உலகம்

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை



''சிரியா மீதான தாக்குதலை ரஷ்யா வன்மையாகக் கண்டிக்கிறது. இது சர்வதேச விதிமீறல். ஐ.நா. சபையின் ஒப்புதல் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில்கூட அனுமதி பெறப்படவில்லை. மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்று ஐ.நா.வுக்கான ரஷ்ய துணைத் தூதர் விளாடிமிர் சப்ரோன்கோவ் அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

அமெரிக்க கடற்படை சிரியாவின் அல்-சாய்ரத் விமானப் படைத்தளத்தை குறிவைத்து கடந்த வெள்ளியன்று (07..4.2017) ஏவுகணை தாக்குதல் நடத்தியிருந்தது. 59 டோமாஹாக் ஏவுகணைகள் வீசப்பட்டதில் 5 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக சிரியா தெரிவித்திருந்தது.

நியூயார்க்கில் இந்த தாக்குதல் தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம்  கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ''சிரிய ராணுவம் ரசாயன வாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். அதற்கு பதிலடி கொடுக்கவே சிரியாவின் விமானப் படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியா ராணுவம் மீண்டும் ரசாயன வாயு குண்டுகளை வீசினால் அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும்'' என்று அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியிருந்தார்.

அதற்கு பதிலடியாகவே ஐ.நா.வுக்கான ரஷ்ய துணைத் தூதர் விளாடிமிர் சப்ரோன்கோவ் '' இந்த விடயம் மிகவும் மோசமானது. கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது சர்வதேச விதிமீறல். ஐ.நா. சபையின் ஒப்புதல் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில்கூட அனுமதி பெறப்படவில்லை. மீண்டும் சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்று கூறியிருந்தார்.

இதேவேளை ரஷ்யாவும் ஈரானும் தொடர்ந்தும் சிரியாவுக்கு ராணுவ ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளன.

சிரியாவின் வான் பாதுகாப்பை ரஷ்யா அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் அதி நவீன போர் கப்பல்கள் சிரியா கடல் எல்லையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை பார்க்கும்போது இந்த தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டதை போன்று தோன்றுவதாக ரஷ்யா சந்தேகம் தெரிவித்துள்ளது.

சிரியா மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தவேண்டும் என்று முற்கூட்டியே திட்டமிட்டு அதன் ஒரு பகுதியாக இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது.

ஐ.நா. விசேட குழுவை அனுப்பி இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே  யார் தாக்குதலை செய்தார்கள் என்று முடிவெடுக்க வேண்டும் என்று ரஷ்யா கூறுகிறது.

சிரியா பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தாக்குதலில் 11 சிறார்கள் உட்பட 70 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என்று இப்போது உறுதியாக கூறமுடியாது என சிரியாவுக்கான ஐ.நா.விசேட அணி யை சேர்ந்த ஸ்டெபான் டீ மிஸ்டுரா கூறியுள்ளார்.

ஐ.நா. வெளியுறவு கொள்கை பிரிவின் தலைவரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை உறுதியாக சொல்ல போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் முதல் சந்தேகப்பார்வை சிரிய படைகள் மீதே விழுந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஊடகங்கள் சிரியாவுக்கு எதிராக சரியாக பயன்படுத்துகின்றன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நீண்டகால அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
சிரியா நாடானது நீண்ட காலமாக ரஷ்ய சார்பு நாடாக இருக்கிறது. எனவேதான் அமெரிக்கா சிரியாவில் உள்நாட்டு போரை ஏற்படுத்தி சீரழித்து வருகிறது என விமர்சனங்கள் உள்ளன.

ஆனால் வழமைபோலவே எமது  தமிழ் ஊடகங்கள் அமெரிக்க - மேற்குலகு பிரச்சார செய்திகளை அப்படியே கிளிப்பிள்ளைகள் போல ஒப்பித்து வருகின்றன.









0 comments:

Post a Comment

Powered by Blogger.