அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'சித்தப்பிரமை மற்றும் மருட்சி' (paranoid and delusional) எனும் மனநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் பிரபல உளவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த செய்தியை பிரித்தானியாவிலிருந்து வெளியாகும் இண்டிபெண்டன்ட், டெய்லி மெய்ல் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூ ஹாவெனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல உளவியல் மருத்துவர்கள் நேற்று பங்கேற்றுள்ளனர்.
பிரபல உளவியல் மருத்துவர் டாக்டர் ஜான் கார்னர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது
''அமெரிக்க குடிமக்களுக்கு அதிபர் டிரம்பின் செயல்பாடுகள் தொடர்பான உண்மையை தெரிவிக்க உளவியல் மருத்துவர்களான எங்களுக்கு தார்மீக கடமையும் உள்ளது.
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் அவரது அன்றாட செயல்பாடுகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இச்செயல்கள் மூலம் டிரம்ப் ஆபத்தான மன நோயால் பாதிப்படைந்துள்ளது தெளிவாக தெரிகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் அவர் அமெரிக்காவை தலைமையேற்று நடத்துவது மிகவும் ஆபத்தானது.
டிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் பெருமளவில் பாதிக்கும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற உளவியல் மருத்துவர் பண்டி லீ பேசும்போது ''டிரம்பிற்கு மனநோய் உள்ளதை உளவியல் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வீட்டின் அறைக்குள் யானையொன்று இருப்பதை போன்ற ஒரு சூழலே தற்போது ஏற்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் உளநல மருத்துவரும் பேராசிரியருமான ஜேம்ஸ் கில்லிகன் கூறும்போது ''மிக பயங்கரமான நபர்கள் சமூகத்தில் உள்ளனர். நான் சிறைச்சாலைகளில் உள்ள பல மோசமான மனநோய் உள்ளவர்களுடன் நீண்டகாலம் பணியாற்றியுள்ளேன். என்னால் மனநோய் உள்ளவர்களை உடனடியாக கண்டுகொள்ளமுடியும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மனநோயால் பிடிக்கப்பட்டுள்ளார்'' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட உளவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ஆபத்தான மனநோய் இருப்பதால் அவர் அமெரிக்காவிற்கு தலைமைதாங்க முடியாது என்று கூட்டாக அறிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment