணை மனு தாக்கல் செய்யப்படும் என தினகரனின் வழக்கறிஞர் வக்கீல் தெரிவித்துள்ளார்.
ஆனால் தரகர் சுகேஷ் உடனான  தொடர்பு உறுதி செய்யப்பட்டால், முதல் குற்றவாளியாக தினகரன் சேர்க்கப்படுவார். முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டால் தினகரன் மீது ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு கடந்த நான்கு நாட்களாக இடம்பெற்றிருந்தது. விசாரணையின் முடிவில், நேற்று தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகிய இருவரும் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்த காவல்நிலையத்தில் தடுத்துவைப்பட்டனர்.

இன்று அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்படவுள்ளனர். போலீசார் தினகரனிடம் மேலும் விசாரணை நடத்தவுள்ளதாக கோரினால் போலீஸ் காவலில் எடுக்கப்படுவார்கள்.

இடைத்தரகர் சுகேஷிடம் விசாரணை நடத்துவதற்காக ஏப்ரல் 28 வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் நேற்று, ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமாரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு தினகரன் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. எடப்பாடி - பன்னீர்செல்வம் அணிகள் பேச்சு நடத்த வாய்ப்பாக இந்த சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில், "தர்மயுத்தத்தின் வீரியம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சசிகலாவின் புகைப்படங்களை அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து உடனே அகற்றி அதன் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று விசுவாசத் தொண்டர்களின் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் இன்று காலையிலேயே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று இரு அணிகளின் இணைப்பு பற்றி பேச்சு நடத்தப்படும் என செய்திகள் கூறுகின்றன.

விவசாயிகள் பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை முதல் அரசு ஊழியர் வேலை நிறுத்தப் போராட்டம் வரை பல இன்னல்களால் தமிழகம் திண்டாடி வருகின்ற நிலையில் ஆளும் அதிமுக தமது உட்கட்சி பிரச்சனைகளில் கவனம் செலுத்தி வருவதை பலரும் கண்டனம் செய்து வருகிறார்கள்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் "இரு ஊழல் அணிகளையும்" இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் அதிமுக அரசை கண்டிப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (26.04.2017) அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘’தமிழக அரசில் உள்ள 64 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப்பெரும் போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள். "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்துப் பேசவில்லை என்றால் காலவரையறையற்ற போராட்டத்தில் குதிப்போம்” என்று அரசுக்கு நோட்டீஸ் அளித்தும், அரசு ஊழியர்களை அழைத்துப் பேசாமல் கட்சிப் பதவிகளையும், ஆட்சிப் பதவிகளையும் "இரு ஊழல் அணிகளையும்" இணைப்பதற்காக ஏலம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த அதிமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.