உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரித்தானியா விலகல் கடிதத்தை கொடுத்தது



பிரதமர் தெரசா மே பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளார். இந்தக் அறிக்கையை பிரித்தானிய தூதர் சர் டிம் பரோ  பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் நேற்று வழங்கினார்.

ஐரோப்பிய யூனியனில் உள்ள 28 நாடுகளும் கூட்டாக இணைந்து செயல்படுவதற்காக லிஸ்பன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இந்த உடன்படிக்கையின் 50-வது பிரிவின் கீழ், மற்ற உறுப்பு நாடுகளுக்கு பிரிட்டன் இந்த அறிக்கையை வழங்கி உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர் அல்லாத நாடு என்ற வகையில் பிரித்தானியா எத்தகைய உறவை கடைபிடிப்பது என்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இதன்படி 2019ம் ஆண்டு மார்ச் 29 பிரிட்டன் முறைப்படி வெளியேறும்.

ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பதால் பிரித்தானியா பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக வலதுசாரி அரசியல்வாதிகள் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் வந்து பிரித்தானியாவில் குடியேறும் மக்களால் உள்நாட்டு மக்கள் வேலை இல்லாமல் தவிப்பதாக வலதுசாரி அரசியல்வாதிகள் தொடர்ந்து மக்களிடம் எடுத்துக்கூறினார்கள். குறிப்பாக அகதிகளின் வருகையால் பிரித்தானியா அழிவை நோக்கி செல்வதாக தெரிவித்தார்கள்.

2010ல் இந்த பிரச்சாரம் அதிகமாக எழத்தொடங்கியது. 2011ல் ஐரோப்பிய யூனியனில் இருப்பதா அல்லது வெளியேறுவதா என மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 80 இருக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் வாக்களித்தனர். 2012ல் ஜூலை  கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஜான் பாரன் தலைமையில், 100 எம்.பி.க்கள் யூனியனில் இருந்து வெளியேறவேண்டும் என்று கடிதம் கொடுத்தனர். 2012 டிசம்பரில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த லண்டன் மேயர் போரிஸ் ஜான்ஸன் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரினார்.

மக்கள் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவதற்கு ஆதரவு தெரிவிப்பதாக கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தன. 2015ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருந்தது. எனவே மக்களின் ஆதரவை பெறுவதற்காக பிரதமர் கேமரூன் வாக்கெடுப்பு நடத்துவதாக கூற வேண்டி ஏற்பட்டது. ஆனால் அவர் பிரித்தானியா வெளியேற கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே கடைசி வரை இருந்தார். தேர்தலில் வென்றாலும் சொன்னபடி வாக்கெடுப்பை நடத்த வேண்டிய நிலையில் 2016 ஜூன் வாக்கெடுப்பு நடந்தது. அதிகப்படியான மக்கள் ஐரோப்பிய யூனியனில்  இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று வாக்களித்தனர். பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விளக்கினார். தெரேசா மே புதிய பிரதமராக பதவியேற்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரியும் முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.

இந்த பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் முடிவு குறித்த கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் பிரித்தானிய தூதர் வழங்கியுள்ளார்.

பிரான்ஸ் 1951ல் நிலக்கரி மற்றும் இரும்பு கூட்டமைப்பாக  உருவாக்கிய அமைப்பு 1992ல் ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இதில் 28 ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகித்தன. பிரித்தானியா இந்தக் கூட்டமைப்பில் இணைவதற்காக 1969ம் ஆண்டு முதல் மூன்றுமுறை விண்ணப்பித்தது. அவை நிராகரிக்கப்பட்டன. பிரித்தானியாவை சேர்ப்பதன்மூலம் அமெரிக்க ஆதிக்கம் ஐரோப்பிய யூனியனில் ஏற்படக்கூடும் என பிரான்ஸ் அதிபர் சார்லஸ் தே கௌல்லே கருதினார். அதனால் அவர் பிரித்தானியா, ஐரோப்பிய யூனியனில் இணைவதை தடுத்தார். அவர் இறந்த பின்னர் பிரான்ஸ் பிரதமர் ஜியார்ஜ்ஸ் பாம்பியாட்டுடன் இங்கிலாந்து பிரதமர் எட்வர்டு ஹீத் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுக்கள் வெற்றியளித்தன. பிரித்தானியா 1973ல் ஐரோப்பிய யூனியனில் சேர்த்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

Powered by Blogger.