தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.
மத்திய அரசு கடல் உயிரினங்களின் இனவிருத்திக்காக ஒவ்வொரு கடல் பகுதியாக ஆண்டுதோறும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதித்து வருகிறது. தற்போது மத்திய அரசு கிழக்கு கடல் பகுதியில் 15.04.2017 முதல் 29.05.2017 வரை மீன்பிடித்தடை விதித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை 13 கடலோர மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களிலும் மொத்தம் 15,000 விசைப்படகுகள் கடலுக்குள் செலுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இந்த மீன் பிடித் தடைக்காலம் எங்களுக்கு மட்டுந்தான் விதிக்கப்படுகிறது. ஆனால் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் வந்து மீன்களை வாரிச் செல்லுகின்றன. அவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்படவேண்டும் என்று தமிழக மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மீன்களின் இனவிருத்தி எனும் நல்ல நோக்குக்காக இந்த தடை வருகிறது என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படி என்றால் எங்களை விட அதிக மீன்களை வாரிச் செல்லும் பன்நாட்டு நிறுவனங்களுக்கும் அல்லவா இந்த தடை இருக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் இலங்கை கடற்படையினர் நமது கடல் எல்லைக்குள் நுழைந்து கடல்வளத்தை கொள்ளையடித்துச் செல்லாமல் கடலோர காவல்படையினரே உறுதி செய்யவேண்டும் என்றும் மீனவர்கள் கோருகின்றனர்.
இந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு மீனவர்களுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு ஒரு குடும்பமே வாழ முடியுமா? என்று கேள்வியெழுப்பும் மீனவர்கள் நிவாரண தொகை அதிகரிக்கப்படவேண்டும் என்று கூறுகின்றனர்.
மேலும் கடற்கரைகளில் பெரும் தொழிற்சாலைகளை அமைக்கிறார்கள். அந்த தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் வளம் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தால் நன்மை இருக்கிறது என்றாலும் நெம்மேலியில் ஒரு மீனவ கிராமமே அழிந்துவிட்டது. எனவே கடல் ஓரங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதை தடுக்கவேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment