அரசியல்

இலங்கையின் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற முழு அடைப்பு



இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று முழு அடைப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் இந்த முழு அடைப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளன.

இரண்டு மாதங்களாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவில் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

முல்லைத்தீவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது வாழிடங்களை கேட்டு கேப்பாபுலவு மக்கள் 08.03.2017 முதல் போராடிவருகிறார்கள்.

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் நிரந்தர காணி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, கடந்த 22.03.2017 முதல் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கு கிழக்கில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மட்டக்களப்பில் இரண்டு மாதங்களுக்கு மேலாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு மக்கள் பல முனைகளிலும் போராடிவருகின்ற சூழலில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக இன்று முழு அடைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த முழு அடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவை வழங்கும் அதேவேளை, பேரவை அதனை எற்பாடு செய்யவில்லை என்று தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல இந்த முழு அடைப்புக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு வழங்குவதாக சுமந்திரன் கூறியிருந்தார். ஆனால் இந்த முழு அடைப்பு போராட்டத்தை தமது கட்சி ஏற்பாடு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று வடக்கு கிழக்கில் இடம்பெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு சகல தமிழ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆதரவு தெரிவிக்காது விட்டால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமென்பதால் எல்லா கட்சிகளுமே ஆதரவை அறிவித்துவிட்டன.

இதேவேளை முழு அடைப்பு போராட்டங்கள் சரியான போராட்ட வடிவமாக உள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. தமிழகத்திலும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்திருந்தது.

முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டால் மக்கள் தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டில் தொலைக்காட்சிக்கு முன்பு முடங்கி விடுவார்கள். அந்த நாள் ஒரு விடுமுறை நாள் போலவே அமைந்துவிடுகிறது.

எல்லா கட்சிகளும் ஒன்றாக இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும் இதனால் அரசாங்கத்திற்கு பெரிய அழுத்தங்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் முழு அடைப்பு போராட்டம் வடக்கு கிழக்கில் நடத்தப்பட்டுள்ளதால் அது ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றே தெரிகிறது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.