அரசியல்

அவமான சின்னமான அதிமுக



அதிமுக அணிகள் தமிழகத்தையே நாறடித்து வருகின்றன. அதிமுக அணிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் எத்தனை ஏமாற்றுக்காரர்கள், எவ்வளவு பொய் பேசுபவர்கள், எவ்வளவு சுயநலவாதிகள் என்பதை தினம் தினம் நிரூபித்து வருகிறார்கள்.

இந்தியாவே காறித் துப்பினாலும் இந்த அணிகளை சேர்ந்த அரசியல்வாதிகள் கவலைப்படவில்லை. ஒருபுறம் தமிழக மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் இல்லாமலும், வறட்சியால் தண்ணீர் இல்லாமலும், அரச இயந்திரம் முடங்கிப்போயிருப்பதாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மறுபுறம் விவசாயிகள் மாணவர்கள் நீதி கேட்டு போராடுகிறார்கள்.

ஆனால் ஆட்சியிலுள்ள அதிமுக அணியினரும், பிரிந்து சென்ற அணியினரும், சசிகலா குடும்ப அணியினரும் அதிகாரத்திற்காக பதவிகளுக்காக சொத்துக்காக போட்டி போடுகிறார்கள்.

அதிமுக இணைய வேண்டும் என்பதுகூட தமது தமது லாப நட்ட கணக்குக்காத்தானே ஒழிய மக்கள் நலனுக்காக அல்ல.

அ.தி.மு.கவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டுமென்றால் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கட்சியை வீட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரவேண்டும் போன்ற கோரிக்கைகளை பன்னீர்செல்வம் அணியினர் முன்வைத்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தைப் பெறவும், தன் மீது வழக்குகள் பாய்வதைத் தடுக்கவும், மிடாஸ் உள்ளிட்ட பல்வேறு பிசினஸ்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளவும் தினகரன் திட்டம் தீட்டியுள்ளார். அதற்காகத்தான் அதிமுக கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக கூறி தினகரன் நாடகமாடுவதாக பன்னீர் தரப்பு சொல்கிறது.

'முதல்வர், பொதுச்செயலாளர் பதவிகளை நாங்கள் கேட்கவில்லை. டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கியதாகக் கூறுவது திட்டமிட்ட நாடகம். தம்பிதுரை தான்தோன்றித் தனமாகப் பேசிவருகிறார்; மூன்றாந்தரமான, பக்குவமில்லாத அரசியல்வாதி ஜெயக்குமார். எங்களுடையது இரண்டே கோரிக்கைகள்தான். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும். இதுகுறித்து மாநில அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். கட்சியை அழித்துக் கொண்டிருக்கும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும். இவை இரண்டுக்காகவும்தான் ஓபிஎஸ் தர்ம யுத்தத்தைத் தொடங்கினார்'' என்று நேற்று (20.04.2017) செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

''தினகரனை ஒதுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதற்குப் பிறகே, இணைப்பு குறித்து பேசினோம். அதிமுகவில் இருந்து அவர் ஒதுங்கியது எங்களின் முதல் வெற்றி.
சசிகலா மற்றும் தினகரன் ஆகிய இருவரும் தங்களின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். தங்களின் பதவிகள் குறித்துத் தேர்தல் ஆணையத்துக்கு அளித்த பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, கழக விதிகளையும் சட்ட திட்டங்களையும் மீறுபவர்கள், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலக்கிவைக்கப்பட்டது இனியும் தொடர வேண்டும். சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் 30 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டும்'' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எடப்பாடி பழனிசாமி தரப்பு, பன்னீர்செல்வம் தரப்பினரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
''ஓபிஎஸ் அணியில் ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட கிடையாது. மக்கள், கட்சியினர் விருப்பத்தின் பேரிலேயே பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தோம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?'' என்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் நேற்று விமர்சித்துள்ளார்..

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அன்வர் ராஜா, ''பன்னீர் செல்வம் முதல்வராக வாய்ப்பே இல்லை. 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பழனிசாமி முதல்வராக இருக்கும் போது புதிய முதல்வர் பற்றிய பேச்சுக்கே இடமில்லை'' என்று கூறியுள்ளார்.

இவற்றுக்கிடையே ''டிடிவி தினகரனை புகழ்ந்து பேசியதற்காக தம்மீது பொதுமக்கள் காறி துப்பினால் அதை துடைத்துக் கொள்வேன் என்று  நாஞ்சில் சம்பத் வெளிப்படையாகவே தினகரனை ஆதரித்து வெட்கமில்லாமல் பேட்டியளித்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாளராக இருக்கும் நாஞ்சில் சம்பத், தினகரனை ''தீரன், திண்ணியன், காலம் தந்த தலைமகன், விரைவில் வானத்திற்கும் பூமிக்கும் விஸ்வரூபம் எடுப்பார் என்றெல்லாம் என்றெல்லாம் தினகரனை புகழ்ந்து தள்ளிவருகிறார்.

ஊடகங்களில் வெளியாகுளே...மக்கள் பார்ப்பார்களே.. என்ன நினைப்பார்கள்..என்றெல்லாம் இப்படியான அரசியல்வாதிகளுக்கு சிந்தனை இல்லை. இப்படி அணிகளுக்கு வக்காலத்து வாங்கி 'பெட்டிகளை' நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

பெரும்பாலான அதிமுக அரசியல்வாதிகள் ஊழல் செய்து சேர்த்த தமது சொத்துக்களை பாதுகாப்பதையே குறியாக கொண்டு இயங்குகிறார்கள். இதற்காக அவர்கள் யாரோடு சேர்ந்து எப்படி செயல்படவும் தயாராக இருக்கிறார்கள்.

ஏற்கனவே பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அத்தனை அதிமுக அரசியல்வாதிகளும் ஜெயலலிதாவின் காலிலும் பின்னர் சசிகலாவின் காலிலும் விழுந்து கும்பிட்டவர்கள்தான். சொத்து சேர்க்கவும் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கவும் அவர்கள் யார் காலிலும் விழத் தயங்காதவர்கள்.



இப்போது கூட தமது சொத்துக்களுக்கு வருமான வரி சோதனை போல ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் நிச்சயமாக வெற்றிபெற முடியாது என்பதால் எம்.எல்.ஏ களை வைத்துக்கொண்டு சடுகுடு ஆடிவருகிறார்கள்.

இவர்களிடம் மக்களைப்பற்றிய எண்ணமோ தமிழகத்தின் வளர்ச்சி பற்றிய சிந்தனையோ இல்லை என்பது ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் வெளிப்படையாகியுள்ளது.








0 comments:

Post a Comment

Powered by Blogger.