உலகம்

யாரும் வெற்றிபெறாத பிரான்ஸ் அதிபர் தேர்தல்



பிரான்சில் நேற்று (23.04.2017) நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் சகல வேட்பாளர்களும் பெரும்பான்மையை பெற முடியாமல் தோல்வியடைந்துள்ளனர். நேற்றைய அதிபர் தேர்தலில் 97% சதவித வாக்களிப்பு இருந்தபோதும் எந்த வேட்பாளரும் 50% பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை. எனவே மே மாதம் 7ம் திகதி மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. நேற்றைய தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இரு வேட்பாளர்களான எம்மானுவேல் மக்ரோனும், மெரைன் லெ பென்னும் அதில் போட்டியிடவுள்ளனர். இதில் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளர் பிரான்ஸின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

நேற்று நடந்து முடிந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மார்சே அணியின் எம்மானுவேல் மக்ரோன் முன்னிலையில் இருக்கிறார். அவருக்கு 23.9% சதவித வாக்குகள் கிடைத்துள்ளன. மக்ரோனுக்கு அடுத்த படியாக 21.4% வாக்குகள் பெற்று தேசிய முன்னணி கட்சியின் மெரைன் லெ பென் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

மே 7ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 39 வயதான எம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றால், பிரான்ஸின் இளம் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். முன்னாள் வங்கியாளரான இவர், தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக பதவி வகித்திருந்தார். பின்னர் அந்த பதவியை விடுத்து புதுக் கட்சி தொடங்கினார். பிரான்ஸின் பொருளாதாரத்தை படிப்படியாக ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று கூறும் மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான கொள்கையை கொண்டவர்.

ஞாயிறன்றும் கடைகள் திறந்திருக்க அனுமதிப்பது உள்ளிட்ட தொழிற்துறை சட்டங்களை மாற்றி "மக்ரோங் சட்டம்" என்ற சர்ச்சைக்குரிய சீர்த்திருத்த மசோதாவை கொண்டு வந்தவர்.
எம்மானுவேல் மக்ரோன் மிதவாத கட்சியை சேர்ந்த பழம்பெரும் அரசியல்வாதி, ஃபிராங்ஸ்வா பைரூ மற்றும் சோஷியலிச கட்சியின் முன்னாள் பிரதமர் மானுயெல் வால்ஸ் போன்றோரின் ஆதரவையும் பெற்றுள்ளார்.

பிரான்ஸில் 9.7 மாக இருக்கும் வேலையற்றோர் சதவீதத்தை 7 சதவீதமாக குறைப்பேன். 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் அலைபேசிகளை பயன்படுத்த தடை விதிப்பேன் என்றும் மக்ரோன் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தேர்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்து மே 7ம் திகதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகும் பெண் வேட்பாளரான மெரைன் லெ பென் ஒரு வழக்கறிஞர். 48 வயதான இவர் தீவீர வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியை சேர்ந்தவர். இந்த கட்சிக்கு அவரது தந்தையே தலைமை தங்கியிருந்தார். 2011 ஜனவரியில் தந்தையிடமிருந்து லெ பென் தலைமைப்பதவியைப் பெற்றார். 2012ல் நடந்த அதிபர் தேர்தலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இவர் ரஷ்ய அதிபர் புட்டினால் கவரப்பட்டு அவர் போல செயல்பட விரும்புகிறார் என்று சிலரால் விமர்சிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டுக்குள் ஆண்டிற்கு 10,000 குடியேறிகள்தான் சட்டரீதியாக அனுமதிக்கப்படுவார்கள். சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்படுவார்கள். பிரான்சில் கண்டபடி கட்டப்பட்டுள்ள மசூதிகள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் வீடற்ற ஏழை பிரான்ஸ் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி தனித்துவமாக செயல்படவேண்டும். அதற்காக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் கூறிவருகிறார்.  

மெரைன் லெ பென் 2011ல் கட்சியின் தலைமைப்பதவிக்கு வருவதற்கு முன்பு இதைவிடக் கடுமையான கொள்கைகளைக்கொண்டிருந்தார். பதவிக்கு வரும் முன்பு பிரான்சில் முஸ்லீம்கள் வீதிகளில் தொழுகை நடத்துவது தடை செய்யப்படவேண்டும் என்றும் அது ஜெர்மானியர்களின் ஆக்கிரமிப்புக்கு சமமானது என்றும்  கூறியிருந்தார்.

மே மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது இரண்டாம் சுற்று அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பிரான்ஸ் அரசியலில் 60 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய வலதுசாரிகளை தோற்கடித்ததாகவே அமையப்போகிறது.



0 comments:

Post a Comment

Powered by Blogger.