இந்தியா

ரஜினி வாய்ஸ் - வெத்து பெருங்காய டப்பா



கங்கை அமரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக பா.ஜ. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நடிகர் ரஜினியை சந்தித்து பேசியிருந்தார். அந்த சந்திப்பில் கங்கையமரனுக்கு ரஜினி, வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்துள்ளார். பின்னர் கங்கை அமரன் பத்திரிகைகளுக்கு புகைப்படத்தை கொடுத்திருந்தார்.
மேலும் கங்கையமரன் ரஜினி தனக்கு ஆதரவளிப்பதாக செய்தியை கசியவிட்டார். இதை நம்பிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், ரஜினியின் ஆதரவு தமக்குண்டு என்று தெரிவித்திருந்தார். ஆனால் ரஜினி ஆர்.கே.நகர் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிக்கை விட்டிருந்தார். இதையடுத்து பா.ஜ.க. மேலிடம் தனது கட்சியின் தமிழக தலைவர்களை கண்டித்ததாக செய்திகள் கூறுகின்றன.

நீண்ட காலமாகவே பா.ஜ.க. தலைவர்கள் ரஜினிகாந்தை தமது கட்சியில் சேர்த்துவிட முயற்சித்து வருகிறார்கள். ரஜினியும் பிடி கொடாமல் நழுவி வருகிறார். ஆனால் ரஜினி அரசியலில் இறங்குவதால் பெரும் மாற்றம் ஏற்படக்கூடிய சூழல் இப்போது இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் ரஜினி வாய்ஸ் எனும் காமெடி நடைபெற்றுவருகிறது.

ரஜினியின் ரசிகர்கள் தமது தலைவர் அரசியலில் இறங்கி பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆட்சியை பிடிக்க வேண்டும், அதில் தமக்கு பதவிகள் கிடைக்க வேண்டும், ரஜினியின் ஆட்சியில் தாம் செட்டில் ஆகவேண்டும் என்று நீண்ட நாட்களாக ஏங்குகிறார்கள்.
பாவம் ரஜினி ரசிகர்களும் எத்தனை காலத்திற்குத்தான் சொந்த காசில் பேனர் கட்டியும், பாலூற்றியும், பிளாக்கில் டிக்கெட் வாங்கி தலைவரது படத்தை ஓடவைத்துக்கொண்டிருக்க முடியும்? எனவே 50 வயதை கடந்த அவர்களும் தமக்கான ஒரு எதிர்காலத்தை தமது தலைவர் மூலம் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

ஆனால் யதார்த்தம் அவ்வாறில்லை. சினிமாவை வாய்பிளந்து பார்த்து நடிகர்களை தலைவராக வணங்கிய காலம் போய்விட்டது. கல்வியறிவு அதிகரித்து இளையவர்கள் இணையத்தில் பயணிக்கின்ற காலம். இப்போது ஜெயலலிதா அரசியலுக்கு வந்திருந்தால் தீபாவின் நிலைதான் ஏற்பட்டிருக்கும்.

ஜெயலலிதா மீதான அதிருப்தி உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு எதிராக ரஜினி குரல் கொடுக்க பலமான தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. ரஜினி ரசிகர்களும் அதை அப்படியே பிடித்துக்கொண்டார்கள். அரசியலில் ரஜினிக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக நம்பினார்கள்.
சோ போன்றவர்களும் இந்த கதையை ஊக்கப்படுத்தினார்கள்.

அதற்கு பிறகு வந்த தேர்தலில் பாஜகவை ரஜினி வெளிப்படையாக  ஆதரித்தார். ஆனால் தமிழக மக்கள் பா.ஜ.க. வை தோற்கடித்தார்கள். ரஜினியின் ஆதரவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மக்களின் விருப்பத்தை ரஜினி பிரதிபலிக்கலாம். ஆனால் ரஜினியின் விருப்பத்தை மக்கள் பிரதிபலிக்க மாட்டார்கள் என்பது உணரப்பட்டது.

இதை நன்றாக புரிந்துகொண்ட ரஜினிகாந்த் அதன்பிறகு யாருக்கும் குரல் கொடுப்பதில்லை.

அண்மையில் ஈவிகேஎஸ் இளங்கோவன், ரஜினியால் இனி எந்தத் தேர்தலிலும் தாக்கத்தை உண்டாக்க முடியாது என்று வெளிப்படையாக கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அ.தி.மு.க. பிளவுண்டு கிடக்கிறது. மக்கள் செல்வாக்கான தலைவர்கள் யாரும் அக்கட்சியில் இல்லை. தி.மு.க.விலும் கருணாநிதி ஓய்ந்துவிட்ட நிலையில் ஸ்டாலின் மக்கள் செல்வாக்கில்லாத தலைவராக இருக்கிறார். இந்த இடைவெளியில் புகுந்து மத்திய பா.ஜ.க.வின் துணையுடன் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நம்புகிறது தமிழக பா.ஜ.க.

ஆனால் பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் செல்வாக்கு கிடையாது. தமிழக மக்கள் விரும்புகின்ற ஒரு அரசியல் முகமும் அவர்களிடம் இல்லை.
எனவேதான் ரஜினிகாந்தை எப்படியாவது தமது கட்சிக்கு கொண்டுவந்துவிட துடிக்கிறார்கள்.

எதை தின்றால் பித்தம் தீரும் என்ற கதைதான் இது.  

0 comments:

Post a Comment

Powered by Blogger.