உலகம்

சூழல் பாதுகாப்புக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு





அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கொண்டு வந்த நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அறிவித்து நிர்வாக உத்தரவில் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

இந்த உத்தரவு பாரிஸ் உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகளும் துறை சார்ந்த நிபுணர்களும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கு உலகம் போராடி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். தேர்தலின் போதும் அவர் இதையே கூறி இருந்தார். அமெரிக்க அதிபரின் இந்த செயற்பாட்டால் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இதே வேளை நிலக்கரி தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்க நடவடிக்கை எடுப்பேன் என ட்ரம்ப் தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தான் ட்ரம்ப் நேற்று இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

''அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நம் நாட்டின் வளம் திருடப்படுவது தடுக்கப்பட்டு வருவதுடன், எமது அன்புக்குரிய நாட்டை புனர் நிர்மாணம் செய்து வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக பருவநிலை மாற்றம் தொடர்பாக முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்த அனைத்து கொள்கைகளையும் ரத்து செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். நமது நிலக்கரி எரிசக்தியை பயன்படுத்த தடையாக இருந்த கட்டுப்பாட்டை தளர்த்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் அதேவேளை தூய்மையான காற்று மற்றும் சுத்தமான தண்ணீர் கிடைப்பதும் உறுதி செய்யப்படும்'' என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் பெரும் பில்லியனர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். வலது சாரி மட்டுமல்லாது லாபத்தை நோக்காக கொண்ட முதலாளித்துவ வாதத்தை நேரடியாக ஆதரிப்பவர். அவர் பல வருடங்களாக வரி காட்டாமல் அவர் ஏய்த்து வந்துள்ளதை ஊடகங்கள் வெளிப்படுத்தி இருந்தன.

பதவிக்கு வந்த பின்னர் அண்மையில் அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் எண்ணெய் குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் அனுமதியளித்துள்ளார். 

இந்த திட்டத்தால் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், குறைந்த செலவில் எரிவாயு கிடைக்கும் என்று டிரம்ப் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த திட்டம் அமெரிக்காவின் பூர்வீக குடிகளான செவ்விந்திய மக்கள் வாழும் இடங்களை ஆக்கிரமிக்க போகிறது. அந்த மக்களின் நிலங்களும் ஆறுகளும் காடுகளும் இந்த திட்டத்தினால் பறிக்கப்பட இருக்கின்றன. பூர்வ குடிகளான அந்த மக்கள் தமது சொந்த இடங்களைவிட்டு அகதிகளாக வெளியேற்றப்படப் போகிறார்கள்.

எனர்ஜி ட்ரான்ஸ்பெர் பாட்னர்ஸ் (Energy Transfer Partners) எனும் அமெரிக்க நிறுவனத்தின் அங்கமான டகோட்டா ஆக்சஸ் நிறுவனமானது (Dakota Access) அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் எண்ணெய் குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் காரணமாக அப்பிரதேசத்தின் நீர் வளம், நில வளம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. 

அம்மண்ணின் பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் இந்த திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராடினார்கள். ஒபாமா அரசாங்கமும், எண்ணெய் நிறுவனமும் போராடிய மக்கள் மீது கொடுமையான தாக்குதல்களை நடத்தினார்கள்.

ஆனால் தீவிரமான போராட்டம் காரணமாகவும், போராட்டக்காரர்களுக்கு அதிகரித்த ஆதரவின் காரணமாகவும் பதவிக்காலத்தில் இறுதியில் ஒபாமா இந்த திட்டத்தை நிறுத்தி வைத்தார்.
ஆனால் தற்போது புதிய அதிபரும் மல்டி பில்லியனருமான டிரம்ப் இந்த திட்டத்திற்கு அனுமதியளித்துள்ளார்.

இவ்வாறு அதிபர் டிரம்ப் தொடர்ந்தும் இயற்கை, மக்கள் கருத்து குறித்த அக்கறை இல்லாமல் தனது முதலாளித்துவ போக்கை வெளிப்படுத்தி வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

0 comments:

Post a Comment

Powered by Blogger.