ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கக்கூடாதென வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை காலந்தாழ்த்த கூடாதெனவும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் இதுவரை அரசாங்கம் என்ன செய்துள்ளது என்று ஐ.நா. பார்க்கவேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்கள் 28 நாளாக போராடி வருகிறார்கள். இது தொடர்பில் கருத்து தெரிவித்த முதல்வர் விக்னேஸ்வரன் '' குற்றத்தில் சம்பந்தப்பட்ட படையினரை அரசாங்கம் பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார்.
விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபை 2015ம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் மெதுவாக செயல்படுவதாக கண்டித்திருந்தது.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கால அவகாசம் வழங்க கூடாது என்றால் இலங்கை நிறைவேற்றாத வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற வைப்பது என்று கேட்டுள்ளார். கால அவகாசத்தை கண்டிப்பான கண்காணிப்பில் கால அட்டவணையுடன் கொடுக்க வேண்டும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
''தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் நிறைவேற்றாமல் இருப்பதைப்போல சர்வதேசத்திடம் செய்ய முடியாது. இது முன்னர் மகிந்த ராஜபக்ஷ கற்றுக்கொண்ட கசப்பான பாடம்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2009ல் ஐ.நா.மனித உரிமை பேரவையில் வாக்குறுதியை கொடுத்துவிட்டு, கூட்டறிக்கையில் கையொப்பம் வைத்துவிட்டு பின்னர் நிறைவேற்றாமல் விட்டதால்தான் இந்த சர்வதேச விசாரணை என்ற விடயமும் வந்தது. மகிந்த ராஜபக்ஷ பதவி விலகவும் நேரிட்டது. எனவே மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலையை கவனத்தில் கொண்டு இன்றைய அரசாங்கம் செயல்படவேண்டும். இல்லாவிட்டால் மகிந்தவுக்கு ஏற்பட்ட நிலையே இன்றைய ஆட்சியாளர்களுக்கும் நேரும்'' என்று சுமந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.
ஆனால் இந்த 15 மாதங்களில் முக்கியமான இந்த தீர்மானங்களை செயல்படுத்த இலங்கை தீவிரம் காட்டவில்லை.
மாறாக இலங்கை அரசாங்கம் போர் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை. அதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என வெளிப்படையாக தெரிவித்திருந்தது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமர வீர தனது உரையில் போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து வாய் திறக்கவில்லை. விசாரணையில் கலப்பு பொறிமுறை குறித்தும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில் தமிழர் தரப்பும், உரிமை செயல்பாட்டாளர்களும் இலங்கையை கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் இந்த அழுத்தங்கள் குறித்து அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இலங்கை அதிபர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் போர் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என வெளிப்படையாக அறிவித்து விட்டனர்.
சர்வதேசத்திற்கு குறிப்பாக மேற்கு நாடுகளுக்கு தற்போதுள்ள அரசாங்கத்தை குழப்பிக்கொள்ள விருப்பம் இருக்காது. தம்மை மதிக்காத சீன சார்பு மகிந்தவை பதவியில் இருந்து அகற்றி இந்த புதிய அரசாங்கத்தை பதவியில் அமர்த்த சர்வதேசமும் பங்களித்து இருக்கிறது. எனவே தற்போதைய அரசாங்கத்தை பாதிக்க கூடிய எந்த நடவடிக்கையையும் ஐ.நா. எடுக்க வாய்ப்பில்லை என்றே அவதானிகள் கருதுகின்றனர்.
0 comments:
Post a Comment