அரசியல்

தமிழக விவசாயிகளுக்கு திமுக செய்த துரோகங்கள்



''காவிரிப் பிரச்சினைக்கு காரணமே திமுக தான். 1924ல் கையெழுத்திடப்பட்ட காவிரி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை 1974ல் ஆண்டு புதுப்பிக்கத் தவறியதும், 1970ம் ஆண்டுகளில் காவிரி துணை நதிகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை கர்நாடக அரசு கட்டியதை தடுக்கத் தவறியதும் திமுக அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்த துரோகங்களுக்கு உதாரணமாகும். எந்த அடிப்படையில் விவசாயிகளுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், முழு அடைப்புப் போராட்டத்தையும் திமுக நடத்துகிறது என்பது தான் புரியவில்லை'' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

''ஹாரங்கி அணை கட்டுவது குறித்த பிரச்சினை ஏற்பட்ட போது காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்குடன் நடுவர் மன்றம் அமைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்று துரோகம் செய்ததும் கருணாநிதிதான். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு 05.02.2007 அன்று வெளியான நிலையில், அதன்பின் 2013ம் ஆண்டு இறுதிவரை 6 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா? என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு, அது பெரிய சர்ச்சையானவுடன் தெரியாமல் செய்து விட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்த விவசாயிகளின் தோழன் யார்? என்பதை இந்த உலகமே அறியும்.

இத்தகைய கடந்த காலத்தைக் கொண்ட திமுகவுக்கு விவசாயிகளின் நலனுக்காக போராடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? ஒருவேளை கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு இழைத்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடுவதற்காகத் தான் அவர்களுக்கு ஆதரவாக போராட திமுக முன்வந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக திமுக தேர்ந்தெடுத்துள்ள போராட்ட வடிவம் பயனளிப்பதை விட பாதிப்பையே ஏற்படுத்தும்'' என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவின் முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவரது அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

''ஒரு நாள் முழுவதும் கடைகளை அடைத்தும், போக்குவரத்தை தடை செய்தும் போராட்டம் நடத்தும் போது அதனால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பது ஒருபுறமிருக்க, அனைத்துத் தரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, முழு அடைப்புப் போராட்டங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட்டம் நடத்தினால், அதன்பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்ச நீதிமன்றத்திடம் கோர முடியும். விவசாயிகளின் பெயரால் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள் விவசாயிகளைத் தான் தூற்றுவர் என்பதால் அவர்கள் தரப்பு நியாயம் அடிபட்டுவிடும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட இருப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, பாமக அங்கம் வகித்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 04.02.2009 அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த போது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி அதற்கு அனுமதி அளிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி மறுத்து விட்டார்.

அதுமட்டுமின்றி அப்போதைய தலைமைச்செயலர் ஸ்ரீபதி சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிரட்டும் தொனியில் கடிதம் அனுப்பப்பட்டது. தொப்புள்கொடி உறவுகளாக இலங்கைத் தமிழரை காப்பாற்றுவதற்கு முழு அடைப்பு நடத்த அனுமதி மறுத்த ஒரு கட்சி, இப்போது விவசாயிகள் நலனுக்காக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி போராட்டம் நடத்தப்போவதாகக் கூறுவதற்கு பெயர் தான் சந்தர்ப்பவாதம்.

விவசாயிகளின் கோரிக்கைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் பாமக ஆதரிக்கிறது. மாறாக பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசியல் அணி திரட்டும் முயற்சியே தவிர, விவசாயிகளின் நலன் சார்ந்தது அல்ல என்று பாமக உறுதியாக நம்புகிறது''






0 comments:

Post a Comment

Powered by Blogger.