அரசியல்

மகிந்த ராஜபக்ஸ மீண்டும் களத்தில்



மகிந்த ராஜபக்ஸவிற்கு இலங்கையின் தென்பகுதியிலுள்ள காலி ஹபராதுவ நகரில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மகிந்தவிற்கு அதிகம் செல்வாக்குள்ள இந்த பிரதேசத்தில் சிங்கள மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அதிபர் தேர்தலில் மகிந்த தோல்வியுற்ற போதும் இந்த பிரதேச மக்கள் பெரும்பான்மையாக மகிந்தவிற்கே வாக்களித்திருந்தனர்.

காலி ஹபராதுவ நகரில் நேற்று சனியன்று 'புரட்சிக்கு வழி' என்ற தொனிப்பொருளில் கூட்டு எதிர்கட்சியினர் அரசாங்க எதிர்ப்பு கூட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

பெருமளவு சிங்கள மக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் மகிந்த ராஜபக்ஸவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மகிந்த மேடை ஏறியதும் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு ''மகிந்த வாழ்க'' என்று கூச்சலிட்டுள்ளனர்.

மக்களின் பெரும் ஆரவாரத்திற்கு இடையே பேசிய மகிந்த ராஜபக்ஸ '' இந்த அரசாங்கம் நீதியை வளைத்துள்ளது. நீதி இன்று சீரழிந்துள்ளது. விமல் வீரவன்சவுக்கு இன்னும் பிணை வழங்கப்படவில்லை. அவரை சிறையில் அடைத்து வைத்துள்ளது.

இந்த அரசாங்கம் எதிர்பார்ப்பது என்ன? ஊழல் தடுப்பு பிரிவு, குற்ற விசாரணை பிரிவு, சிறைச்சாலை ஆகிய  அமைப்புகளை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சி செய்கிறார்கள். நாட்டை நிர்வகிக்க இந்த அமைப்புகள் மட்டும் போதும் என்று தற்போதைய அரசாங்கம் நினைக்கிறது.

எல்லோரையும் சிறையில் அடைத்துவிட்டு நாட்டை ஆள நினைக்கிறார்கள். இந்த சூழல் வெடிக்க போகிறது என்பதை அரசாங்கம் உணரவில்லை'' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பத்தாயிரம் கோடி ஊழல் விசாரணை முடிவுக்கு வரவுள்ளது. இந்த ஊழல் குறித்த விசாரணை கடந்த ஒரு வருடமாக இடம்பெற்றது. இலங்கை நிதி மோசடி விசாரணை பிரிவு இந்த விசாரணையை நடத்தியிருந்தது.

மகிந்த ராஜபக்ஸ அவரது சகோதரர்களான கோட்டபாய ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ, மகன்கள் நாமல் ராஜபக்ஸ, யோஷித ராஜபக்ஸ, மகிந்தவின் சகாக்களான விமல் வீவன்ச, கெஹெலிய ரம்புக்வெல, ஏக்க நாயக்க போன்ற இன்னும் பலர் இந்த விசாரணையில் சிக்கி இருந்தனர்.

ஆனால் விசாரணைகள் மந்த கதியில் இடப்பெறுவதாகவும், குற்றவாளிகளை தப்பிவிட அதிகம் வாய்ப்புள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

உயர் மட்ட தலையீடுகள் காரணமாக நிதி மோசடி விசாரணை பிரிவு செயல் இழந்துள்ளதாக  ஜே.வி.பி.கட்சியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸாநாயக்க குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் அரசாங்கத்தில் உள்ள சிலர் சில விசாரணை கோவைகளை மூடிவிடும்படி அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் விசாரணைகள் முடிவடைந்து 60 அறிக்கை ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவரது சகாவான விமல் வீரவன்ச மஹிந்த ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
70 நாட்களுக்கு மேலாக சிறை வைத்திருப்பதால் தனக்கு பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவன்ச தற்போது உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இந்த சூழல் மகிந்த ராஜபக்ஸவுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. எனவே அவர் எப்படியாவது மைத்திரி ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை பிடிப்பதற்கான வேலைகளை மகிந்த ராஜபக்ஸ தீவிரப்படுத்தி வருகிறார் என்று செய்திகள் கசிந்து வருகின்றன.





0 comments:

Post a Comment

Powered by Blogger.