இலங்கையில் தமிழர்களை ஏனைய இனத்தவர்கள் பிளவுபடுத்துகிறார்கள் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் பிளவுபடுத்துவது தமிழர்கள் தானே தவிர வேறு யாரும் அல்ல.
தமிழ் தேசியம் பேசும் தமிழ் தலைமைகள் குறிப்பாக வடக்கை மையமாக கொண்டு தமிழ் தேசியம் பேசுபவர்கள், உதட்டளவில் மட்டுமே முழு நாட்டிலும் உள்ள தமிழ் மக்களின் ஒற்றுமை குறித்து பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் செயலில் ஒற்றுமையை காட்டுவதில்லை.
இந்த விடயத்தில் முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் அவர்கள் பாடம் படிக்கவேண்டும்.
அண்மையில் தமிழ் முற்போக்கு கூட்டனியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் சகல தமிழ்க்கட்சிகளும் பிரதேசவாதம் இன்றி ஒன்றிணைய அழைப்பு விடுத்தார்.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு சாதகமான கருத்துக்களை வெளியிடாமல் மறைமுக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களின் பிரதிநிதிகள் நாங்களே என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வாழும் தமிழர்களை பிரதேச ரீதியான கண்ணோட்டத்திலேயே பார்க்கிறது. யாழ்ப்பாணத்தை மையமாகக்கொண்டு அவர்கள் சிந்திக்கிறார்கள்.
வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற மக்கள் குறித்து கூட்டமைப்பு எவ்வித அக்கறையை காட்டுவதில்லை. அந்த மக்களுக்கு இதுவரை எதையும் செய்ததும் இல்லை.
முன்னர் மலையக தமிழர்களின் பிரச்சனைகளை தொழிற்சங்க பிரச்சனையாக சர்வதேச சமூகத்திற்கு காட்டிய வடக்கின் தலைமைகள் இன்றும் அதே பூச்சாண்டி வித்தையை காட்டுவது மலையக அரசியல் தலைமைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது அரசியல் இலாபத்திற்காக இதனை சாதகமாக பயன்படுத்தியது ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது . மலையக அரசியலில் சிந்திக்க தெரிந்த தூர நோக்குள்ள தலைவர்கள் உருவாகியுள்ளனர். இதனை அறிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்படவேண்டும்.அவ்வாறு செயற்படாவிடின் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது கடினமாகி கொண்டே போகும்.
போராட்டங்களின் போது மாத்திரம் இந்தியாவின் உதவியையும், இலங்கையில் வாழும் மலையக தமிழர்களின் உதவியை நாடும் வடக்கின் தலைமைகள் ஏன் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து செயல்பட முடியாது என்ற கேள்வி மலையகத்தில் உள்ளது.
குறிப்பாக வன்னியில் கணிசமான அளவு மலையக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மறக்கக் கூடாது. எனவே பிரதேச நோக்கை கைவிட்டு அனைவரும் தமிழர்கள் நோக்கை கொள்ள வேண்டும். அதுதான் தூர நோக்காகவும் இருக்கும்.
எப்போதும் வடக்கை சேர்ந்தோர் இலங்கையின் அனைத்து தமிழ் மக்களுக்கும் தலைமையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இந்த போக்கினால்தான் இன்று கிழக்கு பிரிந்து தனியே செயல்படுகிறது. இப்படியே போனால் மன்னார் என்றும் வன்னி என்றும் பிரியக்கூடும்.
அமைச்சர் மனோ கணேசனின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியம் (Tamil Parliamentarian Cacus) என்ற யோசனையை முன்வைத்தார் .இது அமெரிக்க காங்கிரஸில் இருப்பது போன்ற Congressional Black Caucus (CBC) என்ற அமைப்பை போன்றது. இதை ஒரு ஆரம்பமாக ஏற்றுக்கொள்ள கூட்டமைப்பின் யாழ் தலைமைக்கு மனமில்லை என்பது வேதனையான விடயம்
முன்னர் சிங்கள சமூகங்களுக்கிடையே உடரட்ட -மேல் நாடு), பஹத்தரட்ட - கீழ் நாடு என பிளவுகள் இருந்தன. ஆனால் அவர்கள் பொது பிரச்சனைகளில் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்.
எனவே வடக்கு தலைமைகள் நாட்டின் தமிழர்கள் வாழும் மலையகம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், கொழும்பு போன்ற ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழருக்கும் உரிய பிரதிநித்துவத்தையும் தலைமை வாய்ப்புகளையும் வழங்கி சமத்துவமாக இயங்கினால் இலங்கை அரசியலில் தமிழருக்கு உறுதியான பேரம்பேசும் வலு கிடைக்கும்.
- தினேஷ்-
0 comments:
Post a Comment