இரட்டை இலையை தக்கவைப்பதில் சசிகலா அணிக்கும் ஓ.பி.எஸ்.அணிக்குமிடையே பெரும் போரே நடக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன். மிக பெரிய வாக்குகள் வித்தியாசத்தை பெறுவேன். உண்மையான அதிமுக நாங்கள்தான். இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் என்று டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சசிகலா ஆதரவாளரான சுப்ரமணிய சாமி இரட்டை இலை சசிகலா தரப்புக்கு தான் சொந்தம் என்று கூறி வருகிறார். இப்படி சுப்ரமணிய சாமி சசிகலாவை ஆதரிக்க வெயிட்டான டீலிங்கே காரணம் என்று தகவல்கள் கசிந்திருந்தன. சசிகலா தரப்புக்கு ஆதரவு திரட்டும் வேலையை சாமி டெல்லியில் செய்துவருகிறார்.
இந்த நிலையில் தினகரன் நேற்றிரவு சுப்ரமணிய சாமியை சந்தித்து பேசிய பின்னணியில், இரட்டை இலை எங்களுக்குத்தான் என்று உறுதியாக சொல்கிறார். நேற்றைய சந்திப்பின்போது சாமி இரட்டை இலை உங்களுக்குத்தான் என்று உறுதியளித்ததாகவும் அதன் பின்னர் இன்று நிர்வாகிகளிடம் இரட்டை இலை நமக்குத்தான், அந்த சின்னத்தில்தான் நான் போட்டியிட போகிறேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.
இந்த இரட்டை இலை விவகாரத்தில் ஆதரவு கோரி காஞ்சி சங்கரமடத்திற்கும் தினகரன் சென்றிருந்தார். சங்கரமடத்தின் ஆதரவும் சசிகலா தரப்புக்கே என்று சொல்லப்படுகிறது.
இதேவேளை சசிகலா பொதுச்செயலாளர் ஆனது செல்லாது. தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆனது செல்லாது. அப்படி ஒரு பதவியே அ.தி.மு.க.வில் இல்லை. என்று ஓ.பி.எஸ். அணி பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.
ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்ட சசிகலா, 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்க முடியும். அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் என்பது தேவையற்றது. அதிமுகவில் இரு அணிகள் கிடையாது, ஒரே அணி அது நாங்கள் தான். தொண்டர்கள் எங்களிடத்தில் உள்ளனர் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் வாதமாக உள்ளது.
டிடிவி தினகரன் மீது வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார்.
எப்படியாவது இரட்டை இலையை அடைவது என்று ஓ.பி.எஸ்.அணி தீயாக வேலைசெய்து வருகிறது.
இந்த கலவரங்களுக்கிடையே இரட்டை இலை எனக்குத்தான் என்று தீபா அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில்
''அ.தி.மு.க. என்பது ஜெயலலிதாவின் சந்தேக மரணத்திற்கு பிறகு சசிகலா ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒரு அணியாகவும் செயல்படுகின்றனர். தொண்டர்கள், பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று எனது தலைமையில் மக்கள் ஆதரவோடு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை செயல்பட்டு வருகிறது.
சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது சட்டவிதிமுறைகளை மீறிய செயலாகும். பொதுச்செயலாளர் என்பவர் கட்சியில் உள்ள ஒன்றரை கோடி உறுப்பினர்கள், தொண்டர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.சசிகலா, சட்டமன்ற உறுப்பினர்கள், தனக்கு வேண்டியவர்கள், ஆதரவாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது முற்றிலும் செல்லதக்கது அல்ல.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான் என்று வாக்காளர்கள் அங்கீகாரமளித்து என்னை வெற்றிபெற வைப்பார்கள்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு எனக்கு கிடைக்கும் வெற்றியின் மூலம் இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம் என்பதை நிரூபிப்பேன். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எந்த சின்னம் எனக்கு ஒதுக்கப்பட்டாலும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்று என்னை மட்டுமே ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க தயாராக உள்ளார்கள்.
எனக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.இந்த பேராதரவை சீர்குலைத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு பின்னடைவு ஏற்படுத்த என்னுடைய அரசியல் எதிரிகள் முயற்சிக்கின்றனர். குறிப்பாக கடந்த 2 நாட்களாக திட்டமிட்டு தொண்டர்களையும் வாக்காளர்களையும் பொதுமக்களையும் குழப்பி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை கலைத்துவிட்டு ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். தொண்டர்கள், பொதுமக்களும் ஆர்.கே.நகர் வாக்காளர்களும் இதை நம்பவேண்டாம். உங்கள் பேராதரவோடு பேரவை சிறப்பாக செயல்பட்டு எதிரிகள் ஏற்படுத்தும் தடைகளை தகர்த்தெறிந்து ஆர்.கே.நகரில் அமோக வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டு எதிர்காலத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை ஏற்படுத்துவோம். என்று தீபா குறிப்பிட்டுள்ளார்.
எப்படியோ நாளை இரட்டை இலை யாருக்கென்று அறிவிக்கப்படும்.
அப்போது உண்மையாகவே தீயாய் வேலை செய்தது யாரென்று தெரிந்து விடும்.
அப்போது உண்மையாகவே தீயாய் வேலை செய்தது யாரென்று தெரிந்து விடும்.
0 comments:
Post a Comment