விஞ்ஞான ரீதியாக ஜோதிடம் நிரூபிக்கப்படாதபோதும் இந்திய இலங்கை போன்ற நாடுகளில் வாழும் மக்களில் பலர் ஜோதிடத்தை நம்புகிறார்கள். பாமரர் முதல் பிரதமர் வரை பெரும்பாலானவர்கள் ஜோதிடர்கள் சொல்படி நடக்கிறார்கள்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஸ, இந்திய பிரதமர் மோடி என பல பெரிய தலைவர்கள் கூட ஜோதிடர்கள் சொல்வதன்படியே நம்பி நடக்கிறார்கள்.
தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் தினகரன், ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே நடந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரசாரத்தினை ஆரம்பிக்கும் நேரம், முடிக்கும் நேரம், பிரசாரம் செய்யும் திசை, வாகனம் செல்லும் திசை என எல்லாமே ஜோதிடர்களால் கணித்து சொல்லப்படுகிறது. அதை அப்படியே தினகரன் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சசிகலாவின் குடும்ப ஜோதிடர்கள் நாள் தோறும் தினகரனை சந்தித்து ஆலோசனை கூறிவருவதாக சொல்லப்படுகிறது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் ஜோதிடத்தை மிகவும் நம்பியிருந்தார். அன்றாட நடவடிக்கைகள் முதல் அரசியல் நகர்வுகள் வரை அனைத்தையும் ஜோதிடர்கள் சொன்னபடிதான் ஜெயலலிதா செய்திருந்தார். சில மக்கள் நலத் திட்டங்கள் முதல் கட்டிடங்களை திறந்து வைப்பது வரை அனைத்தையும் ஜோதிடர்கள் சொன்னபடியே ஜெயலலிதா செய்து வந்திருந்தார். சில மக்கள் நலத் திட்டங்கள் முடிக்கப்பட்டும் மக்களுக்கு வழங்கப்படாமல் நல்ல நேரம் வருவதற்காக மூடியே வைக்கப்பட்டது.
கடைசியில் மருத்துவ சிகிச்சையில் கூட அவர் ஜோதிடத்தை நம்பியிருந்துள்ளார் என்றே செய்திகள் கூறுகின்றன.
இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு ஜோதிடத்தில் அபார நம்பிக்கை கொண்டிருந்தார். மகிந்த மட்டுமல்லாது அவரது முழு குடும்பமும் சகோதரர்களும் ஜோதிடத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தனர்.
தனது ஆஸ்தான ஜோதிடரான சுமணதாச அபேகுணவர்த்தனவின் சொற்படியே மகிந்த ராஜபக்ச நடந்து கொண்டார். ஜோதிடருக்கு வசிக்க மாளிகை முதல் பயணிக்க சொகுசு வாகனம் வரை சகலவற்றையும் வழங்கி தன்னுடனேயே வைத்திருந்தார்.
மகிந்த ராஜபக்ச தனது இரண்டாவது அதிபர் பதவிக்காலம் முடிய இரண்டுகள் இருக்கும் போதே ஜோதிடரின் கணிப்புப்படி தேர்தலை சந்தித்தார். இன்னும் 20 வருடங்களுக்கு மகிந்தவை அதிகாரத்திலிருந்து அசைக்கமுடியாது என்று மகிந்தவின் ஆஸ்தான ஜோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தன கணித்து கூறியிருந்தார். திருப்பதிக்கு சென்று மகிந்த ஆசியும் வாங்கி இருந்தார்.
ஆனால் மகிந்தவால் ஜோதிடர் கூறியபடி அதிபராக முடியவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த இரண்டுவருட பதவிக்காலத்தையும் வீணாக இழந்தார்.
இந்த தோல்விக்கு பிறகு சிறிது காலம் மறைந்திருந்த மகிந்தவின் ஆஸ்தான ஜோதிடர் மீண்டும் மகிந்தவுக்கு ஜோதிட ஆலோசனை வழங்க தயார் என்று கடந்த வருடம் அறிவித்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சக்தி சிறப்பானதாக அமையும் என ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன குறிப்பிட்டிருந்தார்.
கடந்த அதிபர் தேர்தலின் போது மஹிந்த நான் கூறியதனை மாத்திரம் மனதிற்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய ஜோதிடர்களின் ஆலோசனையையும் கேட்டு நடந்தார். அதனால்தான் ஆட்சியை மகிந்த இழந்தார்.
ஆனால் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான சக்தியை கட்டி எழுப்ப கிரக நிலை சாதகமாக உள்ளது என்றும் ஜோதிடர் சுமனதாஸ கூறியிருந்தார். தற்போது மகிந்த வெளிப்படையாக ஜோதிடர்களை சந்திப்பதில்லை. ஆனால் அவரது மனைவியும் குடும்பத்தினரும், தமது குடும்பத்தினர் மீதுள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்ப ஜோதிடர்களை தேடி அலைவதாகவே தென்னிலங்கை செய்திகள் கூறுகின்றன.
அதிகாரத்தை அடையவும், ஆசைகளை நிறைவேற்றவும் ஜோதிடம் கைகொடுக்கும் என இந்திய இலங்கை அரசியல்வாதிகள் நம்புகிறார்கள். முன்னேறிய நாடுகளைப்பார்த்தாவது கற்றுக்கொள்ளும் எண்ணம் அவர்களிடம் இல்லை.
மக்களுக்கு சேவை செய்து, நாட்டை அபிவிருத்தி செய்து, மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதே இந்த அரசியல்வாதிகளின் பணி. அதை விட்டுவிட்டு ஊழல் செய்து சொத்து குவிக்க குறுக்கு வழியில் ஜோதிடத்தை நம்புகிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் மடத்தனமான போக்கால் மக்கள் முன்னேற்றத்தை இழந்து பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பேராசையே ஜோதிடத்தின் பலம் என்று அறியும்வரை கொடுமை தொடரும்.
0 comments:
Post a Comment