அரசியல்

அமெரிக்க ஏவுகணை தாக்குதல் சர்வதேச சட்டத்திற்கு விரோதமானது -ரஷ்யா



அமெரிக்கா சிரியா மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்களை ரஷ்ய அதிபர் புட்டின் வன்மையாக கண்டித்துள்ளார்.
இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் கண்டிக்கப்படவேண்டியது என்று புட்டின் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறியது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என புட்டின் தெரிவித்ததாக அவரது பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கொவ் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலுக்கு சிரிய அரசாங்கத்தையும் அதிபர் ஆசாத்தையும் குற்றம் சாட்டியிருந்தார். ஐ.நா.சபையில் இந்த தாக்குதல் தொடர்பில் ஐ.நா நடவடிக்கை எடுக்காது விட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க பிரதிநிதி நிக்கி காலே எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் தான் சிரியா மீது அமெரிக்கா 60 இற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை பார்க்கும்போது இந்த தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டதை போன்று தோன்றுவதாக ரஷ்யா சந்தேகம் தெரிவித்துள்ளது.

சிரியா மீது இப்படி ஒரு தாக்குதல் நடத்தவேண்டும் என்று முற்கூட்டியே திட்டமிட்டு அதன் ஒரு பகுதியாக இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது.

சிரியா மீதான மேற்குலகின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ளது.
ஐ.நா. விசேட குழுவை அனுப்பி இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே  யார் தாக்குதலை செய்தார்கள் என்று முடிவெடுக்க வேண்டும் என்று ரஷ்யா கூறுகிறது.
மேலும் சிரியாவுக்கு தொடர்ந்தும் நாங்கள் ஆதரவளிப்போம் என்று ரஷ்யா உறுதியாக தெரிவித்துள்ளது.

சிரியா பொதுமக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன. இந்த தாக்குதலில் 11 சிறார்கள் உட்பட 70 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என்று இப்போது உறுதியாக கூறமுடியாது என சிரியாவுக்கான ஐ.நா.விசேட அணி யை சேர்ந்த ஸ்டெபான் டீ மிஸ்டுரா கூறியுள்ளார்.

ஐ.நா. வெளியுறவு கொள்கை பிரிவின் தலைவரும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலை யார் செய்தார்கள் என்பதை உறுதியாக சொல்ல போதுமான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் முதல் சந்தேகப்பார்வை சிரிய படைகள் மீதே விழுந்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்க தலைமையிலான மேற்குலக ஊடகங்கள் சிரியாவுக்கு எதிராக சரியாக பயன்படுத்துகின்றன.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிராக நீண்டகால அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
சிரியா நாடானது நீண்ட காலமாக ரஷ்ய சார்பு நாடாக இருக்கிறது. எனவேதான் அமெரிக்கா சிரியாவில் உள்நாட்டு போரை ஏற்படுத்தி சீரழித்து வருகிறது என விமர்சனங்கள் உள்ளன.

ஆனால் வழமைபோலவே எமது  தமிழ் ஊடகங்கள் அமெரிக்க - மேற்குலகு பிரச்சார செய்திகளை அப்படியே கிளிப்பிள்ளைகள் போல ஒப்பித்து வருகின்றன.









0 comments:

Post a Comment

Powered by Blogger.