''படையினர் திட்டமிட்ட வகையில் எவ்விதமான குற்றங்களையும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. போர் நடந்த போது உண்மையிலேயே சாதாரண சூழல் நிலவவில்லை. அந்த நேரம் குழப்பகரமான சூழலே நிலவியது. சில நேரங்களில் ஆங்காங்கே ஒருசில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக்கூடும். ஆனால் அவற்றுக்கு சர்வதேச விசாரணைகள் எதுவும் அவசியமில்லை. நாட்டில் ஏற்கனவே இருக்கின்ற இராணுவ, சிவில் நீதிமன்றங்கள் மூலமாக அவற்றை விசாரிக்கலாம்'' என்று கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே கோட்டபாய ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
''பழைய விடயங்களை கிளறுவதால் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை. அத்துடன், பொதுமக்களை இலக்குவைத்து புலிகள் நடத்திய தாக்குதல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என சிங்கள மக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள்கள் வரலாம். அப்படி வந்தால் இரண்டு தரப்பும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கான சமாதான சூழல் இல்லாமல் போகும்'' என்று அவர் மேலும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர்கள் நாங்கள் எங்களுடைய பிள்ளைகளை இராணுவத்திடம் விசாரணைக்காக ஒப்படைத்தோம். அதன்பின் அவர்களைக் காணவில்லை என்று கூறுவது பற்றி கோட்டபாய ராஜபக்ஸவிடம் கேட்கப்பட்ட போது அவர் அதனை முற்றுமுழுதாக மறுத்து அது தவறான கருத்து என்று கூறியுள்ளார்.
''போர் குற்றம் தொடர்பில் விசாரிக்க விசேட நீதிமன்றம் தேவையில்லை. உள்நாட்டு நீதிபதிகளை உள்ளடக்கியதோ, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கியதோ எந்த விசேட நீதிமன்றமும் தேவையில்லை. விசேடமாக எந்தவொரு பொறிமுறையும் தேவையில்லை. இராணுவத்திடம் இராணுவ நீதிமன்றம் என்ற ஒரு சட்டமுறை இருக்கிறது. அத்துடன், இலங்கையில் சிவில் நீதிமன்றங்கள் இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தலாம்.
இந்த நீதிமன்றங்களிலிருந்து நீதி கிடைக்காது என்று தமிழ் மக்கள் நினைத்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
இதேவேளை இதே இராணுவ நீதி மன்றத்தை வைத்தே ராஜபக்ஸ குடும்பத்தினர் சரத் பொன்சேகாவை குற்றவாளி என்று சிறையில் அடைத்தார்கள். மஹிந்த ராஜபக்ஸவுக்கு போட்டியாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக சரத் பொன்சேகா பழிவாங்கப்பட்டார்.
இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு 30 மாத கால சிறைத்தண்டனை வழங்கியது. இராணுவத்தில் கடமையாற்றிய போது அரசியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அத்தோடு ராஜபக்ஸ சகோதர்கள் விடவில்லை.
தமது அதிகாரத்தை வைத்து கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் சரத் பொன்சேகாவுக்கு எதிரான தீர்ப்பை பெற்றார்கள்.
சரத் பொன்சேகா ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
போலீஸ் முதல் நீதிமன்றங்கள் வரை எல்லாமே ராஜபக்ஸ சகோதர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் அது. ஒன்றரை வருடங்கள் நடந்த வழக்கில் எல்லோரும் எதிர்பார்த்தபடி சரத் பொன்சேகா குற்றவாளி என்றே தீர்ப்பு வெளியானது. 36 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment