டெல்லியில் வறட்சி நிவாரணம் கேட்டு தமிழக விவசாயிகள் போராடிவருகிறார்கள். தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுமாறு மக்கள் போராடி வருகிறார்கள். வறட்சியால் தண்ணீர் இன்றி தமிழகம் தவித்து வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீருக்காக மக்கள் போராடிவருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து விவசாயிகளும் மாணவர்களும் போராடி வருகிறார்கள்.
இப்படி உரிமைகளுக்காக வாழ்வுக்காக தமிழக மக்கள் போராடி வரும் நிலையில் தமிழக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கேவலமாக இருக்கின்றன. மக்களது நலனுக்காக செயல்படவேண்டிய தமிழக அதிமுக அரசாங்கம் முடங்கிப்போய்க் கிடக்கிறது.
மக்கள் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் பற்றி பேச வேண்டிய செய்தித்தலைப்புகள், அதிமுக.வின் எந்த அணியில் யார் இருக்கிறார்கள், ஊழல் பணத்தை வருமானவரி சோதனைகளில் இருந்து மறைத்து எப்படி பதுக்கப்போகிறார்கள், யார் எந்த அணிக்கு தாவப்போகிறார்கள் என்றுதான் பேசுகின்றன.
பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி அணியும் ஒன்று சேர்வதற்கான பேச்சுக்கள் நடந்து வருகின்றன.
இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை. சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இரு அணிகள் இணைப்புக்கு சாத்தியமில்லை. கழகம் எந்த குடும்பத்தின் பிடியிலும் செல்லக்கூடாது என்று எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நிலைப்பாடாக இருந்தது.
அரசியலில் ஈடுபடமாட்டேன் என எழுதிக் கொடுத்துவிட்டுதான் சசிகலா கட்சியில் இணைந்தார். சசிகலா பொதுச்செயலாளர் ஆனது சட்டவிதிகள் படி செல்லாது.
கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்திடம் சென்று விடக்கூடாது. ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இரு அணிகளும் இணைந்தாலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் குறித்து விசாரிக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும்வரை ஓயமாட்டோம்'' என்று கூறியுள்ளார்.
அவர் தப்பித் தவறிக்கூட தமிழக மக்களின் பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று பேசவில்லை. அவருக்கு முக்கிய விடயமாக இருப்பது ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிப்பதும், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதும்தான்.
மறுபுறம் டிடிவி.தினகரன் ஏராளமான சொந்த பிரச்சனைகளில் சிக்கி அவற்றை தீர்ப்பது குறித்தே கவனம் செலுத்துகிறார். இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டிலிருந்து எப்படி தப்புவது என்று வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறார். அதோடு தன்னை அதிமுகவிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை எப்படி முறியடிப்பது, எடப்பாடி பன்னீர் தரப்பின் இணைப்பை எப்படி தடுப்பது, பாஜக.வை எப்படி சமாளிப்பது என்று தனது ஆதரவாளர்களுடன் பேசிவருகிறார். அவருக்கு தமிழக மக்கள் பிரச்சனைகள் எல்லாம் இப்போது முக்கியமல்ல.
தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நேரம் எல்லாம் முதல்வர் நாற்காலி எந்த நிமிடத்திலும் பறிக்கப்படலாம் என்ற பயத்திலேயே கழிகிறது. முதல்வர் நாற்காலியை பாதுகாக்க பன்னீருடன் பேசுவதா, பாஜகவுடன் பேசுவதா என்று குழம்பிப்போயிருக்கிறார். பன்னீருடன் மறைமுகமாக பேச்சும் நடத்துகிறார். இந்த சிக்கல்களுக்கிடையே தனது அணி எம்.எல்.ஏ.களை பாதுகாப்பதிலும் அவரது கவனம் இருக்கிறது.
தனது முதல்வர் நாற்காலியை பாதுகாப்பதற்கே நேரமில்லாமல் தவிக்கும் பழனிசாமிக்கு தமிழக மக்கள் பிரச்சனை குறித்தெல்லாம் சிந்திக்கக்கூட நேரமில்லை.
இதற்கிடையே அதிமுக எம்.எல்.ஏ.களுக்கு எந்தப்பக்கம் தாவினால் எவ்வளவு பணம் கிடைக்கும், என்னென்ன சலுகைகள் கிடைக்கும், எந்தெந்த ஒப்பந்த கமிஷன் கிடைக்கும் என்று கணக்கு போடுவதே முழுநேர வேலையாக இருக்கிறது. கட்சிக்குள் நடக்கும் அணிச் சண்டையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு லாபத்தையும் அள்ளிவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு மக்களது பிரச்சனை எல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
பாமக போன்ற கட்சிகள் தமிழக அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோருகின்றன.
தமிழகத்தில் காலூன்ற காத்திருக்கும் பாஜக, தமிழக அரசாங்கத்தின் தற்போதையை பலவீனத்தை பயன்படுத்தி வருகிறது.
ஆட்சி எப்போது கவிழும், எப்போது நமது ஆட்சியை அமைக்கலாம் என்பது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நகர்வாக இருக்கிறது.
''தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. மக்களும், மாணவர்களும், தாய்மார்களும் தன்னெழுச்சியாக மதுக்கடைகளை மூடக்கோரி போராட்டம், குடிநீர் வழங்கக்கோரி போராட்டம், தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களை காப்பாற்றக்கோரி போராட்டம் என்று தமிழகமே போராட்டக் களமாக மாறி வருகிறது. அரசியல் சட்டப்படி கடமையாற்ற வேண்டிய அமைச்சர்களும், முதலமைச்சரும் தங்கள் கடமையை மறந்து உட்கட்சி பிரச்சினையில் உறைந்து போயிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது வேதனையளிக்கிறது'' என்று மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இப்படி பல்வேறு பிரச்சனைகளால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சமயத்தில் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசாங்கம் பலவீனமாக இருக்கிறது. பக்கபலமாக இருக்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் பேராசை பிடித்து அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment