இன்று 27 வது நாளாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
டெல்லி போலீஸார் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால் பின்னர் அது மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றிலிருந்து 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
போராடிவரும் விவசாயிகளில் பலர் உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு 4 பேர் நேற்று அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவேரி மேலாண்மை அமைப்பது, வறட்சி நிவாரணம், பயிர்களுக்கான கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க.வின் ஏற்பாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ, மத்திய நீர் பாசன துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோரை விவசாயிகள் சந்த்தித்து பேசியும் எந்த பலனும் ஏற்படவில்லை.
வங்கியில் கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. விவசாய பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஆனால் எமது உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.
நிலைமை இப்படி இருக்க வங்கிகளோ வட்டி மேல் வட்டிபோட்டு எமக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். எம்மால் கடனை கட்டி முடிக்க இயலவில்லை. காலம் பூராகவும் கடனாளிகளாகவே இருக்கிறோம். அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்த நிவாரணமும் இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
இந்த பிரச்சனைகளால் தமிழகத்தில் இதுவரை 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை தமிழக அரசின் பலவீனத்தைப் பார்க்காமல் மாநில விவசாயிகளின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மோடிக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று அறிக்கை மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
''விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும், நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 26-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
நாளுக்கு நாள் வெவ்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அவர்கள் இறுதியில் தங்கள் கைகளை அறுத்துக் கொள்ளும் உயிருக்கு ஆபத்தான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்ப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், புதிய நதி நீர் ஆணையம் அமைப்பதை எதிர்த்தும் தமிழகத்திலும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் கடந்த 3-ம் தேதி அன்று முழு அடைப்பிற்கு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி அவர்கள் அழைப்பு விடுத்து அதில் திமுக பங்கேற்று தனது ஆதரவை தெரிவித்தது.
டெல்லியில் போராடும் விவசாயிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், நானும் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும், விவசாயிகளை பிரதமர் நரேந்திரமோடி சந்திக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தேன்.
காவிரி இறுதித் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் விதத்தில் புதிய நதி நீர் ஆணையம் அமைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர் பாண்டியன் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அதில் திமுக சார்பில் துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி பங்கேற்று கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல், 'விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது வங்கிகளின் கடன் கொள்கைக்கு எதிரானது' என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். அரசின் கொள்கை முடிவுகளில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலையிட்டு இப்படியொரு கருத்தைக் கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக மட்டுமல்ல, மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலையிடும் நிலை இப்போது உருவாகியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
இது ஒருபுறமிருக்க, 'அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இதுவரை தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு அந்த தீர்ப்பைக் கூட செயல்படுத்த முன்வரவில்லை என்பது கவலையளிக்கிறது.
வறுமையில் வாடும் விவசாயிகளை அரவணைப்பதற்கு அராஜகமாக இந்த அரசு அடம்பிடிக்கிறது. மாநில விவசாயிகள் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அவர் தலைமை தாங்கி நடத்தும் அதிமுக ஆட்சிக்கோ, அந்த ஆட்சியில் உள்ள வேளாண்துறை அமைச்சருக்கோ எவ்வித அக்கறையும், ஆர்வமும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. விவசாயிகள் தற்கொலையை வேடிக்கை பார்க்கும் அரசாக அதிமுக அரசு நீடிப்பது மாநில நலனுக்கு எவ்விதத்திலும் ஏற்றது அல்ல என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும் அதிமுக அரசு அதை கோட்டை விட்டது. அந்த ஆணையத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தும் எந்த முயற்சியிலும் அதிமுக அரசு ஈடுபடவில்லை. வருமான வரித்துறை ரெய்டுகள், ஊழல் சாம்ராஜ்யத்தில் திளைக்கும் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியாமல் கையறுந்த நிலையில் நிற்பது பரிதாபமாக இருக்கிறது.
மத்திய- மாநில உறவுகளையே இந்த ஊழல் அரசு கேலிக்கூத்தாக்கி, ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது மட்டுமே இப்போதைக்கு அதிமுக அரசின் தீராத கவலையாக இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் அனைத்து நதி பிரச்சினைகளுக்கும் புதிய நதி நீர் ஆணையம் அமைக்கப் போகிறோம் என்ற மத்திய பாஜக அரசின் முடிவிற்கும் அதிமுக அரசோ, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
டெல்லியில் 26 நாளாக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளையோ, தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளையோ சந்தித்துப் பேசக் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை. விவசாயிகளின் போராட்டங்களை அதிமுக அரசும் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளின் நலனே எங்கள் நலன் என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே காவிரி இறுதித் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணியை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் புதிய நதி நீர் ஆணையத்தின் வரம்புக்குள் பல வருடங்களாக போராடிப் பெற்ற தமிழகத்தின் காவிரி உரிமைகளை மத்திய அரசு கர்நாடக மாநிலத்திற்கு தாரை வார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் இப்போதைய மிக முக்கியக் கோரிக்கை பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதுதான். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் மீண்டும் ஒரு முறை கோரிக்கை விடுக்கிறேன். மாநில அரசின் பலவீனத்தைப் பார்க்காமல், மாநில விவசாயிகளின் நலனை கவனத்தில் கொள்ளுமாறு பிரதமரை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
மாநிலத்தில் இருக்கும் அதிமுக அரசும், தமிழக விவசாயிகள் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று போராடும் தமிழக விவசாயிகளை அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், டெல்லி சென்று போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் உயிருடன் சென்னை திரும்புவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கால நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment