கட்டுரைகள்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலும் சிக்கல்களும்



தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் அணி வெற்றி பெற்றுள்ளது. விஷால் அணிக்கு 478 வாக்குகளும் ராதாகிருஷ்ணன் அணிக்கு 335 வாக்குகளும் கேயார் அணி 224 வாக்குகளும் கிடைத்துள்ளன.
இந்த தேர்தல் நேற்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றிருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறும். கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தினர் கடந்த  இரண்டு ஆண்டுகள் நிர்வாகத்தை நடத்தியிருந்தனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீண்ட காலமாகவே பிரச்சனைக்குரிய அங்கமாகவே இருந்து வருகிறது.

எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு சார்பானவர்களே நிர்வாகத்தை கைப்பற்றி வைத்திருந்தனர்.
அரசாங்கத்தின் தயவு இருந்தால்தான் உதவிகள் கிடைக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது.
தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ராமநாராயணன் தலைமையில் நிர்வாகம் இருந்தது.

அதிமுக வந்தவுடன் கேயார் தலைமைக்கு வந்தார். பின்னர் எஸ்.தாணு தலைமையை கைப்பற்றினார்.
நிர்வாகத்தை நடத்திய எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. யார் நிர்வாகத்தில் இருந்தாலும் கோஷ்டி பூசல் இருந்தே வருகிறது.

நிர்வாகத்தில் இருக்கும் கோஷ்டி அதிகாரத்தை பயன்படுத்தி தமக்கும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் சலுகைகளை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள்.
உதாரணமாக 35 வருடங்களுக்கு மேலாக தாணுவுக்கு கிடைக்காமல் இருந்த ரஜினிகாந்தின் கால்ஷீட் தலைவராக வந்த பின்னர்தான் கிடைத்தது. இதனால் பிரச்சனைகள் மோதல்கள் அடிக்கடி இடம்பெறும்.

முன்னாள் தலைவர் எஸ்.தாணு செயலாளர் டி.சிவா போன்றவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்தனர் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
பணத்தை லஞ்சமாக வாங்கிக்கொண்டும், தமக்கு சார்பானவர்களுக்கு வேண்டியும் பலரை மிரட்டி இவர்கள் கட்ட பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் என்று பார்க்கும் போது சுமார் 90 வீதமானவர்கள் சிறுபட தயாரிப்பாளர்களாகவே இருக்கிறார்கள். சினிமா மீது கொண்டுள்ள ஆசையாலும் கவர்ச்சியா  லும் தமது சொத்துக்களை விற்றும், வட்டிக்குபணம்  வாங்கியும் படம் எடுக்கின்ற இந்த சிறுபட தயாரிப்பாளர்களே தமிழ் சினிமாவை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களால்தான் சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள்களுக்கு வேலை கிடைக்கிறது. படப்பிடிப்பு நடந்தால்தான் இந்த தொழிலாளர்களின் வீடுகளில் அடுப்பெரியும்.

ஆனால் கடந்த ஒன்பது வருடங்களாக தமிழக அரசாங்கத்தால் முறையாக திரைப்பட மானியம் வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபட தயாரிப்பாளர்கள் தான்.

சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க, தரமான படங்களுக்கு தமிழக அரசாங்கம் மானியம் வழங்கி வந்தது. நல்ல கருத்துக்களைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும், போன்ற தகுதிகளை கொண்ட படங்களை மானியக்குழு பார்த்து மானியம் வழங்குவதை முடிவு செய்யும்.

திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிச்சலுகை கொடுத்தது. அதனால் மானியங்கள் நிறுத்தப்பட்டன. இந்த சூழலில் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு திரைப்படங்களுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விதிக்கப்பட்டது.
ஆனால் ஆளும் கட்சிக்கு சார்பான தயாரிப்பாளர்களின் படங்களுக்கு கேளிக்கை வரி விதிக்கப்படவில்லை.

சுமார் 400 படங்களுக்கு மேல் இதுவரை மானியம் வழங்கப்படாமல் உள்ளதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குறிப்பிட்டிருந்தனர். சிலர் 700 படங்கள் என்று கூறுகின்றனர். இவ்வளவு படங்களையும் பார்த்து மானியம் வழங்க இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மேலும் அவ்வளவு படங்களுக்கு மொத்தமாக மானியம் வழங்க பெரும் நிதி தமிழக அரசாங்கத்திற்கு தேவைப்படும்.

சிறிய படங்களுக்கு திரையரங்கங்கள் கிடைப்பது அடுத்த பெரும் பிரச்சனையாக உள்ளது. பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகைக்காலங்களிலும் வருடத்தில் 12 வெளியீட்டு திகதிகளிலும் தான் வெளியாக வேண்டும் என்று முடிவு இருந்தாலும் யாரும் அதை மதித்து நடப்பதில்லை. இதனால் நல்ல கதையம்சத்துடன் மக்கள் வரவேற்புடன் ஓடும் படங்கள் கூட பெரிய படம் வந்தவுடன் திரையரங்கை விட்டு தூக்கப்படுகின்றன.

சொத்துக்களை விற்று வட்டிக்கு வாங்கி படமெடுக்கும் சிறுபடத்தயாரிப்பாளர்களின் படங்களுக்கு திரையரங்கங்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் காத்திருக்கவேண்டியுள்ளது.

பெரிய படங்களே அறிவித்த நாளில் வெளியாக முடியாமல் பின் போடப்படுவதும் திடீர் என வெளியிடப்படுவதும் நடக்கிறது. இந்த நிலையில் சிறிய படங்களின் வெளியீடு சொன்ன திகதியில் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

ஒரு சில நாட்கள் தாமதமானாலே சிறுபடத்தயாரிப்பாளர்களுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒருபுறம் வட்டி ஏறும். மறுபுறம் விளம்பர செலவு ஏறும். இதற்கிடையே வெளியாவதில் தாமதம் ஏற்பட ஏற்பட படம் குறித்த ஆர்வம் மக்களிடம் இல்லாமல் போகும். எனவே அதை தக்கவைக்க மேலும் விளம்பரம் தேவைப்படும். அதற்கு மேலும் கடன்வாங்க வேண்டி வரும்.

பெரும்பாலான சிறுபடத்தயாரிப்பாளர்கள் சினிமா தயாரிப்பு குறித்த அனுபவம் இல்லாதவர்கள். சினிமா கவர்ச்சியால் எப்படியோ பணத்தை புரட்டிக்கொண்டு சென்னை வந்துவிடுவார்கள். ஆனால் அவர்களை ஆட்டையை போட ஒரு கூட்டம் காத்திருக்கும். அவர்களிடமும் தப்பி படத்தை தயாரிக்க தொடங்கினால் நடிகர் நடிகை முதல் இயக்குனர் வரை பலரும் ஏழரையை கூட்டுவார்கள். அதையும் தாண்டி படத்தை முடித்துவிட்ட பிறகு அதை வெளியிட முடியாமல் போவதும் அல்லது பிந்திய வெளியீடும் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தையே கொடுக்கும். இப்படி படத்தயாரிப்பில் ஈடுபட்ட பலர் இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

இப்படியான சிறுதயாரிப்பு படங்களின் முக்கிய வருமான எதிர்பார்ப்பு சட்டலைட் வியாபாரம். அதுவும் அவர்களுக்கு சரியாக கிடைப்பதில்லை. தொலைக்காட்சிகளின் வணிக மற்றும் ஏனைய பொறுப்பில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் லஞ்சம் மிக அதிகம்.

மேலும் தமிழகத்தில் வருடத்திற்கு 200 முதல் 250 படங்கள் வெளியாகின்றன. ஆனால் நல்ல திரையரங்குகள் சுமார் 750 தான் உள்ளன. குறைந்த இருக்கைகள் கொண்ட திரையரங்குகள் அதிகரிக்கப்படவேண்டியுள்ளது.
டிக்கெட் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய செலவுகளால் மக்கள் திரையரங்குக்கு வர தயங்குகிறார்கள்.
நாலு பேர் திரையரங்குக்கு போனால் 1000 ரூபாவுக்கு மேல் தீட்டிவிடுவார்கள்.

எனவேதான் மக்கள் திருட்டு விசிடியில் படம் பார்க்க விரும்புகிறார்கள். 20 ரூபாவுக்கு சிடி வாங்கி முழு குடும்பமும் பார்த்து விடுகிறது.

இவ்வாறு ஏராளமான பிரச்சனைகள் இருந்த நிலையில் தான் நேற்று இடம்பெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல் முக்கியத்துவம் பெற்றது.

இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன.

விஷால் தலைமையில் 'நம்ம அணி' போட்டியிட்டது. இந்த அணியில் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ மேனன் போன்றோர் போட்டியிட்டனர்.

ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி போட்டியிட்டது. இந்த அணியில் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன், விஜயமுரளி போன்றோர் போட்டியிட்டனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த அணியில் ஏ.எம்.ரத்னம், பி.டி.செல்வகுமார், ஏ.எல்.அழகப்பன், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.கதிரேசன் போன்றோர் போட்டியிட்டனர்.

தேர்தலில் வென்ற விஷால் அடுத்த இரு வருடங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பொற்காலமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இதேவேளை நடிகர்களின் சம்பளம் மிக பெரிய சுமையாக மாறியுள்ளது. தங்களது வசூல் தகுதிக்கும் அதிகமாக நடிகர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். படத்தின் பட்ஜெட்டில் அரைவாசிக்கும் மேல் நடிகர்களின் சம்பளமாக போய்விடுகிறது.

மூன்று நாளில் 200 கோடிக்கும் மேல் வசூலிக்கும் ஹிந்தி படங்களின் கதாநாயகர்களை விட தமிழ் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள். கேரளா நடிகர்கள் தாமாகவே சம்பளத்தை முன்பு குறைத்துக்கொண்டார்கள்.
ஆனால் தமிழ் நடிகர்கள் தமது படங்கள் வசூலை வாரி குவிப்பதாக காசு கொடுத்து எழுதவைக்கிறார்கள்.

மறுபுறம் மக்கள் திரையரங்குகளுக்கு வரவே அஞ்சுகிறார்கள். ஒரு டிக்கெட்டின் விலை நூறை தாண்டுகிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு தியேட்டர் நிர்வாகமே 300 முதல் 500 வரை விற்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் பார்க்கிங் கட்டணம், உச்ச விலையில் விற்கப்படும் உணவு, குடிவகை என்று சுமார்  1000 ரூபாவுக்கு மேல் வேட்டு வைத்துவிடுகிறார்கள். இப்படி இருந்தால் மக்கள் எப்படி திரையரங்குக்கு வருவார்கள் என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுப்பப்படுகிறது.

ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத திரையுலகினர் திருட்டு விசிடிக்கு எதிராக முஷ்டியை முறுக்குகிறார்கள். விஷால் வெற்றிபெற்றதும் தமிழ் ரொக்கர்ஸ்க்கு  நீயா நானா என்று பார்த்து விடுவோம் என்று சவால் விட்டிருக்கிறார்.

ஆனால் மக்கள் திரையரங்குக்கு வராதவரை யாரும் வெற்றி பெறமுடியாது என்பதே யதார்த்தம்.

- என். ஜீவேந்திரன்





1 comments:

  1. யதார்த்த நிலைமை பற்றி பேசுகின்றது இந்த கட்டுரை, அருமை.

    ReplyDelete

Powered by Blogger.