அரசியல்

இந்தியாவுக்கு இலங்கையில் அதிகரிக்கும் எதிர்ப்பு



இந்திய எதிர்ப்பு என்பது இலங்கையின் அரசியலில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. பெரும்பாலான சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே பார்க்கிறார்கள். சிங்கள மக்கள் வரலாற்று ரீதியாக இந்தியாவை ஆக்கிரமிப்பு நாடாகவே அடையாளம் காண்கிறார்கள்.

சிங்கள பவுத்த மக்களின் புனித நூலான மகாவம்சம் இந்தியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக எதிரிகளாக சித்தரிக்கிறது. இடதுசாரிக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் ஜேவிபி கட்சி கூட தனது அடிப்படை அரசியல் கோட்பாடுகளில் ஒன்றாக இந்திய எதிர்ப்பை வைத்துள்ளது.

இந்தியா புலிகளுக்கு எதிராக இலங்கையுடன் கூட்டு சேர்ந்தாலும், சீனாவை அண்டவிடாமல் இருப்பதற்காக உதவிகளை அள்ளிக்கொடுத்தாலும் இலங்கை ஒருபோதும் இந்தியாவை நண்பனாக பார்க்கப்போவதில்லை. தமது வரலாற்று எதிரியை சில சமயங்களில் அனுசரித்துப்போவார்களே தவிர நண்பனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்திய பொருட்களை விற்பது, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்வது போன்றவை சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.

இந்த நிலையில் மே மாதம் இந்திய பிரதமர் இலங்கை செல்லவுள்ளார். இலங்கையில் மே மாதம் 12-14 வரை நடக்கவுள்ள வெசாக் கொண்டாட்டங்களில் அவர் கலந்துகொள்ளவுள்ளார். புத்தர் ஏப்ரல் 10ம் திகதி பிறந்ததாக பவுத்தர்கள் நம்புகிறார்கள். இந்த தினத்தை வெசாக் பண்டிகை என்று பெரும் விழாவாக கொண்டாடுகிறார்கள்.

மோடியின் இந்த வருகையின்போது திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை, இந்தியாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஸ்ரீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

''இந்தியா எமது வரலாற்று ரீதியான எதிரி. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவது, நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு ஒப்பான செயல்'' என பிவிதுறு ஹெல உறுமய சிங்கள இனவாதக்கட்சியின்  கட்சியின் தலைவர் உதய கம்மன்பில  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ''வரலாற்று ரீதியாக இந்தியா இலங்கையின்எ எதிரி. மகாவம்சத்தை வாசித்தால் நமக்கு புரியும். 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் இந்தியா, இலங்கையை ஆக்கிரமித்த விதம், இலங்கை சுதந்திரத்திற்காக சண்டையிட்ட விதம் குறித்து மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ளது. எமது நாட்டை ஆக்கிரமிக்க முயற்சித்த நாடுதான் இந்தியா. ரணில் விக்ரமசிங்கவின் மாமனார் ஜெயவர்த்தன, எமது வரலாற்று எதிரியான இந்தியாவின் இராணுவத்தை இலங்கைக்கு கொண்டுவந்து மிகப்பெரிய அழிவினை ஏற்படுத்தினார்.

இப்போது மருமகன் ரணில், திருகோணமவை துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்க முயற்சிக்கின்றார் என்ற அபாய எச்சரிக்கையை விடுக்க விரும்புகின்றோம். ஸ்ரீலங்காவை தனது பிராந்தியமாக மாற்றியமைக்க இந்தியா முயற்சி செய்கிறது. திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கினால் அந்த முயற்சியை எம்மால் தடுக்கமுடியாமல் போகும்'' என்று சிங்கள மக்களிடம் அறைகூவல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ''குறுக்குவழி அரசியல் இலாபத்தை அடைய முயற்சிப்போரே பல்வேறு வதந்திகளைப் பரப்பிவருகின்றனர். பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். பிரதமர் நேற்று மாலை அவர்களை அழைத்து கலந்துரையாடினார். இந்த விடயத்தில் தவறான செய்திகளே மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டன'' என்று கூறியுள்ளார்.

எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட மாட்டாது என்று பிரதமர் ரணில் உறுதியாக கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.

''திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களின் முழுமையான கட்டுப்பாடு இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கப்படாது. இந்த விடயம் தொடர்பில் தவறான கருத்துக்களும் வதந்திகளும் பரப்பப்படுகின்றன'' என அமைச்சர் கபீர் ஹாசீம் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (25.04.2017) இந்தியா பயணமாகவுள்ளார்.
ரணில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

Powered by Blogger.