அரசியல்

விவசாயிகளுக்காக போராட்டத்தில் இறங்கும் இளைஞர்கள்



தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டம் உக்கிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து நெடுவாசலை மையமாகக்கொண்டு விவசாயிகளும் அமைப்புகளும் இளையவர்களும் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
பல நாட்கள் தொடர் போராட்டம் இடம்பெற்ற நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பல முயற்சிகளை மேற்கொண்டார். மக்கள் விரும்பாத வரையில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என அவர் உறுதியளித்தார். மத்திய அரசுடன் பேச்சு நடத்தவும் ஏற்பாடு செய்வதாக கூறிய உறுதி மொழியை நம்பி போராட்டம் இடை நிறுத்தப்பட்டது.

ஆனால் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட மத்திய அரசு கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்ப நிறுவனமான ஜெம் லாபரெட்டரீஸிற்கு நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கோபத்தில் உள்ளனர்.

அதேபோல காவேரி மேலாண்மை அமைப்பது, வறட்சி நிவாரணம், பயிர்களுக்கான கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரு வாரங்களை கடந்த நிலையிலும் மத்திய அரசு தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு வழங்க முன்வரவில்லை.

இந்த நிலையில் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று வாதம் மக்களிடையே உக்கிரமடைந்து வருகிறது.

மத்திய அரசின் அலட்சியமான போக்கினால் கோபமடைந்துள்ள தமிழக இளையவர்கள் விவசாயிகளுக்காக போராட ஆரம்பித்துள்ளனர்.
நேற்று மெரினாவில் கூடிய இளைஞர்களை போலீசார் கலைத்துள்ளனர். இருந்த போதும் இளையவர்கள் மெரினாவில் கூடி போராடும் முடிவில் உள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் அழைப்பை விடுத்துள்ளனர்.

இதேவேளை ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டங்களை நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. காவிரி உரிமை மீட்புக்குழு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

விவசாயிகள், அரசியல் அமைப்புகள், மாணவர்கள், வணிகர் சங்கங்கள் இணைந்து இந்த காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் அமைச்சர் உமாபாரதி ஆற்றுநீர் பிரச்னைகளைத் தீர்க்க ஒற்றை தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனால் ஏற்கெனவே உள்ள காவிரி தீர்ப்பாயம் கலைக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்பு இனிமேல் இல்லாது போகவுள்ளது.

இது தமிழக விவசாயிகளை கடுங்கோபம் கொள்ள வைத்துள்ளது. இந்த நிலையில் தான் மீத்தேன் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி இருக்கிறது. அதே போல டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு இரு வார காலமாக வீதியில் போராட விட்டு அழகு பார்க்கிறது. இதனால் தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உச்சத்தில் உள்ளனர்.

இத்தனை பிரச்சனைகள் இருக்கும் நிலையில் தமிழக அரசு செயலிழந்து போயுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் வெல்வதை மட்டும் குறியாக கொண்டு இயங்கி வருகிறது.

எனவேதான் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து நிர்ப்பந்திக்கும் வகையில் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறை போராடும் மக்களை கலைந்து செல்லுமாறு மிரட்டி வருகிறார்கள்.

இந்த சூழலில் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டி தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஏப்ரல் 3ம் தேதி நடத்தப்படும் இந்த வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் பரிபூரண ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

வறட்சி, வங்கி கடன், விவசாய பொருட்களின் விலை ஏற்றம், விளை பொருட்களுக்கான நியாயமான விலை இல்லாமை, காவிரி நீர் தடைப்பட்டுள்ளமை போன்றவற்றால் எரிந்து கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளது பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் எண்ணெய் ஊற்றியுள்ளன.

இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். தமிழக காவல் துறை மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் ஒன்று கூடி விடாமல் தடை போட்டு செயல்பட்டு வருகிறது. அதையும் தாண்டி இளையவர்கள் போராட்டத்தை நடத்துவதில் உறுதியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.