இலங்கை போர் குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை எவ்விதமான தீர்மானத்தை நிறைவேற்ற போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இம்மாத இறுதியில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
இலங்கையில் 2009 இல் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பும் சர்வதேச மனித உரிமைகள் தரப்பும் தொடர்ந்தும் கோரி வருகின்றன. இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்களை நடத்தி வருகிறது. இவ்வருட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இந்த மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளது.
இலங்கை அரசாங்கம் மற்றும் சிங்கள தரப்புகள் வெளிநாட்டு நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையில் பங்குபற்றுவதை விரும்பவில்லை.
குறிப்பாக முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சிகள் போர்க்குற்ற விசாரணை ஒன்று இடம்பெறுவதையே விரும்பவில்லை. அதிலும் சர்வதேச விசாரணை என்பதை ஒரு போதும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது. அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமானால் அதை வைத்தே தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்துவிடவும் எதிர்பார்த்துள்ளனர்.
இவ்வாறு போர்க்குற்ற விசாரணை குறித்து வெவ்வேறு கருத்துகள் காணப்பட்டாலும் யதார்த்தம் என்ன என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் இடம்பெறும் போதும் தமிழர் தரப்பு சர்வதேச விசாரணையை வலியுறுத்துகிறது. சர்வதேச மனித உரிமை செயல்பாட்டாளர்களும் அதை ஆதரிக்கிறார்கள். ஆனால் உறுதியாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தார்,
01.இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைப்பது கட்டாயமான தேவை. இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் வகையில் உள்நாட்டு சட்டங்களை மாற்ற வேண்டும்.
02.மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை திருப்பி அளிக்க வேண்டும். மக்கள் விவகாரங்களில் இருந்து இராணுவம் முழுவதுமாக விலக வேண்டும்.
03.இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக செயலாக்க ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் நேரடி அலுவலகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும்.
04.போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான ரோம் உடன்படிக்கையில் இலங்கை உடனடியாக கையொப்பமிடவேண்டும். இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த பரிந்துரைகளை ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இலங்கையில் கொழும்பு அரசாங்கம் வேறு விதமாக நடந்து கொண்டது. நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு நீதிபதிகளை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.
மறுபுறம் சர்வதேசமும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணையில் தீர்ப்பு வழங்கும் தகுதியில் இருக்க தேவை இல்லை. கண்காணிப்பாளர்களாக இருப்பார்கள் என்று தொனியை இறக்கிக்கொண்டது.
கடந்த காலங்களிலும் அவ்வாறு செயல்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய முன்னாள் பிரதம நீதிபதி பகவதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை மேற்பார்வையிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஜெனிவாவில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கடந்த 15 மாத காலத்தில் இலங்கை அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பதை மட்டும் சொல்லி இருக்கிறார். போர்க்குற்ற விசாரணையில் கலப்பு விசாரணை பொறிமுறை பற்றி வாயே திறக்கவில்லை.
இவற்றை வைத்து பார்க்கும் போது இம்முறை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் இலங்கைக்கு மீண்டும் ஒருமுறை கால நீட்டிப்பு மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது. தமிழர் தரப்பு எதிர்பார்ப்பது போல பெரும் அழுத்தங்கள், எச்சரிக்கைகள் எதுவும் இலங்கைக்கு வழங்கப்பட வாய்ப்பில்லை தெரிகிறது.
0 comments:
Post a Comment