அரசியல்

தமிழக அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்த விவசாயிகள்



தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14ம் தேதி முதல் வறட்சி நிவாரணம் வழங்குதல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டம் நேற்று 41வது நாளாக  இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகளின் கோரிக்களை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார். இதையடுத்து போராட்டத்தை அடுத்த மாதம் 25ம் திகதி வரை ஒத்தி வைப்பதாக விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அய்யாக்கண்ணு ''எங்களது பிரச்னைக்கு இரண்டு பேரால் மட்டுமே தீர்வு தரமுடியும். ஒன்று மத்திய அரசின் நிதி அமைச்சர். அடுத்தது தமிழகத்தின் முதல்வர். அந்த வகையில் எங்களை சந்தித்த தமிழக முதல்வர் இந்த பிரச்னைக்கு தீர்வு தர இரண்டு வார அவகாசம் கேட்டார். நாங்கள் அவருக்கு ஒரு மாத கால அவகாசத்தை கொடுத்துள்ளோம். இந்த ஒரு மாத காலத்திற்குள் தீர்வு தராது விட்டால் நாங்கள் இதே டெல்லியில் மீண்டும் போராட்டத்தை தொடங்குவோம்'' என்று கூறியுள்ளார்.

விவசாயிகளை சந்தித்த முதல்வர் பழனிசாமி புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்ததாக செய்தியாளர்களிடம் 
கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்ததாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகைகளை சந்தித்து உரையாடிவரும் பிரதமர் மோடிக்கு, சாமியார்களது விழாக்களில் கலந்து சிறப்பிக்கும் பிரதமர் மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லாமல் உள்ளது என்று கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்காலிகமாக போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே பாஜகவின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசல் போராட்டக்காரர்களிடம் வாக்குறுதி கொடுத்து போராட்டத்தை நிறுத்திவிட்டு பின்னர் ஏமாற்றியிருந்தார். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக நெடுவாசல் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுக்காது என்று உறுதியளித்திருந்தார்.

ஆனால் கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான ஜெம் லாபரெட்டரீஸிற்கு நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்து தமிழகத்தை ஏமாற்றியது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதியை நம்பி விவசாயிகள் தமது டெல்லி போராட்டத்தை ஒருமாதகாலத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.