துருக்கியில் நேற்று (15.04.2017) நடந்த சர்வசன வாக்கெடுப்பில் அதிபர் எர்டோகன் வெற்றிபெற்றுள்ளதாக அவரது கட்சி அறிவித்துள்ளது.
அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அதிபர் எர்டோகனுக்கு மேலும் அதிகாரங்களை வழங்க வேண்டுமா? இல்லையா? என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இதில் 'ஆம்' வழங்க வேண்டும் என்று 51 வீதத்திற்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளதாக அதிபரின் தரப்பு அறிவித்துள்ளது.
இதன் மூலம் அதிபர் எர்டோகன் 2029ம் ஆண்டுவரை பதவியில் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதிபர் எர்டோகன் கோரும் அதிகாரங்கள் ஒரு நாட்டின் தலைவருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்குகிறது. அதிபர் எர்டோகன் சர்வாதிகாரத்தை நோக்கி விரைவாக பயணித்து வருகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சர்வசன வாக்கெடுப்பில் அதிபருக்கு ஆதரவு கோரி துருக்கி அரசால் ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் ஊர்வலங்களை நடத்த அந்த நாடுகள் அனுமதியளிக்கவில்லை. இதனால் கோபமடைந்துள்ள துருக்கி அதிபர் எர்டோகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஐரோப்பிய பிராந்தியத்தில் அரசியல் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தார்.
துருக்கி அதிபர் வெளிநாட்டில் இருந்த போது 2016 ஜூலை 15 பதவி கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றது. இதனை துருக்கி ராணுவத்தின் ஒரு பகுதியினர் செய்திருந்தனர். துருக்கி அதிபர் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த பதவி கவிழ்ப்புக்கு எதிராக போராடும்படி கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட மக்கள் வீதியில் இறங்கினார்கள். பதவி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
நாடு திரும்பிய எர்டோகன் பதவி கவிழ்ப்பில் சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டவர்கள் என ஆயிரக்கணக்கானோரை சிறையில் அடைத்தார். கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டதாக குற்றசாட்டுகள் எழுந்தன.
இந்த சம்பவத்தின் பின்னர் ஏற்கனவே பதவி மோகம் அதிகம் கொண்டவராக இருந்த அதிபர் எர்டோகன் தனது அதிகாரத்தை மேலும் பலப்படுத்தவும் ஆயுள் காலம் முழுவதும் அதிபராக இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கினார்.
ஏற்கனவே ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடனான எண்ணெய் ஊழலில் ஈடுபட்டு பெரும்பணத்தை எர்டோகன் சம்பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ஊழல் பணத்தில் தனக்கான பெரும் மாளிகைகளை அவர் காட்டினார். ஆடம்பர சொத்துக்களை சொத்துக்களை பெருக்கினார்.
இதன்மூலம் துருக்கி மக்கள் மத்தியில் அதிபர் எர்டோகனின் செல்வாக்கு சரிந்தது. அவருக்கு எதிரான ஜனநாயக குரல்கள் எழுந்தன. அவற்றை எல்லாம் இரும்பு கரத்தால் அடக்கினார். தனக்கு எதிராக செய்தி வெளியிட்ட மீடியாக்களை அச்சுறுத்தினார். போட்டோஷாப்பில் அவரது உருவத்தை கேலியாக வரைந்த இளைஞனை சிறையில் அடைத்தார்.
இந்த பின்னணியில் தற்போது அதிபராக தனக்குள்ள அதிகாரத்தை மேலும் அதிகரிப்பதற்காக துருக்கியில் சர்வசன வாக்கெடுப்பை நேற்று நடத்தியுள்ளார். இந்த வாக்கெடுப்பில் தனக்கு சாதகமாக முடிவு வரவேண்டும் என்பதற்காக எர்டோகன் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தார்.
அதில் ஓர் அங்கமாக துருக்கி மக்கள் அதிகமாக வசிக்கும் ஜேர்மனி, ஆஸ்திரியா, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் அரசு சார்பு ஊர்வலங்களை நடத்த முனைந்தார். ஆனால் எர்டோகனின் ஜனநாயக விரோத நடவடிக்கையை புரிந்துகொண்ட இந்த நாடுகள் ஊர்வலங்களை தடைவிதித்தன.
ஜெர்மனி தடை விதித்ததையடுத்து வெகுண்டெழுந்த எர்டோகன் ஜேர்மன் அதிபரை பயங்கரவாதி, நாஜி என திட்டி தீர்த்தார்.ஜெர்மனியில் 15 இலட்சம் துருக்கி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை தந்து பக்கம் சாய்க்க செய்த முயற்சிக்கு ஜெர்மனி அதிபர் மார்க்கெல் தடையாக உள்ளதாக எர்டோகன் கருதினார். பயங்கரவாதிகளை ஜெர்மனி மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
நெதர்லாந்து தடை விதித்ததையடுத்து அந்த நாட்டுடன் பதட்டத்தை ஏற்படுத்தி மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாக சவால் விடுத்திருந்தார்.
பதவி, அதிகாரம், பணம், என்ற பேராசைகள் பிடித்து துருக்கி அதிபர் எர்டோகன் செல்லும் பாதை துருக்கியை பெரும் சிக்கலில் மாட்டிவிட போகிறது என்பது நிச்சயம்.
0 comments:
Post a Comment