'நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க சதி நடக்கிறது' என்பது இலங்கையின் அதிபர் முதல் அமைச்சர்கள் வரை அரசாங்க சார்பாளர்கள் பலரும் இப்போது பொதுவாக சொல்லும் குற்றச்சாட்டாக உள்ளது. இது புதிய அரசாங்கம் நிலையில்லாமல் தவிக்கிறது, தனது செல்வாக்கு குறித்து பயப்படுகிறது என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கையும் நல்ல அபிப்பிராயமும் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியுள்ளது. கடந்த அரசாங்கத்திற்கும் அதிபர் மைத்திரி மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நால்லாட்சி அரசாங்கத்திற்கும் வித்தியாசம் இல்லை. எல்லோருமே ஊழல்வாதிகள்தான் என்று விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளன.
மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் தோற்கடிக்கப்பட முதல் காரணமாக இருந்தது ஊழல். இரண்டாவது காரணமாக இருந்தது மனித உரிமை மீறல் மிகுந்த அடாவடித்தனமான ஆட்சி.
சிங்கள மக்களைப்பொறுத்தவரை மனித உரிமை மீறல்கள் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருக்கவில்லை. காரணம் அதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களுமே.
அதிலும் இறுதி யுத்த காலத்தில் தமிழர்கள் உச்சக்கட்ட பாதிப்பை அடைந்தார்கள். ஏற்கனவே கொலைகள், கைதுகள், கடத்தல்கள், சித்திரவதைகள் என கொடுமைகளை அனுபவித்த தமிழர்களுக்கு இறுதி யுத்தம் மிகப்பெரிய அழிவை கொடுத்தது. எனவே தமிழர்களுக்கு மஹிந்தவின் ஆட்சியை அகற்றி பழி தீர்த்துக்கொண்டார்கள்.
சிங்கள மக்களின் பிரச்சனை என்பது ஊழலை மையப்படுத்தியதாக இருக்கிறது. விலைவாசி ஏறும் போது அடித்தட்டு, நடுத்தரவர்க்க மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். உணவு, அத்தியாவசிய தேவைகளில் செலவு அவர்களது வருமானத்தைவிட அதிகரிக்கும் போது மக்கள் அரசாங்கத்தின் மேல் வெறுப்பு கொள்கிறார்கள். வீதியில் இறங்கி போராட நிரப்பந்திக்கப்படுகிறார்கள். இதுதான் சிங்கள மக்கள் மஹிந்த அரசாங்கத்தின் மீது வெறுப்புக்கொள்ள காரணமாக இருந்தது.
ஆனாலும் முற்று முழுதாக எல்லா சிங்கள மக்களும் மஹிந்த அரசாங்கத்தின் மீது வெறுப்புக்கொண்டார்கள் என்று கூற முடியாது. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஸவையே ஆதரித்து இருந்தார்கள்.
அதிபர் தேர்தலில் சிங்கள பிரதேசங்கள், மகிந்தவிற்கு வழங்கிய மொத்த வாக்குகள் 31,40,971.
தற்போதைய அதிபர் மைத்திரிபாலவுக்கு வழங்கிய மொத்த வாக்குகள் 25,05,801.
அதாவது சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்ஷவிற்கு 6,35,170 அதிகப்படியான வாக்குகளை வழங்கியிருந்தனர்.
ஆனால் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒட்டுமொத்தமாக மைத்திரிபாலவை ஆதரித்து வாக்களித்ததால் மஹிந்த தோற்று மைத்திரி அதிபரானார்.
இந்த அடிப்படையில்தான் ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திர கட்சியும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய நல்லாட்சி அரசாங்கத்தை பார்க்கவேண்டியுள்ளது.
சிங்கள மக்களின் கதாநாயகனாக இருக்கும் மகிந்தவிற்கு மாற்றாக இருக்க கூடியவர்கள் அதற்குரிய தகுதியை கொண்டிருக்க வேண்டும். இங்கு தகுதி எனும்போது மகிந்த ஆட்சியில் இருந்த ஊழல் புதிய ஆட்சியில் இருக்க கூடாது. மகிந்த ஆட்சியில் நடந்த விலைவாசி உயர்வு புதிய ஆட்சியில் இருக்க கூடாது. இல்லாவிட்டால் எதற்காக புலிகளை தோற்கடித்து நாட்டை பாதுகாத்த எங்கள் மகிந்தவை விட்டுவிட்டு மைத்திரி ரணிலிடம் ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பது சாதாரண சிங்கள மக்களின் நியாயமாக இருக்கும்.
ஆனால் இந்த எதிர்பார்ப்பு புதிய ஆட்சியில் பொய்த்துப் போயிருக்கிறது.
விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி ஊழல் முதல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிகளில் சொகுசு வாகன இறக்குமதி வரை எல்லாமே மக்களது கோபத்தை தூண்டிவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐந்து கோடியில் சொகுசு வாகனமும், பிரதமர் ரணிலுக்கு ஐம்பது கோடியில் வாகனமும் வழங்க படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூவுகின்றன.
தினமும் ஏதாவது ஒரு போராட்டம் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
பென்ஷன் வெட்டு, வயோதிப உதவித்தொகை வெட்டு, தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்கும் முடிவு, போன்றவற்றால் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. மாணவர்கள், விவசாயிகள், வைத்தியர்கள், தொழிலாளர்கள், பிக்குகள் என பலரும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
இந்த போராட்டங்களுக்கு பின்னால் மகிந்த ராஜபக்ஷ இருக்கிறார் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
ஆனால் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத, சிறந்த ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க முடியாத புதிய அரசாங்கம் இதனை சாட்டாக கூற முடியாது.
இலங்கையின் வெளிநாட்டு கடன் வருடந்தோறும் அதிகரித்து செல்கிறது. தற்போது 10 இலட்சத்து 50 ஆயிரம் கோடி டொலர் கடன் உள்ளது.
ஏற்றுமதி வருமானத்தை விட இரண்டுமடங்கு இறக்குமதி செலவு உள்ளது.
குறிப்பாக புதிய அரசாங்கம் வந்த பின்னர் தொழில் துறைகள் வளர்ச்சி பெறவோ புதிதாக ஆரம்பிக்கவோ இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மகிந்த அரசாங்கம் ஊழல் செய்தாலும் கூட நாட்டை அபிவிருத்தி செய்தார்கள், வீதியமைத்தார்கள், பாலம் கட்டினார்கள், துறைமுகம் கட்டினார்கள். ஊழல் நடந்தாலும் செய்த அபிவிருத்தி பணிகள் கண்முன்னே காணக் கிடைக்கின்றன.
ஆனால் புதிய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்த அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் பெரும் சிக்கலில் மாறியுள்ளது. மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது என்பது உண்மையே.
ஆனால் ஒரு பக்க சார்பாக புதிய அரசாங்கத்தை முற்று முழுதாக குறை சொல்லவும் முடியாது.
அபிவிருத்தி பணிகளை, தொழில் துறைகளை நடப்பு அரசாங்கம் மேம்படுத்தாது விட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது என்று கூற முடிகிறது.
கடந்த ஆட்சியில் ஜனநாயகத்திற்கு மதிப்பு இருக்கவில்லை. ஊடக சுதந்திரம் இருக்கவில்லை. கருத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்பட்டது.
நீதித்துறை சுதந்திரமாக செயல்பட முடியாமல் மகிந்தவின் பிடியில் சிக்கி சீரழிந்தது. அரசியலமைப்பையே மாற்றி அதிபருக்கு அதிகாரம் அதிகரித்து மூன்றாவது தடவையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் மைத்திரி ரணில் தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த ஜனநாயக உரிமைகள் நிலைநாட்டப்படும் என்று தேர்தலில் அறிவித்ததுபோலவே பெருமளவு செய்துள்ளது.
சொன்னபடி அதிபருக்கு இருந்த மட்டற்ற அதிகாரங்களை குறைக்க அதிபர் மைத்திரிபால உடன்பட்டார். எத்தனையோ அதிபர்கள் வெறும் தேர்தல் வாக்குறுதியாக சொல்லிவிட்டு செய்யாமல் போனதை மைத்திரி செய்து வரலாற்றில் இடம்பிடித்தார். குறுகிய காலத்துல சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன, தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, நசுக்கப்பட்டிருந்த கருத்துரிமை, பேச்சுரிமை, ஊடக உரிமை மீண்டும் உயிர்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் சீரழிந்து கிடந்த இலங்கையின் மதிப்பு மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் சர்வதே அரசியலில் இலங்கைக்கு சார்பான நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி ஜனநாயக உரிமைகள் புதிய அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது உண்மையே.
அதேபோல சாதாரண பொது மக்கள் மத்தியில் புதிய அரசாங்கம் பெயரை கெடுத்துக்கொண்டுள்ளது என்பதும் உண்மையே.
- என்.ஜீவேந்திரன்.
0 comments:
Post a Comment