இலங்கை

ஏழைகளின் புதைகுழியான குப்பைமேடு



கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மலை சரிந்ததில் சுமார் 30 பேர் பலியாகியும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயும் உள்ளதால் அங்கு கொந்தளிப்பான சூழல் எழுந்துள்ளது. குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்கள் வலிமையடைந்துள்ளன.

கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி தமது போராட்டங்களை கண்டுகொள்ளவில்லை. இப்படி அழிவு ஏற்படக்கூடாது என்றுதான் நாங்கள் போராடினோம். நாங்கள் ஏழைகள் என்பதால் பணக்காரர்களுக்கான அரசாங்கம் எங்கள் உயிர்களை மதிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகிறார்கள்.

மீதொட்டமுல்லயில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் 300 அடி உயரத்திற்கு குப்பைகள் கொட்டப்பட்டிருந்தன. நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் தொன் குப்பை காட்டப்பட்டுள்ளது. 30 ஆயிரம் மக்கள் அந்த குப்பை மலையை சுற்றி வாழ்கின்றனர்.

கடந்த ஏப்ரல் 14ம் திகதி குப்பை மலை சரிந்ததில் 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 வீடுகள் முற்றாக அழிந்துள்ளான.

இந்த குப்பை மலையை அகற்றுமாறு கேட்டு நீண்டகாலமாக மக்கள் போராடி வந்துள்ளனர். இந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை மக்கள் போராட்டம் நடத்தியிருந்தார்கள். ஆனால் அரசியல்வாதிகள் வழமைபோல கண்டுகொள்ளவில்லை.

கடந்த ஆண்டு பிரித்தானியாவின் எஸ்.ஜெ.வி.வேர்ல்ட் நிறுவனத்துடன் இந்த குப்பை மேட்டை அகற்றும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கொழும்பு எம்பி எஸ்.மரிக்கார் தெரிவித்திருந்தார். மீத்தோட்டமுல்லையில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் குறித்த நிகழ்வில் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவும் எஸ்.ஜெ.வி.வேர்ல்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் இம்ரான் அலியும் கலந்துகொண்டிருந்தனர்.
5 வருடங்களுக்குள் இந்த குப்பை மேடு முற்றாக அகற்றப்படுமென அந்த நிகழ்வில் கூறப்பட்டிருந்தது.

தற்போது இந்த அழிவு ஏற்பட்டபின்னர் அங்கு சென்ற எஸ்.மரிக்காருக்கு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மீதொட்டமுல்ல குப்பை கொட்ட பொருத்தமான இடமல்ல என்று ஏற்கனவே தாங்கள் அரச அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தியிருந்ததாக  பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் ஏ.கே.கருணாரத்ன கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

''மீதொட்டமுல்லயில் குப்பை மேடு அமைந்துள்ள இடத்தின் அடித்தளம் பலமானதல்ல. குப்பை மேட்டின் உயரம் மிகவும் அதிகம். எனவே எந்த நேரத்திலும் குப்பை மேடு சரியலாம் என்று எச்சரிக்கை செய்திருந்தோம். எந்தவொரு ஆய்வுகளும் செய்யப்படாமல் இந்த இடத்தில் குப்பை கொட்டப்பட்டுள்ளது'' என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

மீதொட்டமுல்லயில் குப்பை கொட்டப்பட்ட இடம் முன்னர் வயல் நிலமாக இருந்துள்ளது. 1989ல் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த விளைநிலம் பாதிக்கப்பட்டது. பின்னர் முல்லேரியா நகரசபை இந்த இடத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்றியது. 2008ல் மகிந்த ராஜபக்சவின் கட்டளைக்கமைய கொழும்பு புளுமென்டலில் இருந்த குப்பை மலை இங்கு மாற்றப்பட்டது. இரண்டு ஏக்கரில் மட்டுமே குப்பை கொட்ட அனுமதிக்கப்பட்டிருந்தாலும் 20 ஏக்கருக்கு குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சி காலத்தில் இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தாலும் கூட தொடர்ந்து இங்கு குப்பை கொட்டப்பட்டுள்ளது.

பல உயிர்களை பழிவாங்கிவிட்ட இந்த குப்பை மேட்டு விவகாரம் ஏற்கனவே பெரும் நெருக்கடியில் உள்ள தற்போதைய அரசாங்கத்திற்கு மேலும் சிக்கலை கொண்டுவந்துள்ளது.


0 comments:

Post a Comment

Powered by Blogger.