''இலங்கை படைகள் போர்க்குற்றங்களை செய்யவில்லை. அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. மேலும் இலங்கை அரச படையினர் மீது யுத்தக் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனில், புலிகளின் போர்க்குற்றங்களும் விசாரிக்கப்படவேண்டும். அப்படி புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிக்க அவர்களின் தலைவர்கள் தயாரா?'' என்று அமைச்சர் ராஜித சேனாரத்தின கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் இந்த கேள்வியை எழுப்பினார்.
''யார் யார் மீது விசாரணை நடத்துவது என்ற வாதத்தை விட்டுவிட்டு இலங்கையில் மீண்டும் கொடுமைகள் நடக்காத நிலை உருவாக்கப்படவேண்டும். அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழக்கூடிய அரசியற் தீர்வொன்றை முன்வைக்கவும் அதிகாரங்களைப் பகிரவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்'' என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தின குறிப்பிட்டுள்ளார்.
''மேலும் இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வொன்றையும் உருவாக்க இருக்கின்றோம். அத்தோடு மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை ''படையினர் திட்டமிட்ட வகையில் எவ்விதமான குற்றங்களையும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. பழைய விடயங்களை கிளறுவதால் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை. அத்துடன், பொதுமக்களை இலக்குவைத்து புலிகள் நடத்திய தாக்குதல்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என சிங்கள மக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள்கள் வரலாம். அப்படி வந்தால் இரண்டு தரப்பும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்கான சமாதான சூழல் இல்லாமல் போகும்'' என்று கோட்டபாய ராஜபக்ஸ கடந்த மார்ச் 28 செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் புலிகள் மீதும் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மக்களை கேடயங்களாக பிடித்து வைத்திருந்தமை. மக்களை வெளியேற விடாமல் பலாத்காரமாக தடுத்து வைத்திருந்தமை. தப்பி செல்ல முற்பட்ட மக்களை சுட்டுக் கொன்றமை. சிறுவர்களை பலாத்காரமாக போரிட வைத்தமை என பல போர்க்குற்றங்களை புலிகள் செய்திருப்பதால் அவர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.
மகிந்த ராஜபக்ச தரப்பும் புலிகள் மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது புதிய நல்லாட்சி அரசாங்கமும், புலிகளின் போர்க்குற்றம் பற்றியும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளமை தமிழ் தரப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment