ஊழல் வழக்கில் 87 நாட்கள் உள்ளேயிருந்த விமல் வீரவன்சவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுதலைக்காக விமல் வீரவன்ச பல தில்லுமுல்லுகளை செய்திருந்தார். 7 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விடுதலை கேட்டிருந்தார். மகள் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிணை தாருங்கள் என்று உருக்கமாக கோரியிருந்தார்.
கைது செய்து சில நாட்களின் பின்னர் விட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் வீர உரையாற்றிவிட்டு சிறைக்கு போன விமல் வீரவன்சவை 87 நாட்கள் உள்ளே வைத்து கதறடித்துவிட்டார்கள்.
இலங்கை அரசியல்வாதிகளில் வாயாலே உச்ச நிலையை அடைந்தவர், வாய்ப்பேச்சின் வீராதி வீரர் விமல் வீரவன்ச என்பதை யாரும் அறிவர்.
விமல் வீரவன்ச ஒரு காலத்தில் இடதுசாரி கட்சியாக இருந்த ஜேவிபி கட்சின் மிக அருமையான நட்சத்திர பேச்சாளர். சிங்கள மொழியில் அழகாக கம்பீரத்துடன் உதாரணங்கள் புள்ளிவிவரங்களுடன் அவர் பேசும் விதம் மக்களை வசீகரித்திருந்தது. குறிப்பாக தமிழர்களை எதிர்த்து புலிகளை எதிர்த்து இனவாதமாக உணர்ச்சி வேகமாக அவர் பேசும் பேச்சுக்கு பாமர சிங்கள மக்களிடையே என்றும் வரவேற்புண்டு.
ஆனால் அவர் அரசியல் வாழ்வை ஆரம்பித்தது சமத்துவம் பேசிய ஜேவிபி கட்சியில் தான். அந்த கட்சியின் முன்னேற்றத்திற்கு விமல் வீரவன்சவின் பேச்சு பெரிதும் உதவியிருந்தது.
விமல் வீரவன்ச ஜேவிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2000ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு அதற்கு பிறகு எல்லாமே உச்சந்தான்.
2004ல் ஜேவிபி கட்சி இலங்கை சுதந்திரக்கட்சியுடன் இணைந்து உருவாக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மூலம் நாடாளுமன்றம் சென்றார்.அந்த தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவை பிரதமாராக்கியது. மகிந்தவுடன் விமல் வீரவன்ச மிகுந்த நெருக்கம் காட்டினார்.
நாடாளுமன்ற பதவியும் வசதி வாய்ப்புகளும் விமல் வீரவன்சவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றின.
இடது சாரித்துவம் பேசியும் ஓரளவு அதன்படி நடந்தும் வந்த ஜேவிபி கட்சியின் கொள்கையிலிருந்து விமல் வீரவன்ச விலகத்தொடங்கினார். இனவாதம் பேசி மகிந்தவிற்கு முழு ஆதரவு கொடுத்தார்.
இந்த நிலையில் ஜூன் 2005ல் ஜேவிபி கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. ஆனால் விமல் வீரவன்ச அந்த முடிவை எதிர்த்தார். கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டு வெளியேறினால் கிடைக்கும் வசதி வாய்ப்புகளையும் இழக்கவேண்டி வரும் என்பதால் விமல் வீரவன்ச கட்சிக்கு துரோகம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் நாட்டை புலிகளிடமிருந்து பாதுகாக்கவே வெளியேறாமல் இருப்பதாக விமல் வீரவன்ச மேடைகளில் முழங்கினார். மகிந்த ராஜபக்ச அவருக்கு ஆதரவு கொடுத்தார்.
விமல் வீரவன்சவை மார்ச் 2008ல் ஜேவிபி கட்சியிலிருந்து நீக்கியது. ஊழல் மற்றும் மனைவியல்லாத பெண்ணுடன் உறவு வைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளை விமல் வீரவன்ச மீது ஜேவிபி கட்சி சுமத்தியிருந்தது.
2010 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற விமல் வீரவன்சவுக்கு மகிந்த ராஜபக்ச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவி கொடுத்தார். அந்த பதவியை பாவித்து விமல் வீரவன்ச பல கோடி ஊழலை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அமைச்சர் என்ற அதிகாரத்தை பொதுவெளியில் பயன்படுத்தி செய்தியாளர்களைக்கூட விமல் அச்சுறுத்தியிருந்தார். தனது ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறை மேலதிகாரியை இடையூறு செய்வதாக கூறி கண்டித்திருந்தார். கோட்டாபே ராஜபக்சவை கைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரை மேலதிகாரியிடம் பேசவைத்து மிரட்டியிருந்தார். விமல் வீரவன்சவின் இந்த அதிகார அடாவடித்தனம் ஊடகங்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை தனது அதிபர் பதவிக்காலம் முடிய இரண்டு வருடங்கள் இருந்த நிலையில் மகிந்த ராஜபக்ச 08.01.2015ல் அதிபர் தேர்தலை நடத்தினார். ஜோதிடரின் சொல்லக்கேட்டு முன்னரே தேர்தலை நடத்திய மகிந்த தோல்வியடைந்தார். மைத்திரிபால அதிபரானார்.
இந்த எதிர்பாராத தோல்வியினால் மகிந்தவை நம்பியிருந்த விமல் வீரவன்சவும் பெரிதும் பாதிக்கப்பட்டார். அமைச்சு ஆடம்பரங்கள் பறிபோயின.
2015 ஆகஸ்ட் 17 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச நிறுத்தப்படவேண்டும் என்று விமல் வீரவன்ச போராட்டம் நடத்தியிருந்தார்.
''மகிந்த ராஜபக்ஷ போன்ற ஒருவர் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்பதே 58 லட்சம் மக்களின் கருத்து. 58 லட்சம் மக்களின் விருப்பத்திற்குரிய தலைவர் நிராகரிக்கப்பட்டால் அந்த 58 லட்சம் மக்களும் அனாதைகளாவார்கள்'' என்று விமல் வீரவன்ச மேடைகள் தோறும் முழங்கினார்.
ஆனால் அந்த தேர்தலில் விமல் வீரவன்ச எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களைக் கைப்பற்றியது. ரணில் விக்ரமசிங்க பிரதமாரானார். விமல் வீரவன்ச நாடாளுமன்றத்திற்கு தெரிவானாலும் அமைச்சு பதவி சுகத்தை அனுபவிக்க முடியாமல் எதிர் அணியில் இருக்க நேரிட்டது.
மகிந்த ராஜபக்சவை பிரதமராக்க முடியாவிட்டாலும் மீண்டும் மகிந்த பதவிக்கு வரவேண்டும் என்று விமல் வீரவன்ச தொடர்ந்தும் பேசி வந்தார்.
விமல் வீரவன்ச தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது மனைவி சஷி வீரவன்சவுக்கு போலியான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), தேசிய அடையாள போன்றவற்றை தயாரித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம்15.05.2015ல் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. மேலும் விமல் வீரவன்சவுக்கு இரண்டு கடவுச்சீட்டுகள் இருந்ததாகவும், அவற்றில் குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு விமல் வீரவன்சவின் இமேஜை பெரிதும் பாதித்தது. ஊடகங்கள் விமலை கிழித்து தொங்கவிட்டன. ஆனாலும் விமல் வீரவன்ச அதற்கெல்லாம் வெட்கப்படவில்லை. தனது வாய் வீரத்தை தொடர்ந்தார். தான் குற்றமேதும் செய்யவில்லை, இதெல்லாம் அரசியல் பழிவாங்கல் என்று முழங்கினார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அவரது 70 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 29.06.2015ல் மல்வத்து , அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை சந்தித்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் விமல் வீரவன்சவின் தில்லுமுல்லுகள் பற்றி கேட்டபோது ''இந்த நல்ல நாளில் அந்தாளைப்பற்றி பேசவேண்டாம். ஒரு சதத்திற்கு (பைசாவுக்கு) கூட நாங்கள் அவரை மதிப்பதில்லை'' என்று கூறியிருந்தார்.
விமல் வீரவன்ச வெளிநாடு செல்ல சென்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒக்டோபர் 2015ல் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
அவரது கடவுச்சீட்டில் குளறுபடி காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
ஆனால் வழமைபோலவே விமல் வீரவன்ச இதுவும் அரசியல் சதி என்றார். சுதந்திர போராட்டத்தில் கைது செய்யப்பட்ட வீரனைப்போல முழங்கினார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த போது அவரது சகோதரர் விமலின் தனிப்பட்ட செயலாளராக பணியாற்றியிருந்தார்.
2009 - 2015 காலப்பகுதியில் அரசாங்க வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதுடன், 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை விமல் தரப்பு மோசடி செய்ததாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து விமலின் சகோதரர் சரத் வீரவன்ச கைது செய்யப்பட்டார்.
இதையும் விமல் வீரவன்ச அரசியல் பழிவாங்கல் என்கிறார். மேடை தோறும் தான் நேர்மையானவன் நாட்டுக்காக பாடுபட்டவன் என்று முழங்கினார்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விமல் வீரவன்சவும் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவின் விசாரணைக்கு செப்டம்பர் 2016ல் அழைக்கப்பட்டிருந்தார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விமல் வீரவன்ச என் மீது அரசியில் பழிவாங்கல் நடக்கிறது. நாட்டை புலிகளிடம் இருந்து மீட்டு எடுத்த காரணத்தால் நான் பழிவாங்கப்படுகிறேன். ஆனால் இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்று சூளுரைத்தார்.
இதற்கிடையே விமல் வீரவன்சவின் வீட்டு படுக்கையறையில் கடந்த வருடம் அக்டோபர் 26ம் திகதி லஹிரு ஜனித் எனும் 24 வயது இளைஞன் மரணமடைந்தார். அப்போது விமல் வீரவன்ச வீட்டில் இருக்கவில்லை. ஆனால் அவரது மனைவி இருந்திருந்தார். அந்த இளைஞன் அதிகளவு வயாக்ரா மருந்து பாவித்ததால் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
விமல் வீரவன்சவின் மனைவியை திருப்திப்படுத்துவதற்காக அந்த இளைஞன் வயாக்ரா பாவித்து, அதனால் மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால் விமல் வீரவன்ச வழமை போலவே இதுவும் அரசியல் சதி என்றார்.
அதன் பின்னர் நாடாளுமன்றில் விமல் வீரவன்ச வாயை திறக்கும்போதெல்லாம் ''வயாக்ரா" என்று கூச்சல் எழுந்தது.
விமல் வீரவன்ச 2000ம் ஆண்டில் நாடாளுமன்றத்திற்கு சென்றார். அன்றிலிருந்து அவரது கூச்சல் அடங்கியதே இல்லை. நாடாளுமன்றில் அவர் கூச்சல் போட்டு தாறுமாறாக பேசி எல்லாரையும் அடக்கியிருந்தார்.
ஆனால் முதன்முறையாக :வயாக்ரா" என்ற கூச்சல் விமல் வீரவன்சவின் கூச்சலை அடக்கியது. அவமானப்பட்ட விமல் வீரவன்ச நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர் விமல் வீரவன்ச நவம்பர் 2016ல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
விமல் வீரவன்ச தேசிய வீடமைப்பு அதிகார சபையில் பெரும் மோசடியை செய்துள்ளதாகவும், பணம் கையாடல் செய்துள்ளதாகவும் மோசடி ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றம் சாட்டியிருந்தது. இது தொடர்பில் விமல் மீது விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால் வழமைபோல விமல் வீரவன்ச தனது வீர பேச்சை கைவிடவில்லை. இது அரசியல் பழிவாங்கல், என்னை அசைக்க முடியாது என்று செய்தியாளர்களிடம் முழங்கினார்.
பின்னர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணைகளுக்கு செல்லாமல் காரணங்களை கூறி தப்பித்து வந்தார்.
ஆனால் இந்த வருடம் ஜனவரி 10ம் திகதி வேறு வழியில்லாமல் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு விமல் வீரவன்ச செல்ல வேண்டி ஏற்பட்டது.
அங்கு விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் சுமார் 40 அரச வாகனங்களை தனிப்பட்ட அரசியல் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு சுமார் 10 கோடி ரூபா நட்டத்தை ஏற்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வாகனங்களை விமல் வீரவன்ச தனதும் தனது மனைவியினதும் சகோதர்கள் சகோதரிகள் அவர்களின் கணவன் மனைவி பிள்ளைகள் என பலருக்கும் சட்டவிரோதமாக வழங்கியிருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அங்கு அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக்காவல் விதிக்கப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விமல் வீரவன்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னை கைது செய்யுமாறு உத்தரவு போட்டுவிட்டு வெளிநாடு சென்றுள்ளார். என்னை திட்டமிட்டு கைது செய்துள்ளனர். ஆனால் நான் இதற்கெல்லாம் அஞ்ச மாட்டேன் என்று சூளுரைத்தார்.
ஆனால் கைது செய்யப்படுவதாக அறிவித்ததும் விமல் அழுததாகவும் ஆனால் வெளியில் வந்து வீர உரையாற்றியதாகவும் இணையங்களில் சுட சுட செய்திகள் வெளிவந்தன.
விமல் வீரவன்சவின் ஆதரவாளர்கள் அவரது கைதை எதிர்த்து அங்கு பெரும் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கைது செய்துவிட்டு சில நாட்களில் தன்னை பிணையில் செல்ல அனுமதிப்பார்கள் என விமல் வீரவன்ச நம்பியிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தனது மகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது நலனுக்காக என்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பல முறை பிணை கேட்டு மன்றாடியிருந்தார். ஆனால் விசாரணைகளின் போது ஒவ்வொருமுறையும் விமல் வீரவன்சவின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டது.
இதனால் கலங்கிப்போன விமல் வீரவன்ச அவரது விருப்பத்திற்குரிய உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்தார். சிறையில் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார்.
ஏற்கனவே 8.07.2010ல் ஐ.நா. வுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்திருந்தார். ஆனால் அவர் நன்றாக சாப்பிட்டுவிட்டுதான் உண்ணாவிரதம் இருந்தார் என்பதை புகைப்பட ஆதாரங்களுடன் ஊடகங்கள் வெளிப்படுத்தி நாறடித்திருந்தன.
இம்முறையும் விமல் வீரவன்ச உண்ணாவிரத நாடகமாடுவதாக செய்திகள் வெளிவந்தன. நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் உண்ணாவிரதம் செய்து மிரட்டுவது தவறு என்று விமர்சனங்கள் எழுந்தன.
இந்த உண்ணாவிர போராட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும், அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கும் என்று விமல் வீரவன்ச நம்பினார். தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பி விமல் வீரவன்ச ஆரம்பித்த உண்ணாவிரதம் அவருக்கே ஆப்பானது. அவரை வைத்தியசாலையில் அனுமதித்தார்களே தவிர பிணை கொடுக்கவில்லை. ஒன்பது நாட்கள் கடந்தும் யாரும் அவரது உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளவில்லை. மாறாக அவரது உண்ணாவிரதம் பெரும் கிண்டலுக்குள்ளானது.
இந்த நிலையில் வேறு வழியில்லாமல் அவர் தனது உண்ணாவிரதத்தை கடந்த மார்ச் 30ம் திகதி முடித்துக்கொண்டார்.
மகள் மனநிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிணை வழங்குமாறு விமல் வீரவன்ச பல தடவைகள் விண்ணப்பித்தும் அவை நிராகரிக்கப்பட்டன.
இவ்வாறு 87 நாட்கள் உள்ளேயிருந்த விமல் வீரவன்சவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.
வெளியில் வந்த விமல் வீரவன்ச வழமைபோலவே செய்தியாளர்களிடம் வீர உரையாற்றினார்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என்னை சிறையில் அடைத்து அடிபணிய வைக்க முடியாது. நான் முன்னரைவிட அதிக வீரியத்துடன் செயல்படுவேன் என்று செய்தியாளர்களிடம் கர்ஜித்துவிட்டு விமல் வீரவன்ச வீடு சென்றுள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதியை இலங்கை கண்டதில்லை என்று சொல்லலாம்.
வாய் பேச்சாலே எல்லா குற்றச்சாட்டுக்களையும் அடித்து வீழ்த்தலாம் என்று அவர் நம்புகிறார்.
கூச்சல் போட்டு, சத்தமாக, கம்பீரமாக, இனவாதம் பேசினால் பாமர சிங்கள மக்கள் நம்புகிறார்கள் என்பதை விமல் வீரவன்ச நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். அந்த யுக்தி அவருக்கு இதுவரை வெற்றியையே கொடுத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
- என்.ஜீவேந்திரன்
பல்வேறுபட்ட தகவல்கள் இங்கே அலசி ஆராயப்பட்டிருக்கின்றது. விமல்பற்றி தெரியாத, தமிழ் ஊடகங்கள் சொல்ல தவறிய பல விடயங்களை இந்த கட்டுரையில் அறிந்துகொண்டேன். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி
Deleteமிக்க நன்றி
ReplyDelete