அரசியல்

மரணப்படையின் தலைவர் கோட்டபாய ராஜபக்ஸ




இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல படுகொலைகளுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஸவின் தம்பியான கோட்டபாய ராஜபக்ஸவே காரணம் என்று சாட்சியங்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
கோட்டபாய ராஜபக்ஸ பல படுகொலைகளை செய்தார் என்பதை பலரும் முன்னர் அறிந்தே இருந்தனர். ஆனால் அதற்கான ஆதாரங்களோ சாட்சியங்களோ நீதிமன்றத்தில் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படவியில்லை.

ஆனால் புதிய அரசாங்கத்தின் வரவுடன் ஒரு சில விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதில் ஒன்றாக 2009ல் இடம்பெற்ற செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு உள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளின் போது லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையின் சூத்திரதாரியாக கோட்டபாய ராஜபக்ஸ இருந்துள்ளார் என்பதற்கான சாட்சியங்கள் வெளியாகியுள்ளன.

ஆயுதம் கொள்வனவின் போது கோட்டபாய ராஜபக்ஸ ஊழல் செய்ததாக லசந்த விக்கிரமதுங்க செய்தி வெளியிட்டிருந்தார். மிக் போர்  விமானங்கள் வாங்கும் பேரத்திலும் கோட்டபாய ராஜபக்ஸ ஊழல் செய்ததாக அவர் ஆதாரங்களுடன் செய்தி எழுதியிருந்தார்.

தான் செய்த ஊழலை வெளியிட்ட கோபத்தில் கோட்டபாய ராஜபக்ஸ, செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக செய்திகள் கசிந்திருந்தபோதும் மரண படை இயங்கிய மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் இது பற்றி யாரும் வாய்திறக்கவில்லை.

 ''கோட்டபாய ராஜபக்ஸ இரகசிய சிறப்பு மரண படை ஒன்றை வைத்திருந்தார். முன்னாள் தேசிய புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண இதற்கு தலைமை தாங்கினார். இந்த இரகசிய பிரிவு எனது அதிகாரத்துக்கு அப்பால் செயற்பட்டது'' என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சாட்சியம் வழங்கியதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று திங்களன்று கல்கிச்சை நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

மேலும், லசந்த மட்டுமல்லாது உபாலி தென்னக்கோன், கீத் நொயார்  போன்ற செய்தியாளர்கள் மீதான வன்முறைகளிலும், வேறு சில செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களிலும் இந்த மரண படை தொடர்புபட்டுள்ளது. மேஜர் ஜெனரல் கபில ஹேந்ரவிதாரணவின் கீழ் இயங்கிய மரணப்படையினர் ஐந்து கைபேசி சிம்களை குற்றங்களின் போது பயன்படுத்தியுள்ளனர் என்றும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை யுத்தக் காலப்பகுதியில் எனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சொல்வது பொய் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மறுப்பு தெரிவித்துள்ளார்.

''சரத் பொன்சேகாதான் 2005 டிசம்பர் முதல் 2009 ஜீலை வரை இலங்கை இராணுவத்தை வழிநடத்தினார். எனவே இந்த குற்றச்சாட்டுக்கு அவரே பதிலளிக்க வேண்டும். எனது தலைமையில் மரணப் படை ஒன்று செயற்பட்டதாக சொல்லும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன். அவ்வாறு ஒரு படை செயற்பட்டிருந்தால் ஒரு இராணுவத்தளபதியாக பொன்சேகா இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று கோட்டபாய ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட 17 செய்தியாளர்களும் ஊடகங்களை சேர்ந்தவர்களும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்ட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

இந்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் ஒரு இராணுவ அதிகாரியை பொலிஸார் கைது செய்தனர். இவர்  6ஆவது சந்தேக நபராக வழக்கில் உள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.