அரசியல்

தமிழகத்தில் பாஜக சித்துவிளையாட்டு - ஸ்டாலின்



"திராவிட உணர்வு ஊறிய தமிழக மண்ணில் பா.ஜ.க.வை வளர்க்கும் வீண் முயற்சிக்காக, அரசியல் சித்துவிளையாட்டுகளில் ஈடுபடாமல், இதுவரை அதிமுக அமைச்சர்களின் மீது நடத்தப்பட்டுள்ள ரெய்டுகள், அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் தயவு தாட்சயன்மின்றி ஊழல் ஒழிப்பு மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மத்திய அரசை கோரியுள்ளார்.

"தமிழக அரசின் நடவடிக்கைகளை முடக்க மத்திய அரசு, சிபிஐ வருமானவரித்துறை ஆகிய துறைகளை பயன்படுத்தி வருகிறது" என இன்று ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் தனது அறிக்கையில்  "”ஒருபக்கம் ஊழல் விசாரணை உறங்குகிறது. இன்னொரு பக்கம் ஊழல் விசாரணை துள்ளிக் குதித்து ஓடுகிறது. இந்த இரண்டிற்கும் இடையில் பிரிந்து சென்ற அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேருவதற்காக திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.
ஆகவே தமிழகத்தில் இப்போது அதிமுகவில் உள்ள ஒரு அணிக்கு எதிராக நடக்கும் “செலக்ட்டிவ் ரெய்டு” - “செலக்ட்டிவ் கைது” உள்ளிட்டவற்றின் பின்னனியிலும், இன்னொரு அணியின் ஊழலை தூசு படியவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும் மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் பா.ஜ.க.வின் கை மறைவாகக் கூட அல்ல- வெளிப்படையாகத் தெரிகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது போன்ற விவகாரங்களில் பிரதமர் தலையிட வேண்டும்.

அரசியல் சட்ட அமைப்புகளின் நேர்மைத்தன்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்றுவேன்” என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த பிரதமர் அவர்கள் “வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ” போன்ற அமைப்புகள் அரசியலுக்காக பா.ஜ.க.வால் பயன்படுத்தப்படுவதை தடுத்து, தமிழகத்தில் அரசியல் சட்டப்படியான நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் “ என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்டாலினின் அறிக்கைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்புத்தெரிவித்துள்ளார்.

"தமிழக அரசு முடக்கப்படுவதாக திமுக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. ஒரு கட்சியை அழிக்க நினைக்கும் திமுக மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக பிரச்னையை தூண்டுகிறது. எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்திலேயே அதிமுகவை அழிக்க நினைத்தது. தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடும். இதன் பிறகு மற்ற இரு கட்சிகளும் காணாமல் போய்விடும். டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியது தி.முக..,வின் ராஜதந்திர அரசியல்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.