அரசியல்

தமிழகத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டம்



விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் இன்று தமிழகத்தில் திமுக தலைமையிலான அனைத்துக்கட்சிகளால் நடத்தப்பட்டது. வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் முழு அடைப்பு இடம்பெற்றது.

தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட எதிர்கட்சிகள் தமிழகம் முழுக்க நடந்த இந்த முழு அடைப்பில் பங்குகொண்டிருந்தனர். போராட்டத்திற்கு வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதன் மூலம் 65 ஆயிரம் கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வழமைபோல பஸ் போக்குவரத்து நடந்தது. அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை.

சென்னை எழும்பூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் திமுக, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இடதுசாரி கட்சி தலவைர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

''மத்திய அரசு விவசாயிகள் பிரச்சினையில் தொடர்ந்து மவுனம் காத்து வந்தால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றாக இணைத்து அடுத்தகட்டப் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்போம். 1938 முதலே இந்தி திணிப்புக்கு எதிரான தீவிர களத்தை திராவிட இயக்கங்கள் கட்டியெழுப்பியுள்ளன. அப்படியொரு தீவிரமான போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், போராட்டத்தை நடத்துவதற்கு திமுக எப்போதும் தயாராகவே இருக்கிறது'' என்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த அடைப்பு போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ''முழு அடைப்பு நடத்தி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியில் அமர பகல் கனவு காணும் திமுகவுக்கு, ஜனநாயகத்தில் நம்பிக்கை இருந்தால் அடுத்த தேர்தல் வரை இன்னும் 4 ஆண்டுகள் பொறுமை காக்க வேண்டும்.

கடந்த காலங்களில் பல ஆண்டுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக, காங்கிரஸ் கட்சிகள் தாம் செய்த தவறுகளை மறைக்கவே தற்போது முழு அடைப்பு போராட்டம் என்ற பெயரில் நாடகமாடுகின்றன. இதில் சர்வகட்சி கூட்டம் என்ற பெயரில் கூட்டணி நிச்சய தார்த்தம் செய்துள்ளதாக கூறிக்கொள் ளும் திருநாவுக்கரசரின் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுப்பது ஏன்?'' என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் முழு அடைப்புப் போராட்டத்தால் எந்த பயனும் இல்லை என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.