''இலங்கை அரசாங்கம் இன்னும் ஏராளமான பணிகளை செய்ய வேண்டியுள்ளது. போர்க்குற்ற விசாரணைகள் நடக்க வேண்டும். அதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய, கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். இந்த நிலைப்பாட்டில் எம்மிடம் எந்த மாற்றமும் இல்லை''. இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைன் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் நேற்று தனது உத்தியோகபூர்வ அறிக்கையை முன் வைத்து உரையாற்றியபோதே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் செய்ட் ராட் அல் ஹுசைன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
''பாதிக்கப்பட்ட மக்களிடம் அமைதியின்மை அதிகரித்து வருகிறது. இதுபற்றி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை போக்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பான சட்ட நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை உடனடியாக செயல்பட வைத்து காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும்'' என்று மேலும் தனது உரையில் கூறிய ஆணையர் ''இலங்கை தொடர்பாக தமது அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளுமே முக்கியமானவை'' என்று சுட்டிக்காட்டினார்.
''இராணுவம் பிடித்து வைத்துள்ள மக்களின் நிலங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கை மிகவும் மெதுவாகவே நடக்கிறது. நடந்த வன்முறைகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதி வழங்கும் நடவடிக்கையில் நம்பிக்கையீனம் உள்ளது. எனவே சர்வதேச பங்களிப்பு தேவையாக உள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் நீதி கிடைத்ததாக உணரவேண்டும். அப்போதுதான் உண்மையான அமைதி ஏற்படும். இவ்வாறான கடமைகள் உள்ளன என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்தும். பேரவை உதவிகளை வழங்கும் அதே சமயம் கண்காணிப்பையும் மேற்கொள்ளும்'' என்றும் ஆணையர் இலங்கை அரசாங்கத்துக்கு எடுத்துரைத்தார்.
இதற்கு பதிலளித்த இலங்கை துணை வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ''மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட ஸ்ரீலங்கா உறுதி பூண்டுள்ளதாக'' தெரிவித்தார்.
''மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. எந்த நாட்டிலும் மனித உரிமைகள் ஆவணம் முழுமையானதல்ல. எந்தவொரு நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும்.
கடந்த காலத்தில் இலங்கை மக்கள் மிகவும் சிரமமமான, துயரமான காலகட்டத்தை சந்தித்திருந்தனர். அவர்களின் துன்பத்தைப்போக்க நிறைய பணிகள் நடந்திருந்தாலும், இன்னும் செய்யவேண்டிய பணிகள் உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பொறுப்பான ஓர் அரசாங்கம் என்ற வகையில் இப்பணிகள் செய்து முடிக்கப்படும்'' என்றும் இலங்கை துணை வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா உறுதியளித்துள்ளார்.
மேலும் ''இலங்கையில் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கவும் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இதுகுறித்து அச்சப்படதேவையில்லை'' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் வழங்கப்பட்ட 15 மாத கால அவகாசத்தை அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே மீண்டும் கால அவகாசத்தை கொடுப்பது பயனற்றது. அப்படி கொடுப்பதால் இலங்கை காலத்தை இழுத்தடித்து சமாளித்து மழுப்ப வாய்ப்பு கொடுப்பதாக அமைந்துவிடும் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், கஜேந்திர குமார் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
கால அவகாசத்தை கொடுக்காது விட்டால் இலங்கை செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் விட்டுவிடும். எனவே கால அட்டவணையும் ஐ.நா.வின் கண்காணிப்பும் உள்ள கால அவகாசத்தை கொடுத்து செய்ய வேண்டியவற்றை கட்டாயம் செய்ய வைக்க வேண்டும் என்று சுமந்திரன் போன்ற அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
எப்படியோ இலங்கைக்கு மேலும் இரண்டு வருடங்கள் கால அவகாசம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment