அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.
இரட்டை இலையை அடைவதற்கு ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் பெரும் போரில் ஈடுபட்டிருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் இன்று காலை ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் தேர்தல் சின்னமாக கொடுத்துள்ளது. ஓபிஎஸ் அணியினரின் கட்சிக்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரையும் வழங்கியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் சசிகலா தரப்பு அதிமுகவுக்கு ஆட்டோ சின்னம் வழங்கியது. ஆனால் அதனை ஏற்க மறுத்த சசிகலா தரப்பு தொப்பி சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கோரியது. அதன்படிதினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா அணியினர் கட்சிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மனோஜ் பாண்டியன், இரட்டை இலை சின்னம் போல தோற்றமளிக்கும் இரட்டை விளக்கு கம்பம் கிடைத்தது எங்களின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மாலை 5 மணிவரை இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் இரவு 11 மணிக்கு அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலையை முடக்குவதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இரட்டை இலை சின்னம் இருதரப்பிற்கும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும் பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான். இருத்தரப்பினரும், நியாயமாக நடந்து கொள்ளவே இப்படியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 12ம் திகதி ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நடக்கவுள்ளது. ஓபிஎஸ் தரப்பும் சசிகலா தரப்பும் எப்படியாவது இந்த தேர்தலில் வெல்வதன் மூலம் அ.தி.மு.க. வை கைப்பற்றலாம் என்று முயற்சி செய்கின்றன. சசிகலா தரப்பு இரட்டை இலையை சொந்தம் கொண்டாடுவதும், தேர்தலில் பயன்படுத்த முயற்சி செய்ததும் ஓபிஎஸ் அணிக்கு பின்னடைவாகவே இருந்தது. இந்த நிலையில் இந்த இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்பு ஆர்.கே.நகர் தேர்தலில் பயன்படுத்த முடியாமல் முடக்கியது பன்னீர் தரப்புக்கு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் இரு தரப்புமே தேர்தல் ஆணையம் கொடுக்கும் வேறு ஏதாவது ஒரு சின்னத்தில்தான் போட்டியிடப்போகின்றன.
குறிப்பாக டிடிவி தினகரன் இரட்டை இலையை பெரிதும் நம்பியிருந்தார். தற்போது ஓபிஎஸ் அணியின் வியூகத்தால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தேர்தலில் இருந்து பின்வாங்கவும் முடியாது. ஏற்கனவே தொகுதியில் சசிகலா தரப்புக்கு நல்ல பெயர் இல்லாத நிலையில், இந்த இப்போது இரட்டை இலையும் முடக்கப்பட்டது ஓபிஎஸ் அணிக்கு வெற்றியாகவும் தினகரனுக்கு தோல்வியாகவுமே அமைந்துள்ளது. இதில் சசிகலா தரப்புக்காக சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம், மோகன் பராசரன் ஆகியோர் வாதாடி இருந்தனர்.
சசிகலா ஆதரவாளரான சுப்ரமணிய சாமி இரட்டை இலை சசிகலா தரப்புக்கு தான் சொந்தம் என்று கூறிவந்தார். சசிகலா தரப்புக்கு ஆதரவு திரட்டும் வேலையை சாமி டெல்லியில் செய்து வந்திருந்தார்.
தினகரன் சுப்ரமணிய சாமியை சந்தித்து பேசிய பின்னர் இரட்டை இலை எங்களுக்குத்தான் என்று உறுதியாக சொல்லியிருந்தார்.
இந்த இரட்டை இலை விவகாரத்தில் ஆதரவு கோரி காஞ்சி சங்கரமடத்திற்கும் தினகரன் சென்றிருந்தார்.சங்கரமடத்தின் ஆதரவும் சசிகலா தரப்புக்கே என்று சொல்லப்படுகிறது.
சசிகலா பொதுச்செயலாளர் ஆனது செல்லாது. தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆனது செல்லாது. அப்படி ஒரு பதவியே அ.தி.மு.க.வில் இல்லை. ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்ட சசிகலா, 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்க முடியும். அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின்மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர்தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். டிடிவி தினகரன்மீது ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல்ஆணையர் நசீம் ஜைதியை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த முயற்சிகளின் பலனாக தற்போது தினகரன் இரட்டை இலையை பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது. இதையடுத்து பன்னீர் தரப்பு ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெல்வது குறித்து கலந்துரையாடி வருகிறது.
சரியான கணிப்பு ஜீவேந்திரன்..
ReplyDeleteஉண்மையாகவே இரட்டையிலை சின்னம் சசிகலா அணிக்கு கிடைக்க கூடாது என்பதில், பன்னீர்செல்வம் அணி வெற்றியடைந்துள்ளது. இவர்கள் இன்னும் ஆர்வமாக செயல்படுவார்கள்.