அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோரின் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனை ஆளுந்தரப்புக்கு பெரும் சிக்கலை தோற்றுவித்திருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்''இதுவரை வருமான வரித்துறை சோதனைக்குள்ளான கரூர் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி, ராம்மோகன்ராவ் உள்ளிட்ட அனைவர் மீதும் எந்த தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வருமான வரித்துறை சோதனைகள் ஏதோ அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணம் போலவே 'மர்மமாக' இன்னும் நீடிக்கிறது'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரியுள்ளன.
ஆனால் ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய தினகரன், ''வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லை. தேர்தலை தள்ளி வைக்கும் வேலை தான் தற்போது நடந்து வருகிறது. மேலும் பொதுவாழ்வில் எதிரிகள், சூழ்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதை கண்டு நாங்கள் பயப்படப்போவதில்லை. என்ன நடந்தாலும் சந்திக்க தயார். எப்போது தேர்தல் நடந்தாலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நாங்கள் ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றவர்கள் என்பதால் எங்களுக்கு அச்சமில்லை'' என்று சவால்விட்டுள்ளார்.
இதேவேளை நேற்று சுமார் 35 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் விஜய பாஸ்கரின் வீடுகள், அலுவலங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிக்கியுள்ள ஆவணங்களில் வாக்காளர்களுக்குப் பணம் அளிப்பது தொடர்பான ஆவணங்கள் என்று சொல்லப்படுபவையும் வெளியாகியுள்ளன. அவற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒரு ஓட்டுக்கு 4,000 ரூபாய் வரை வழங்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர்த் தொகுதியைப் பாகம் பாகமாகப் பிரித்து 85 சதவீத வாக்களர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி 89 கோடி ரூபாய் வரை செலவிட கணக்கிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் போலியானவை என ‘அதிமுக அம்மா’ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை என்னுடைய வீட்டிலிருந்து வருமானவரித் துறை அதிகாரிகள் எதையும் பறிமுதல் செய்யவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.
சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு வருமானவரித்துறையினர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோது தளவாய் சுந்தரம் தலைமையில் திரண்ட அதிமுகவினர் தங்களையும் வீட்டுக்குள் அனுமதி வழங்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து வெளியே வந்து, "அதிகாலை முதலே வீட்டில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். நான் இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இதுவரை எனது வீட்டிலிருந்து ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.
என்னுடைய வீட்டில் இருந்து ரூ.10 ஆயிரம் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெறும் சோதனை" என்று கூறியிருந்தார்.
இதேவேளை டிடிவி தினகரன் கோஷ்டியினர் ஆர்.கே. இடைத்தேர்தலில் பணம் கொடுப்பது தொடர்பான ஆவணம் வெளியாகியுள்ளதால், அரவக்குறிச்சி போன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டதால், அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் நடத்தப்பட்டது
தேர்தல் ரத்துக்கு முன்னர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணம் ஒன்று வெளியானது. அதன் அடிப்படையிலேயே தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதே போன்று தற்போது நடைபெற உள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பான ஆவணம் வெளியாகியுள்ளது. எனவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இன்னொருபுறம் தினகரனை தேர்தலில் போட்டியிட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் தினகரனை தகுதி நீக்கம் செய்வதாயின் அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இதில் சாட்சிகள் சரியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி தினகரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாக தெரியவில்லை.
0 comments:
Post a Comment