இலங்கையில் போர்க்காலத்தில் சந்தேகந்த்தில் பேரில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் படையினர் கேட்டுக்கொண்டதன்படி விசாரணைக்காக சரணடைந்தனர். ஆனால் இவர்களில் பலர் இதுவரை வீடு திரும்பவில்லை. இப்படி காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காணாமல் போனவர்களை தேடும் உறவுகளை அச்சுறுத்தியும் தாக்கியும் வழக்குகளை போட்டு துன்புறுத்தியும் வந்தது. தற்போது நிலைமை அந்த அளவு மோசமில்லை என்றாலும் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவது குறித்து அக்கறை எதுவும் காட்டப்படவில்லை.
இவ்வாறு காணாமல் போனவர்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்கப்பட்ட போது அப்படி எதுவும் நடக்கவில்லை. அவர்களில் பலர் வெளிநாடு சென்று விட்டார்கள் என்று கூறியிருந்தார்.
தற்போது அதே கருத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களை மீட்டு தருமாறு கோரி இலங்கை வடக்கு கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே பிரதமர் காணாமல் போனவர்கள் தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
காணாமல்போனோரின் தொடர்பான சரியான விபரங்களை அறிய காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்படும். அண்மைக்காலங்களில் பொருளாதார காரணங்களுக்காக பலர் படகுகள் மூலம் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
காணாமல் போனதாகக் கூறப்படுபவர்களிலும் பலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றுள்ளமை தெரியவந்துள்ளதால் காணாமல் போனோர் தொடர்பான உண்மையான விபரங்களை அறிய முறையான கணக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டியது அவசியம்.
விரைவில் காணாமல்போனோர் அலுவலக சட்டத்தில் ஜே.வி.பி கோரியுள்ள திருத்தங்கள் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டு அவற்றுக்கு பாராளுமன்றில் அங்கீகாரத்தை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment