அரசியல்

மோடியின் மாட்டு அரசியல் - சாணியில் சிக்கியுள்ள இந்தியா



மோடியின் 'மாட்டு அரசியல்' நாளுக்கு நாள் இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.

மோடியின் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், நாட்டின் வளர்ச்சியை, பொருளாதார மேம்பாட்டை, சமூக ஏற்றத்தாழ்வுகளை, மக்கள் பிரச்சனைகளை எல்லாம் விட்டு விட்டு மாட்டை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள்.

பசுக்களை கொலை செய்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சத்தீஸ்கரில் கடந்த 15 ஆண்டுகளில் ஒரு பசு கூட கொல்லப்படவில்லை. சத்தீஸ்கரில் பசுக்களை கொலை செய்பவர்கள் தூக்கிலிடப்படு வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் தற்போதைய சட்ட விதிகளின்படி பசுக்களை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

குஜராத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை, கடத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் ஹரியாணா, ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பசுவதையை தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்ட விரோத இறைச்சி கூடங்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மோடியின் பாஜக அரசாங்கம், உலகிலேயே வறுமையான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல  அறிவுபூர்வமாக செயல்படாமல் மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வன்முறையின் விளிம்பில் வைத்து ஆட்சி செய்கிறது.

மில்லியன் கணக்கான இந்திய மக்கள் வீடில்லாமல் அடிப்படை வசதிகள் இல்லாமல் வீதியில் உறங்குகிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். சாதி மோதல்களால் மக்கள் கொல்லப்படுகிறார்கள். காஷ்மீரில் போராட்டம் தொடர்கிறது. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் தொழில் வாய்ப்பில்லாமல் அலைகிறார்கள். பெண்கள் மீது வன்முறைகள் நிகழ்கின்றன. இவற்றையெல்லாம் தீர்க்க மோடி அரசாங்கத்திற்கு நேரம் இல்லை.

மோடி தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை குறைப்போம், சுவிஸ் நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை கொண்டுவருவோம், ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சம் செலுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார்.

மோடி 500, 1000 பண தாள்களை செல்லா காசாக்கி கருப்பு பணத்தை ஒழித்து விட்டதாக சொன்னார். மக்களோ ஏடிம் வாசலில் வரிசையில் நின்றார்கள். சிறு தொழில்கள் முடங்கின. பொருளாதார பாதிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையால் எந்த கோடீஸ்வரரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. கருப்பு பணத்தை ஒழிப்பதாக சொல்லி மோடியால் சாதாரண மக்களின் வயிற்றில்தான் அடிக்க முடிந்தது.

இந்திய விவசாயிகள் தண்ணீர் இல்லாமலும், விவசாய பொருட்களின் விலை ஏற்றத்தாலும், விளைபொருட்களுக்கு சந்தையில் சரியான விலை கிடைக்காததாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் போயுள்ளது. ஆனால் வங்கிகளோ வட்டிக்கு மேல் வட்டி போட்டு விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளிவிடுகின்றன.

இந்த சூழலில் தமது ரூ.50 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும்படி விவசாயிகள் கோருகிறார்கள். அதனை செய்ய மோடி அரசாங்கம் முன்வரவில்லை. ஆனால் 50 பணக்காரர்கள் வாங்கிய ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இதைவிட நாட்டு மக்களுக்கு எதிரான செயல் வேறு ஏதாவது இருக்கமுடியுமா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் இப்படி அவசியமான மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத மோடி அரசாங்கம் மாட்டை கோமாதா என்று மாட்டு அரசியல் அரசியல் செய்கிறது.

''ஒரு விலங்கு எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்? எருது, ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் பாலையும் குடிக்கிறோம். அப்படியென்றால் அவைகளும் நமக்கு தாயா?'' என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்லவேண்டிய மோடி அரசாங்கம், இந்தியாவை மாட்டின் சாணியில் சிக்கித் தவிக்க விட்டுள்ளது.

- என். ஜீவேந்திரன்

0 comments:

Post a Comment

Powered by Blogger.