அரசியல்

இலங்கையில் அமைதியை கொல்லும் புத்தர்



உலகில் அமைதியின் உருவமாக கருதப்படும் புத்தர் இலங்கையில் கொடூரத்தின் அடையாளமாக இருக்கிறார்.
புத்தரின் உருவத்தை முன்வைத்தே இலங்கையில் தமிழ் முஸ்லீம் மக்கள் மீது வன்முறை நடத்தப்படுகிறது. இலங்கையில் கொலைகளின்  இரத்தக்களரிகளின் அழிவின் சின்னமாக புத்தர் இருக்கிறார்.

ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையின் இன முரண்பாடுகளின் மிக முக்கிய காரணியாக புத்தர் இருக்கிறார். வடகிழக்கில் பலாத்காரமாக தமிழர் பிரதேசங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டன. பின்னர் அந்த சிலைகைகளை வைத்து பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டன.
இந்த விகாரைகளை அமைப்பதற்காக அந்த பகுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் அடித்து விரட்டப்பட்டார்கள். போக மறுத்தவர்கள் கொல்லப்பட்டார்கள். பின்னர் இது முஸ்லீம் பகுதிகளிலும் நடக்க ஆரம்பித்தது.

வீதி ஓரத்தில், பழைய கட்டிடங்களில் என்று எங்காவது ஒரு அரச மரத்தின் சிறு கன்றை கண்டால்கூட உடனே அந்த இடம் சிங்கள பெளத்தர்களால் போலீஸ், அரசாங்கத்தின் துணையுடன் ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். பின்னர் அந்த இடத்தில் புத்தர், சிலை பவுத்த விகாரை என்று வந்துவிடும். வழமைபோல பவுத்த விகாரை வந்தால் சூழ உள்ள பகுதிகள் எல்லாம் கபளீகரம் செய்யப்பட்டுவிடும்.

இந்த கொடுமைகளை தாங்க முடியாத தமிழ் இளைஞர்கள் இயக்கங்களை நோக்கி போனார்கள். குறிப்பாக கிழக்கு இலங்கையில் இந்த நிலை அதிகமாக இருந்தது. அந்தவகையில் இலங்கையில் ஆயுதப்போராட்டம் மிகவும் தீவிரமடைய புத்தரே மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

யுத்த காலத்தில் இராணுவ முகாம் இருந்த தமிழர் நிலங்களில் புத்தர் சிலைகளும் விகாரைகளும் நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் முடிந்த பின்னரும் நிலைமை மாறவில்லை.

சிங்க லே (சிங்கள ரத்தம்- சிங்கத்தின் ரத்தம்) மதவாத இனவாத அமைப்பினர் அடாவடியாக நேற்று (25.04.2017) சிவனொளிபாதமலையில் புத்தர் சிலையை நிறுவ முயற்சி செய்துள்ளனர்.

சிவனொளிபாதமலை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமானது. எனவே அங்கு புத்தர் சிலையை வைத்தே தீருவோம் என்று சிங்க லே அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

போலீசார் தலையிட்டதால் தற்காலிகமாக சிலை அமைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அம்பாறை மாவட்டத்தின் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழ்ந்துவரும் பூர்வீகக் கிராமமான இறக்காமத்தில் பெளத்த விகாரை அமைக்கப்படவுள்ளது. இந்த விகாரை அமைப்பதற்கு அங்கு வாழும் தமிழ் முஸ்லீம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும் போலீஸ், அரசாங்க உதவியுடன் விகாரை அமைக்கப்படவுள்ளது.

ரௌடிகளாகவும், குற்றவாளிகளாகவும் இருக்கின்ற ஞானசார தேரர் போன்ற பெளத்த துறவிகள் தமிழ் முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இந்த விகாரையை அமைக்கவுள்ளனர்.

பெளத்த துறவிகள் பலாத்காரமாக இறக்காமம் கிராமத்தில் விகாரை அமைக்க அண்மைக்காலமாக முயற்சி செய்து வருகிறார்கள்.
பொது பல சேனா மத-இனவாத அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழமை போல தனது ரௌடித்தனத்தை மக்கள் மீது காட்டிவருகிறார். அம்பாறை மாவட்ட செயலாளர், படை உயர் அதிகாரிகளைக்கூட நேரில் சந்தித்து எச்சரிக்கையும் மிரட்டலும் விடுத்திருந்தார்.

இந்த மிரட்டலின் பின்னர் உடனடியாக விகாரையை அமைக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. விகாரையமைக்க தேவையான காணியை  வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெளத்தம் இலங்கையில் மிக பழங்காலம் தொட்டு பரவி இருந்தது. குறிப்பாக வடகிழக்கில் சிங்கள பெளத்தர்கள் வாழ்ந்திருந்தார்கள். விகாரைகள் இருந்தன என்று புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்ததாக சொல்லுவதே நீண்ட காலமாக இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் முக்கிய வேலையாக உள்ளது. இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எங்காவது மண்ணை கிண்ட ஆரம்பித்தால் நிச்சயமாக அங்கு புத்தர் சிலை கண்டுபிடித்ததாக செய்தி வரும். அடுத்து அந்த பகுதி அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும்.

இப்படித்தான் முன்னர் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியிலுள்ள மாயக்கமல்லி மலை பகுதியை தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமாக்கிக்கொண்டார்கள். அந்த இடத்தில் விகாரையை அமைப்பதற்கு கடந்த 9 மாதங்களாக பௌத்த பிக்குகள் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இதுதொடர்பில் கடந்த வாரம் பிக்குகளுக்கும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முறுகல் தோன்றியிருந்தது. அதையடுத்து பிக்குகள் பின்வாங்கி சென்றிருந்தனர்.

இப்போது பொதுபல சேனா, சிங்கள ராவய, சிங்கலே ஆகிய மூன்று மத-இனவாத அமைப்புகளும் ஒன்று சேர்ந்து மக்களையும் அரச அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர்.

தொல்பொருள் காணியில் விகாரை நிர்மாணிப்பதற்கு எந்தவித இடையூறுகளையும் அரச அதிகாரிகள் விதிக்கக்கூடாது என்று அவர்கள்
அம்பாறை மாவட்ட செயலாளரை பகிரங்கமாக மிரட்டியுள்ளனர்.

அனுமதி தராவிட்டால் நாங்கள் பலாத்காரமாக விகாரையை கட்டுவோம் என்று பிக்குகள் சவால் விடுத்துள்ளனர்.

இதையடுத்து தமிழ் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பையும் மீறி இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட ஒன்றரை ஏக்கர் அரச காணியை விகாரை அமைப்பதற்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னரும் இதுபோன்று பெளத்த பிக்குகள் தமிழர் பகுதியில் விகாரை அமைக்க முயன்று பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.
கடந்தவருடம் மட்டக்களப்பு நகரில் பெளத்த பிக்குகளால் இனக் கலவரம் ஏற்படும் சூழல் தோன்றியிருந்தது. விகாரை அமைக்க வலியுறுத்தி பொதுபலசேனா பெளத்த பிக்குகள் ஊர்வலம் நடத்த முற்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் தடையுத்தரவை அடுத்து பொதுபலசேனா வெலிகந்தைப் பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் மட்டக்களப்பு நகரில் அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் மட்டு எல்லையில் ஞானசாரதேரரும் இனவாத அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

கடந்த வருடம் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு பன்குடா வெளியில் இந்துக் குருக்கள் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்திருந்தார். அந்த காணியில் அரச மரம் இருப்பதால் அது சிங்களவர்களுக்கே சொந்தம் என்று சிங்கள ரவுடிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தார். மக்களின் எதிர்ப்பினால் ஆக்கிரமிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை.

கொக்குளாய் கிராமத்திலும் இவ்வாறு சிங்கள பெளத்த பிக்குகளால் தமிழரது நிலம் அபகரிக்கப்பட்டு விகாரை கட்டப்பட்டது.

இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய பகுதியில் பலாத்காரமாக புத்தர்சிலை கட்டி விகாரை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் இறங்கியிருந்தனர்.

மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இப்படியான ரவுடி பிக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மகிந்தவின் ஆதரவுடன் பொதுபல சேனா , ராவண பலய, சிங்கள ராவய , சிங்கலே என வன்முறையை ஆதரிக்கும் பல பிக்குகளின் அமைப்புகள் இயங்கின. பிக்குகளின் ரவுடித்தனம் வீரமாக போற்றப்பட்டது. எனவே இந்த பிக்குகள் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

ஆனால் இந்த புதிய மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கத்திலும் இவ்வாறு பெளத்த ஆக்கிரமிப்பு நடப்பது தமிழ் முஸ்லீம் மக்களிடையே பெரும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

- என்.ஜீவேந்திரன்

0 comments:

Post a Comment

Powered by Blogger.