வடகொரியா அணுவாயுத சோதனையை நடத்தினால் அந்த நாட்டை தாக்க விமானந்தாங்கி கப்பலையும் யுத்த கப்பல்களையும் அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிபர் பெரும் 'பில்டப்பை' அமெரிக்க ஊடகங்கள் மூலம் செய்திருந்தார்.
அதை வைத்துக்கொண்டு இதோ அமெரிக்கா வடகொரியாவை அழிக்க போகிறது. இதோ வெட்டி வீழ்த்தப்போகிறது என்று எமது ஊடகங்களும் செய்திகளாக அடித்துவிட்டன.
ஆனால் உண்மையில் அப்படி போர்க்கப்பல்களை அமெரிக்கா வடகொரியாவுக்கு அனுப்பவில்லை. சும்மா வெறும் வாய் வீச்சுக்காகத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். உண்மையில் அந்த கப்பல்கள் கிழக்கு பக்கமாக ஜப்பானுக்கு பயிற்சிக்காக சென்றிருந்தன. ஆனால் அந்த கப்பல்கள் மேற்கு திசையில் வடகொரியாவை நோக்கி செல்வதாக அமெரிக்க அதிபர் அடித்துவிட்டுள்ளார்.
தற்போது இந்த செய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரம்ப்பை 'வைத்து செய்து' வருகிறார்கள். அமெரிக்காவின் மானம் கப்பலேறிக்கொண்டிருக்கிறது.
நீண்டகாலமாகவே வடகொரியா மீது அமெரிக்காவும் கூட்டாளிகளும் பொருளாதார தடையை தொடர்ந்துவருகின்றன. சீனா மட்டுமே வடகொரியாவுடன் நெருங்கிய தொடர்பு ஒரே நாடாக இருக்கிறது. வடகொரியாவின் நிலக்கரியை சீனா வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவந்தது. ஆனால் அணுவாயுத சோதனை நெருக்கடியை தொடர்ந்து தற்போது சீனாவும் வடகொரியாவின் நிலக்கரியை வாங்க மறுத்துவிட்டது.
வடகொரியாவின் பிரச்சனையில் சீனா இருதலை கொள்ளி எறும்பாக சிக்கியுள்ளது.
ஒருபுறம் வடகொரியா சீனா சொல்வதை கேட்டு நடக்க தயாரில்லை. சீனாவின் கட்டுப்பாட்டை வடகொரியா விரும்பவில்லை. மறுபுறம் வடகொரியாவின் தற்போது பதவியிலுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆட்சி இல்லாமல் போவதையும் சீனா விரும்பவில்லை.
ஏற்கனவே தென்கொரியாவில் சீனாவை குறிவைத்து அமெரிக்கா பெரும்படையை குவித்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடகொரியா தோற்கடிக்கப்பட்டு அமெரிக்க படை வடகொரியாவினுள் புகுமானால் அது சீனாவுக்கு பெரும் ஆபத்தாக முடியும். வடகொரியாவுடன் 1420 கி.மீ. நீண்ட எல்லையை கொண்டுள்ள சீனா அமெரிக்காவின் ஊடுருவலை எதிர்கொள்ளவேண்டி வரும்.
எனவே வடகொரியாவில் தற்போதுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆட்சி தொடர்வதையே சீனா விரும்புகிறது.
கொரியா 1910லிருந்து ஜப்பானின் காலனியாக இருந்தது. இதற்கு எதிராக கொரியா பலமுறை கிளர்ச்சிகளை செய்திருந்தது. இரண்டாவது உலகப்போரின்போது கொரிய மக்கள் ஜப்பானை எதிர்த்து போரிட்டனர். 1945ல் சோவியத் படைகளின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தேசிய விடுதலைப் படையினர் கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்தது சுதந்திர அரசைப் பிரகடனம் செய்தனர்.
தென் பகுதியில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர் லியூ வூன் கியூங் தலைமையிலான கம்யூனிஸ்ட் போராளிகள் கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர்.
அமெரிக்கா ஜப்பானின் காலனிகளைக் கைப்பற்றி தென்கொரியாவை ஆக்கிரமித்தது. கம்யூனிஸ்ட்களை தமது எதிரிகளாக கருதும் அமெரிக்க முதலாளித்துவ படையினர் தேசிய விடுதலை இயக்கத்தை அழித்தனர். தலைவர் லியூ வூன்கி யூங்கை படுகொலை செய்து அமெரிக்க பொம்மையாக தென்கொரிய அரசை நிறுவினார்கள்.
சர்வாதிகாரி சைங்மான் ரீ எனும் கம்யூனிச எதிர்ப்பாளர் அமெரிக்க பொம்மை ஆட்சிக்கு தலைமை தாங்கினார்.
வடகொரியா தென்கொரியா இரண்டுமே தமது ஆட்சியின் கீழ் முழு கொரியாவையும் கொண்டுவருவதற்காக முயற்சி செய்தன. ஆனால் அமெரிக்க பொம்மை ஆட்சி கொரியாவை பிளவுபடுத்துவதாக கூறி வடகொரியா 1950 ஜூன் 25ல் தென்கொரியா மீது படையெடுத்தது.
இந்த கொரிய போர் 1953 ஜூலை 27 வரை நடந்தது. வடகொரியாவுக்கு சோவியத் யூனியனும் தென்கொரியாவுக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தன. ஆனால் போரில் யாராலும் வெற்றிபெற முடியவில்லை.
1953 ஜூலை 27ல் அமெரிக்கா, வடகொரியா, சீனா இணைந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவந்தன.
இதனால் கொரியா இரு நாடுகளாக பிரிந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட சந்திக்க முடியாதபடி நிரந்தரமாக பிரிக்கப்பட்டார்கள்.
அதன் பின்னர் வடகொரியாவிடமிருந்து தென்கொரியாவை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு அமெரிக்க ராணுவம் தென் கொரியாவில் நிரந்தரமாகவே தங்கிவிட்டது.
பிரிக்கப்பட்ட கொரிய மக்களை சேர்க்கவேண்டும், இருகொரியாவையும் ஒன்றிணைக்கவேண்டும் என சீனா முன்வைத்த ஆலோசனையின்படி 2003ல் வடகொரியா, தென்கொரியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான் இணைந்து பேச்சு நடத்தின.
பொருளாதாரத் தடைகளை நீக்கி எரிபொருள் உதவியளித்தால் தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதாக வடகொரியா ஒப்புக்கொண்டது. ஜப்பானும், தென்கொரியாவும் அணு உலையை வடகொரியா மூடினால் அனல் மின்நிலையத்திற்கு எரிபொருளும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதித்தால் தானியமும் தருவதாக ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டன. ஜப்பானும், தென் கொரியாவும் அமெரிக்காவும் மின் நிலையத்தை கட்டுவதாக ஏற்றுக்கொண்டன. வடகொரியா அணு மின்நிலையத்தை மூடியது.
ஆனால் உதவி செய்வதாக கூறிய அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வடகொரியா ஏவுகணை ஆய்வில் ஈடுபட்டதாக கூறி மின் நிலையம் கட்டுவதை இடையில் நிறுத்திக்கொண்டன.
கொடுப்பதாக கூறிய தானியத்தையும் ஒழுங்காக கொடுக்கவில்லை. வடகொரியா மக்கள் மின் உற்பத்தி பாதிப்பாலும், உணவுப் பற்றாக் குறையாலும் பட்டினியால் வாடுவார்கள். எனவே அவர்கள் வடகொரிய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள், ஆட்சியை கவிழ்க்க வாய்ப்பு வரும் என அமெரிக்கா கணித்தது. ஆனால் சோவியத் யூனியன் காலத்து தன்னிறைவு திட்டம் வடகொரியாவில் இயங்கி இருந்ததால் மக்கள் சுய உற்பத்தியை பெருக்கினார்கள்.
வடகொரிய இராணுவ ஆட்சியாளர்கள் தமது பிடியை மக்கள் மீது மேலும் இறுக்கிக்கொண்டார்கள். சர்வாதிகார ஆட்சியாளர்கள் செழிப்பாக இருப்பதற்காக மக்கள் மேலும் கடுமையாக உழைக்கவேண்டி ஏற்பட்டது.
உலகின் கடற் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு தென் சீனக் கடல் வழியாகவே நடக்கிறது. தொலைத்தொடர்பு கேபிள்கள் நிறைந்த முக்கிய கடற்பகுதியாகவும் இராணுவ கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாகவும் சீனக் கடல் இருக்கிறது. இந்த தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இருநூறுக்கும் அதிகமான ஆளில்லா தீவுகள் உள்ளன. இப்பகுதியில் எண்ணெய் எரிவாயு வளம் அதிகமாக உள்ளத்துடன் கடலுணவு வளமும் நிறைந்துள்ளது. எனவே இத்தீவுகளுக்கு வடக்கேயுள்ள சீனா மற்றும் தைவான், கிழக்கேயுள்ள பிலிப்பைன்ஸ், மேற்கேயுள்ள வியட்நாம், மலேசியா, புருணை, தென் கிழக்கேயுள்ள இந்தோனேசியா என பல நாடுகள் உரிமை கோருகின்றன.
ஜப்பானும் சீனாவும் கிழக்கு சீனக் கடலில் உள்ள எரிவாயு வளமிக்க சென்காகூ தீவுகளுக்கு உரிமை கோரி வருகின்றன. சீனாவும் தைவானும் எண்ணெய் எரிவாயு வளமிக்க ஸ்பெரட்லி தீவுகள் தமது பாரம்பரிய பகுதி என்று ஜப்பானை எதிர்க்கின்றன. வியட்நாமும் தைவானும் பாரசெல்ஸ் தீவுகளில் சிலவற்றை உரிமை கோருகின்றன. இந்தோனேசியாவும் பிலிப்பைன்சும் புருணையும் இவ்வாறு சில தீவுகளுக்கு உரிமை கோருகின்றன.
இப்படி சிக்கல் நிறைந்த தென் சீன கடல் பகுதியில் அமெரிக்கா மூக்கை நுழைத்து நாடுகளுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது வடகொரியாவை மையமாக வைத்து தனது இராணுவ பலத்தை அதிகரிக்க மேலும் போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி லாபமடைய பார்க்கிறது அமேரிக்கா. அமெரிக்காவின் தந்திரங்களை ஈடுகொடுக்கக்கூடிய நாடு எதுவும் தற்போது இல்லை.
அமெரிக்கா தென்கொரியாவில் 12 இற்கும் மேலான மிக பெரிய படைத்தளங்களில் 30,000 இற்கு மேலான படையினரை வைத்துள்ளது. அங்கிருந்துகொண்டு சீனாவை கட்டுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏற்கனவே வடகொரியா, சீனாவிடமிருந்து பாதுகாப்பு தருவதாக கூறி அமெரிக்கா தென்கொரியா, தைவான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படைத்தளங்களை வைத்துள்ளது.
இந்த நாடுகளை பாவித்து அமெரிக்கா அடிக்கடி கூட்டு இராணுவ பயிற்சிகளை நடத்தி சீனாவையும் வடகொரியாவையும் சீண்டி வருகிறது. இதன்மூலம் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா பதட்டத்தை பயத்தையும் ஏற்படுத்தி ஆயுத விற்பனை செய்து கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது.
மலாக்கா நீரிணை வழியாகவே கப்பல் மூலம் சீனா தனது நாட்டுக்கான எண்ணெயை கொண்டு செல்ல முடியும். இந்த பிராந்தியத்தில் படைத்தளங்களை வைத்துக்கொண்டு சீனாவின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் வழியை நெருக்கடியில் வைத்திருக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது.
இரண்டு கொரியாவும் இணைந்தால் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் இருக்கமுடியாது. எனவே இரண்டு நாடுகளும் இணைவதையோ அங்கு அமைதி ஏற்படுவதையோ அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்கப் படைகள் தென்கொரியாவிலிருந்து 2012ல் வெளியேறவேண்டும் என்ற ஒப்பந்தம் இருந்தாலும் போர் பயத்தை காட்டியே அமெரிக்கா வெளியேறாமல் இருக்கிறது.
எனவே கொரிய பிரதேசம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ஆடுகளமாகவே இருக்கப்போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.
சர்வதேச சுயாதீன அமைப்பான WIN/Gallup International 2013ல் உலக அமைதிக்கு பங்கமான நாடு எது என்று உலக மக்களிடம் கணிப்பு நடத்தியது. அந்த கணிப்பில் அமெரிக்கா தான் உலக அமைதிக்கு பங்கமான நாடு என்று பெரும்பாலான உலக மக்கள் கூறியிருந்தார்கள். அந்த கருத்து கணிப்பு மிக சரியானதுதான் என்பதை 2017ம் ஆண்டிலும் அமெரிக்கா நிரூபித்து இருக்கிறது.
- என்.ஜீவேந்திரன்
0 comments:
Post a Comment