ஈராக்கின் மொசூல் நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் அரச படைகளால் மீள கைப்பற்றப்பட்டுள்ளது. சில பகுதிகளில் எஞ்சியிருக்கும் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
ஈராக் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா விமான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகிறார்கள். கடந்த 17ம் திகதி அமெரிக்க விமானப்படை நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறியிருந்தன. அதனை தற்போது அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது.
இடிபாடுகளுக்கு இடையிலிருந்து உடல்கள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்படுகின்றன. அதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கோட்டை என்று கருதப்பட்ட ஈராக் நாட்டின் பழம்பெருமை வாய்ந்த மொசூல் நகர் இப்போது அரச படைகளின் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்டது.
சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னை இஸ்லாமிய உலகின் கலீபாவாக இந்த நகரில் வைத்தே அறிவித்திருந்தார். இந்த மொசூல் நகரத்தின் புகழ்பெற்ற பள்ளிவாசலான அல் நூரியில் இருந்து உலகத்துக்கு நானே இஸ்லாமிய உலகின் புது கலீபா என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
ஆனால் சொர்க்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆட்சி நரகமானது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் உலகமே அதிரும் கொடுமைகளை செய்தார்கள். சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானோர் உயிருடன் எரிக்கப்பட்டார்கள், புதைக்கப்பட்டார்கள். கொடிய சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்கள் மீது மிகப்பெரும் அடக்குமுறைகளும் கொடுமைகளும் நிகழ்த்தப்பட்டன. உடல் முழுவதையும் மறைக்கும் கருப்பு ஆடை கட்டாயமாக்கப்பட்டது.
இந்த நிலையில் சிரியாவில் ரஷ்ய இராணுவம் களமிறங்கியதுடன் நிலைமை மாறத்தொடங்கியது. பயங்கரவாதிகள் சிரியாவிலும் ஈராக்கிலும் படிப்படியாக தோற்கடிக்கப்பட்டார்கள்.
இப்போது ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதி தன்னை இஸ்லாமிய உலகின் கலீபாவாக அறிவித்த அந்த அல் நூரி பள்ளிவாசல் அரச படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
0 comments:
Post a Comment