தினகரன் ஆதரவாளரின் வீடுகள் இடங்களில் இன்று (07.04.2017) வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. தினகரனின் ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவரது உறவினர், நண்பர்கள், நெருக்கமானவர்கள் வீடுகளிலும் அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலும் , மதர்தெரசா கல்வி நிறுவனங்களிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. சிபிஆர்எப் அதிகாரிகள் பாதுகாப்புடன் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மக்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது என்பதே இன்று முதன்மை பேச்சாக இருக்கிறது.
தினகரன் தலைக்கு 5000 கொடுக்கிறார். குடும்பத்திற்கு 10 000 கொடுக்கிறார். பணம் கொடுக்காத வேட்பாளர்களைப் பார்த்து மக்களே கேலி செய்கிறார்கள். என்றெல்லாம் செய்திகள் வந்திருந்தன.
ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்புக்கு ஆதரவாக அமைச்சர் விஜயபாஸ்கர் தீவீரமாக செயல்பட்டு வருகிறார். தினகரனை முதல்வராக்க வேண்டும் என்பதே விஜயபாஸ்கரின் நோக்கமாக இருக்கிறது என்கிறார்கள். கூவத்தூரில் எம்.எல்.ஏ.களை அடைத்து வைத்து சொர்க்கத்தை காட்ட முன்னின்று பாடுபட்டவர் இந்த விஜயபாஸ்கர்தான் என்று செய்திகள் வந்திருந்தன.
தற்போது ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனை வெல்ல வைப்பதற்காக விஜயபாஸ்கர் பணத்தை கொட்டி இருந்தார் என்று செய்திகள் கூறுகின்றன. வாக்காளர்களுக்கு அவரே நேரடியாக பணம் பட்டுவாடா செய்வதாகவும் கூறப்பட்டது.
இப்படி அமைச்சர் விஜயபாஸ்கர் தினகரனது வெற்றிக்காக தீயாக வேலை செய்து வந்த நிலையில் இன்று இந்த வருமான வரி சோதனை நடந்துள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
திருவல்லிக்கேணியிலுள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அவரது வீட்டிலிருந்து ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.
எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமியின் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கீதாலட்சுமி மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இந்த நெருக்கத்தை பயன்படுத்தி அடுத்தடுத்து அவர் பதவிகளை அடைந்ததாகவும், ஊழல் செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளதாகவும், மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஏராளமான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கீதாலட்சுமி மீது விமர்சனங்கள் எழுந்திருந்தன.
இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும், போரூரில் உள்ள அவரது இன்னொரு வீட்டிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
நேற்று தினகரனை சந்தித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் ஆதரவு தெரிவித்தார்.
இன்று கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றால், தற்போது முதல்வராகவுள்ள எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வத்தைப்போல தனது முதல்வர் பதவியை துறக்க வேண்டி வரும். எனவே தினகரனை வெற்றி பெற வைக்க பாடுபடும் விஜயபாஸ்கரை குறிவைத்து இந்த வருமான வரி சோதனை பாய்ந்துள்ளது என்கிறார்கள்.
ஏற்கனவே சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்திற்கும் மோதல் ஏற்பட்ட போது, சசிகலாவின் பினாமி என்று கூறப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி தற்போது பன்னீர்செல்வம் பாவித்த அதே அஸ்திரத்தை தினகரன் மீது ஏவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment