அரசியல்

மகிந்த ராஜபக்ச தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வரலாம்



காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று 62 நாளாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் நடத்தியிருந்தனர்.
தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோனாதிராஜா அந்த மக்களை சந்தித்து உரையாடியிருந்தார்.

அப்போது கருத்து தெரிவித்த அவர் ''காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் இரண்டு வாரங்களில் தீர்வை பெற்றுத்தர முயற்சி செய்கிறோம். வரும் மே மாதம் இரண்டு அல்லது மூன்றாம் திகதிகளில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் பல பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளளோம். அதன் போது காணாமல் போனோரின் உறவினர்களின் பிரச்சனைகளையும் உணர்வுகளையும் எடுத்து சொல்லுவோம்'' என்று குறிப்பிட்டார்.

''அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தோமே தவிர நாங்கள் அரசாங்கம் அல்ல. மக்களின் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தீர்வு காணவேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் அது நல்லாட்சி அரசாக இருக்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் இனியும் இடம்பெற கூடாது. அதேவேளை தற்போது பதவியிலுள்ள இந்த அரசாங்கத்தை கடும் நெருக்கடிக்குள்ளாக்கினால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்த மகிந்த தரப்பினர் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவார்கள். அது குறித்தே நாங்கள் கவலைப்படுகிறோம்'' என்று அங்கு மக்களிடம் பேசிய மாவை சோனாதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறும்போது ''இந்த அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பை வழங்குவது என்ற நிலைப்பாட்டில் சர்வதேச நாடுகள் இருந்தன. இது தொடர்பில் மேற்குலக நாடுகள் எங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தின. உலக நாடுகளின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்க முடியாது என்று சொன்னால் நாங்கள் அவர்களிடமிருந்து தனிமைப்பட்டுவிடுவோம். நாங்கள் ஒரு தனி நாடு அல்ல. ஒரு அரசியல் கட்சி. ஆகவே இதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சர்வதேச சமூகத்தோடு சேர்ந்து நாங்கள் ஒன்றாக பயணிக்கவேண்டும். அவர்களுக்கும் எமக்கும் புரிந்துணர்வும் நெருக்கமும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அரசாங்கம் எங்களை கைவிட்டாலும் சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது. நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம். எனவே தான் நாங்கள் சர்வதேச சமூகத்தோடு இணங்கி நிற்க விரும்புகின்றோம்'' என்று மாவை சோனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.