அரசியல்

தமிழருக்கு நீதியில்லை - இலங்கை நாடாளுமன்றில் குரல்



''இலங்கையின் நீதித்துறை சிங்கள மக்களுக்கு சார்பான நீதிமன்றங்களாகவே இருக்கின்றன. இலங்கையின் நீதிமன்றங்கள் தமிழர்களுக்கும் நீதியை வழங்க கூடியதாக இருக்க வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கை'' என இலங்கை நாடாளுமன்றில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.

''காணாமல் போனவர்களின் உறவுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வவுனியாவில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில் மக்கள் இவ்வாறு தமது உறவுகளை தம்மிடம் தருமாறு கோரி போராட்டம் நடத்துகிறார்கள். இது இந்த நாட்டின் நீதி துறையின் நம்பிக்கை குறித்து கேள்வியெழுப்பவில்லையா?'' என்று நாடாளுமன்றில் உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எம்.பி. சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தில் திருத்தம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சிறிதரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

''யாழ்ப்பாணத்திற்கு வந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன சர்வதேச விசாரணை நடக்காது, நாங்கள் யாரையும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார். இதே போலவே பிரதமரும் அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்களும் சொல்கிறார்கள்.
இப்படி சிங்கள மக்களின் தலைவர்கள் உண்மையை மூடி மறைக்க செயல்படுவது நியாயமானதா?

ஆகவே அழிந்து போன அந்த தேசத்தின் சார்பாக அழிக்கப்பட்ட அந்த மக்கள் சார்பாக நாங்கள் கேட்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்ன? இந்த நாட்டில் அந்த நீதி எப்படி கிடைக்க போகிறது? எப்படி வழங்கப்பட போகிறது? எப்போது நீதி கிடைக்கும் காலம் வரும்?'' என சிறிதரன் எம்.பி. அரசாங்கத்திடம் அடுக்கடுக்கான கேள்விகளை தனது உரையில் கேட்டுள்ளார்.

மேலும் அவர் தனது உரையில் ''வாக்குறுதிகளை நிறைவேற்ற நீதியை வழங்க இலங்கை அரசாங்கத்திற்கு ஜெனிவாவில்  மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அதை கூட செய்யமாட்டோம் என்று துணை வெளிநாட்டமைச்சர் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்களுக்கான வழக்கில் சாட்சிகளின் அடிப்படையில் அந்த பகுதிக்கு பொறுப்பான இராணுவ தளபதி  விசாரிக்கப்பட்டார்.
எம்மிடம் சரணடைந்தவர்கள் பட்டியல், காணாமல் போனவர்களின் பட்டியல் எங்களிடம் உள்ளது. அதனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று நீதிமன்றில் அந்த இராணுவ தளபதி கூறியிருந்தார்.
ஆனால் சென்ற வாரம் அதே நீதிமன்றில் அதே தளபதி எங்களிடம் யாரும் சரணடையவில்லை, சரணடைந்து காணாமல் போகவில்லை எங்களிடம் அவ்வாறு எந்த பட்டியலும் இல்லை என்று கூறியுள்ளார்.

அப்படியானால் இந்த நீதி துறையின் நியாயம் என்ன? அதனால்தான் தமிழர்கள் நீதியான நியாயமான தீர்வு கிடைக்கவேண்டுமானால் சர்வதேச தரம் வாய்ந்த நீதி துறை வேண்டும் என்று கேட்கிறார்கள்.
இந்த நாட்டின் நீதிமன்றங்களால் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க முடியுமா என்று கேட்கிறேன்.
எனவே இந்த நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சமமான நீதியை வழங்குவதாக இலங்கையின் நீதிமன்ற முறை அமையவேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதேவேளை ''இலங்கை படைகள் போர்க்குற்றங்களை செய்யவில்லை. அவ்வாறு குற்றங்கள் இடம்பெற்றதாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. மேலும் இலங்கை அரச படையினர் மீது யுத்தக் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனில், புலிகளின் போர்க்குற்றங்களும் விசாரிக்கப்படவேண்டும். அப்படி புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிக்க அவர்களின் தலைவர்கள் தயாரா?'' என்று இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்தின யாழ்ப்பாணத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த 17ம் திகதி காலை யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.

''மேலும் இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்கு இருக்கின்ற அனைத்து உரிமைகளும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வொன்றையும் உருவாக்க இருக்கின்றோம். அத்தோடு மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அமைச்சர் மேலும் கூறியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.  போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் ஜெனிவாவில் ஏற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கம் தற்போது வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது, சர்வதேச விசாரணைக்கு இடமளிக்க முடியாது என்று கூறிவருவது குறிப்பிடத்தக்கது.   

0 comments:

Post a Comment

Powered by Blogger.