ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை இன்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர்.
15 பேர் கொண்ட மீனவர்கள் குழு அமைச்சரை சந்தித்தது. அப்போது அமைச்சர் மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் குழு பிரதிநிதி அருளானந்தம் ''பிரிட்ஜோ கொலைக்கு நீதி வேண்டும். இலங்கையில் இருக்கின்ற 139 படகுகளை விடுவிக்க வேண்டும். நிரந்தர தீர்வு ஏற்படுவதற்கான தீர்வு வேண்டும். போன்ற கோரிக்கைகளை அமைச்சரிடம் முன்வைத்தோம். மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கடற்பகுதியில் அல்லது ராமேஸ்வரம் தொடங்கி நாகை வரையான கடல்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். நாங்கள் சொன்னதை எல்லாம் விளக்கமாக அமைச்சர் கேட்டுக் கொண்டார். நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்'' என்று கூறியுள்ளார்.
தங்கச்சி மடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் கடந்த 6ம் தேதி தனுஷ்கோடிக்கும், கச்சதீவுக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சுட்டதில் உயிரிழந்தார். இதை இலங்கை மறுத்தது.
இதையடுத்து பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
போராட்டம் 8 நடந்தது. பின்னர் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டது.
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜோவின் உடலை உறவினர்கள் நல்லடக்கம் செய்தனர்.
11 நாட்களின் பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை தாக்கினர்.
எனவே இலங்கை கடற்படையால் தொடர்ந்தும் மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து முறையிட ராமேஸ்வர மீனவ பிரதிநிதிகள் நேற்று டெல்லி சென்றிருந்தனர். இந்த சந்திப்பின் போதே மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
ஆனால் அமைச்சர் வாக்குறுதி கொடுத்த அதே நேரத்தில் இலங்கை கடற்படை 10 தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இலங்கை கடல் படை தாக்குவதும், இந்திய மத்திய மாநில அரசுகள் வாக்குறுதி கொடுப்பது, மீண்டும் இலங்கை கடல் படை தாக்குவதும் என்று கதை தொடர்ந்துகொண்டேயுள்ளது.
இன்னொரு புறம் தமிழக அமைச்சர்கள், சில மத்திய அமைச்சரவை புள்ளிகள், முன்னாள் அமைச்சர்கள், செல்வாக்கான வியாபாரிகள் போன்றோருக்கே பெரும்பாலான படகுகள் சொந்தமாக உள்ளன. அதிகமான மீனவர்கள் இந்த படகுகளில் நாள் சம்பளத்துக்கே வேலை செய்கிறார்கள்.
இந்த படகுகளின் முதலாளிகளே அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு மீனவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்க வற்புறுத்துவதாக செய்திகள் உள்ளன.
0 comments:
Post a Comment