ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் ஒப்புதலுடன் 2015 ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழர் தரப்பு கூறுகிறது. அவற்றை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை சார்பான இன்னொரு தரப்பு கூறுகிறது.
இந்த நிலையில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை என்ன சொல்ல போகிறது என்பதே எல்லா தரப்புகளினதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இலங்கை அரசாங்கம் ஐ.நா.விடம் கால நீட்டிப்பு கேட்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அப்படி எந்த வேண்டுகோளையும் முன்வைக்கவில்லை.
மாறாக கடந்த 15 மாத காலத்தில் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன செய்தது? அதற்காக முகம் கொடுத்த சவால்கள் என்ன? என்பதை அவர் வெகு இயல்பாக பேசிவிட்டு போயிருக்கிறார். கால நீட்டிப்பை தாம் கேட்கவேண்டியதில்லை ஐ.நா.வே தங்களுக்கு தரும் என்ற அலட்சியமான நம்பிக்கை அவரிடம் இருக்கிறது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் இப்படி இருக்க காரணங்கள் இல்லாமலும் இல்லை. போர் முடிந்த பின்னர் போர் குற்றத்திற்கு ஊழலுக்கும் காரணமான இருந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவியிழந்தது. இந்திய மேற்குலக சார்பு மைத்ரி-ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்தது. நல்லாட்சியே தமது வழி, இனவாதிகளின் பெருத்த சவால்களுக்கு முகம் கொடுத்தே அந்த வழியில் தாம் பயணிப்பதாக இந்த அரசாங்கம் வெளிக்காட்டுகிறது. இதற்கு சர்வதேச ஆதரவும் தாராளமாக உண்டு.
எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தை சிக்கலில் போடுவதுபோல எதையும் ஐ.நா. செய்யப்போவதில்லை என்பது தெளிவு.
மனித உரிமைவாதிகளும், தமிழர் தரப்பும் இலங்கை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சியமாக இருப்பதாகவும் இதனை ஐ.நா. கண்டிக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.
ஆனால் சர்வதேசம் முன்பு போல இலங்கை விடயத்தை பார்ப்பதில்லை என்பதை காண கூடியதாக உள்ளது. இந்த பிரச்சனையை இலங்கைக்கு உள்ளேயே தீர்த்துக்கொள்வதையே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. வேறொரு விதமாக சொன்னால் சர்வதேசம் கைகழுவிவிட தருணம் பார்த்து நிற்கிறது.
2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.
ஜெனிவாவில் சர்வதேசத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட விடயத்தை கொழும்பில் காற்றில் பறக்கவிட்டது இலங்கை அரசாங்கம்.
போர் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை. அதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரி வெளிப்படையாக தெரிவித்தார்.
தற்போது மங்கள சமர வீர தனது உரையில் போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து வாய் திறக்கவில்லை. விசாரணையில் கலப்பு பொறிமுறை குறித்து அறவே பேசாமல் வேண்டும் என்றே தவிர்த்துள்ளார்.
நிச்சயமாக இலங்கை அரசாங்கத்தை பாதிக்கும் எந்த தீர்மானத்தையும் ஜெனிவாவில் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பதை இலங்கை அரசாங்கம் நன்றாக அறிந்து வைத்திருப்பதையே இது காட்டுகிறது. சர்வதேசம் எப்படியோ இந்த பிரச்னையை இலங்கையின் தலையில் கட்டிவிட்டு நழுவ தருணம் பார்த்திருக்கிறது என்பதையும் இலங்கை அரசாங்கம் அறிந்திருக்கலாம்.
0 comments:
Post a Comment