இளையராஜா பாலசுப்பிரமணியம் பிரச்சனைக்குள் அரசியல் புகுந்துவிட்டதாக செய்திகள் கசியத்தொடங்கியுள்ளன.
நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சனைகளில் மௌனம் காக்கும் பா.ஜ.க. இந்த விடயத்தில் மூக்கை நுழைத்துள்ளது.
நெடுவாசலில் மீண்டும் போராட்டம் ஆரம்பிக்க இருக்கிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் தாக்கப்படுவது தொடர்கிறது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் பல நாட்களாக வீதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்படி எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது இரு சினிமா கலைஞர்களின் ராயல்டி பிரச்சனையில் மூக்கை நுழைத்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கருத்து சொல்லியுள்ளார்.
இளையராஜாவின் பாடல்களை எஸ்.பி.பி பாடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனை எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. இந்த பிரச்சனை நல்ல முறையில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சிலர் தெலுங்கரான பாலசுப்பிரமணியத்திற்கு தெலுங்கரான வெங்கய்யா நாயுடு அரசியல் ரீதியாக ஆதரவளிப்பதாக கூறுகிறார்கள்.
ஆர்.கே.நகரில் பா.ஜ.க.வின் வேட்பாளராக போட்டியிடும் கங்கை அமரன் தனியார் தொலைகாட்சி ஒன்றில் இளையராஜாவை வெளுத்து வாங்கியுள்ளார். தாமரை சின்னத்தை தனது மேலாடையில் பொறித்திருந்த கங்கை அமரன் ''இளையராஜா இப்படி கேவலமாக பிச்சை எடுக்கவேண்டுமா? எதற்காக இப்படி பணத்தாசை? உன்னிடம் இல்லாத பணமா? எம்.எஸ்.விஸ்வநாதனிடமும் ஏனையவர்களிடமும் இருந்து நீ எடுத்து போட்ட டியூன்களுக்கு ராயல்டி கொடுத்தாயா? பரந்த மனம் வேண்டும்..இப்படி குறுகிய பேராசை பிடித்த பண்பு கூடாது'' என்று சாடியிருந்தார்.
''இளையராஜா ஆயிரம் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் என் தந்தை 2 ஆயிரம் பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். மற்றவர்கள் இசையில் அவர் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எனது தந்தை பாடியுள்ளார். நாங்கள் அந்த பாடல்களை வைத்து நிகழ்ச்சி நடத்திக் கொள்கிறோம்'' என்று பாலசுப்பிரமணியத்தின் மகனும் எஸ்.பி.பி.50 நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளருமான எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி ''நட்பின்படி பார்த்தால் ராஜா சார் செய்தது சரி இல்லை. சட்டப்படி நோட்டீஸ் அனுப்புவதற்கு பதில் போன் செய்து பேசியிருந்தால் பிரச்சனை சமூகமாக முடிந்திருக்கும். ஒரு பாடலை தியேட்டருக்கு வெளியில் பொது மக்களுக்காக பாடினால் அதற்கான ராயல்டியை வாங்கி இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டும்.
ஐபிஆர்எஸ் போன்ற ராயல்டி சொசைட்டிகள் இந்த பணியை செய்கின்றன. தனது ராயல்டிகளை கவனிக்க ஐபிஆர்எஸ் போன்ற நிறுவனங்களுக்கு ராஜா சார் அனுமதி அளிக்காத நிலையிலும் கூட ஒரு பாடல் அவருக்கு மட்டுமே சொந்தமாகாது.
ராஜா சார் ஒரு பொது நிகழ்ச்சியில் பாடினால் அந்த பாடல்களின் ராயல்டி சம்பந்தப்பட்ட பாடல் ஆசிரியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு செல்ல வேண்டும். பாடல் ஆசிரியர்களோ, தயாரிப்பாளர்களோ வக்கீல் நோட்டீஸ் அனுப்பினால் ராஜா சாரால் அவர்களின் அனுமதி இல்லாமல் பாடல்களை பாட முடியாது. இது பலருக்கு கசப்பாக இருந்தாலும் இந்த விஷயத்தை ராஜா சார் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதில் மகிழ்ச்சி'' என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் பின்னர் இளையராஜாவுக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்வளவு புகழ் பணம் அடைந்த பின்பும் இப்படி சின்னத்தனமாக நடக்கலாமா என்று பலரும் விமர்சிக்கிறார்கள். மற்றவர்களின் இசையை இளையராஜா பயன்படுத்தி இருக்கிறார். அப்படி இருக்கும்போது தனது பாடலை பிறர் பாட கூடாது என்று சொல்வது கேவலம் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதேவேளை பாலசுப்ரமணியம் இந்த விடயத்தை வேண்டும் என்றே பிரச்சனையாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
பணம்பண்ண தெரிந்த வியாபாரிகள்தான் எஸ்பிபி மகனுடன் இணைந்து இந்த இசைக் கச்சேரிகளை நடத்துகிறார்கள். அவர்களுக்கு காப்புரிமைச் சட்டம் நன்றாக தெரியும். இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும், அதை சட்டரீதியாக அணுகாமல், எஸ்.பி.பி. முகநூலில் பதிவிட்டு இளையராஜாவுக்கு எதிராக மக்கள் கருத்தை திருப்பிவிட்டுள்ளார் என்று சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பாலசுப்ரமணியம் நடத்தும் இந்த இசைக்கச்சேரிகள் இலவசமாக மக்களை மகிழ்ச்சிப்படுத்த நடக்கவில்லை.இலட்சக்கணக்கில் பாலசுப்ரமணியம் பணம் சம்பாதிக்கிறார். அந்த பணத்தில் ஒரு சிறு தொகைதான் ராயல்டியாக வரும். பாலசுப்ரமணியம் அந்த சிறு ராயல்டி தொகையை இளையராஜாவுக்கு கொடுத்துவிட்டு போகலாமே என்கிறார்கள் அவர்கள்.
0 comments:
Post a Comment